search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "occupation houses demolition"

    ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி, பள்ளிபடை, சி.கொத்தங்குடி கிராம ஊராட்சி ஆகிய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் தில்லையம்மன் ஓடை செல்கிறது.

    இந்த வழித்தடங்களில் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை காலிசெய்யுமாறு பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1 மாதத்துக்கு முன்பு நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

    ஆக்கிரமிப்பு வீடுகளை காலிசெய்யவில்லை என்றால் அவைகள் இடித்து அகற்றப்படும் என ஒலி பெருக்கி மூலம், எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு வீடுகளை பொதுமக்கள் காலிசெய்யவில்லை. இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் சிதம்பரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்கு இன்று வந்தனர்.

    இதையொட்டி அங்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் உத்தரவின் படி 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்க இருந்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. அந்த பகுதி பொது மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    நாங்கள் எம்.எல்.ஏ.வை சந்தித்து பேசப் போகிறோம் என்று கூறி பொதுமக்கள் சிதம்பரம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை நோக்கி சென்றனர். அங்கிருந்த பாண்டியன் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரிடம் நாங்கள் வீடுகளை காலி செய்யமாட்டோம், எங்கள் வீடுகளை இடிக்கக்கூடாது என வலியுறுத்தினர்.

    இதையடுத்து பொது மக்களிடம் பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
    ×