என் மலர்
நீங்கள் தேடியது "Occupy"
- உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.
- வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூா் கல்லூரி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளா் அலுவலகத்தில் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டப்பொறியாளா் ரமேஷ்கண்ணா தலைமை வகித்தாா்.
இதில், தி கன்ஸ்யூமா்ஸ் கோ் அசோசியேஷன் தலைவா் காதா்பாட்ஷா பேசியதாவது:-
திருப்பூா் மாநகரில் சாலை பராமரிப்புக்காகத் தோண்டப்படும் குழிகள் இருப்பதை எச்சரிக்கை செய்யும் விதமாக ஸ்டிக்கா்கள் ஒட்டவேண்டும். அவிநாசி தோ் வரும் நெடுஞ்சாலைப் பகுதி மிகவும் சிதிலமடைந்துள்ளது. ஆகவே, உரிய ஆய்வு மேற்கொண்டு இந்தப் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்றாா்.
நல்லூா் நுகா்வோா் நலமன்றத் தலைவா் சண்முகசுந்தரம் பேசியதாவது:-
காங்கயம் சாலையில் டிஎஸ்கே மருத்துவமனை பகுதியில் குடிநீா் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலை மூடப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் பழுதடைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதே போல, திருப்பூா் ெரயில் நிலையம் முதல் வஞ்சிப்பாளையம் வரை அனைத்து சாலைகளும் மிகவும் பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கு காவல் நிலையம் வரை நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. ஆகவே, ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை அகலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் (சட்ட விழிப்புணா்வு அணி) மாநிலச் செயலாளா் ஆா்.சதீஷ்குமாா் பேசியதாவது:-
திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளில் விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. குடிநீா் வடிகால் வாரியம் மற்றும் அது தொடா்புடைய ஒப்பந்ததாரா்களால் பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்படுகிறது. ஆனால் முறையாக மறுசீரமைப்பு செய்வதில்லை. ஆகவே உரிய கவனம் செலுத்தி அனைத்து சாலைகளும் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா். கூட்டத்தில் உதவி கோட்ட பொறியாளா்கள் உள்ளிட்ட துறை சாா்ந்த அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் வழங்கல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு–மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசு–தாரர்கள் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற மன்னார்குடி வட்டம், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர் ராச கணேசனை பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இராமநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் மயான சாலை நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
- மேற்படி சாலையை தனி நபர் விலைக்கு வாங்கி அந்த மயான பாதையை வழிமறித்து கம்பிவேலி அமைத்துள்ளார்.
அவினாசி:
அவினாசி அருகே மயான சாலையை மீட்டுத்தர வேண்டி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் இராமநாதாரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவினாசி தாலுகா அலுவல்கத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-இராமநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் மயான சாலை நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. மேற்படி சாலையை தனி நபர் விலைக்கு வாங்கி அந்த மயான பாதையை வழிமறித்து கம்பிவேலி அமைத்துள்ளார். இதனால மயானத்திற்கு செல்லும் வழியில்லாத நிலை ஆகிவிட்டது. எனவே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மயான சாலையை மீட்டுத் தரவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் இடத்தை காலி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- கட்டிடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர் பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக மீட்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
அவர்களது உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், சர்வேயர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது திருப்பூர் ஜம்மனை ஓடை பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள், பனியன் நிறுவனங்கள், டையிங் நிறுவனம், தங்கும் விடுதிகள், பிரிண்டிங் பிரஸ் குடோன் என 25க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் இடத்தை உடனடியாக காலி செய்யும்படி நோட்டீஸ் வழங்கினர். 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் இடத்தை காலி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் இன்று காலை மாநகராட்சி உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி பொறியாளர் கோவிந்த பிரபாகர், திருப்பூர் வடக்கு தாசில்தார் கோவிந்தராஜன் மற்றும் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதிரடியாக இடித்தனர்.
இதையடுத்து கட்டிடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் அவசர அவசரமாக வாகனங்களில் ஏற்றி மாற்று இடத்திற்கு கொண்டு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஜம்மனை ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் 25 உரிமையாளர்களுக்கு சொந்தமான 3 மற்றும் 4 மாடி கட்டிடங்கள் என சுமார் ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றபட்டது
- திருக்கோயிலுக்கு சொந்தமான 1.60 செண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை மேற்கு புதுக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 1.60 செண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் உத்திரவின்பேரில் தாசில்தார் பிரகாசம் தலைமையில் கோவில் ஆய்வாளர் தமிழரசி, வக்கீல் ஆனந்தராஜூ மற்றும் வி.ஏ.ஓ., கோவில் பணியாளர்கள் முன்னிலையில் சர்வேயர் கொண்டு கோயில் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதினம் செய்யப்பட்டது. அப்போது புதுக்குறிச்சி கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.
- சில ஆண்டுகள் மட்டுமே நாங்கள் அதில் விவசாயம் செய்தோம்.
- அதன் பிறகு தனி நபர் ஒருவர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று கண்டிதன்பட்டு அருகே உள்ள உச்சுமான் சோலை கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அதிகாரி ஏசுதாஸ் தலைமையில் பொதுமக்கள் வந்தனர்.
பின்னர் அவர்கள் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கண்டிதன்பட்டு, காட்டூர், தென்னக்குடி, பரவக்கோட்டை உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 24 ஏழை மக்கள், மொழிப்போர் தியாகிகள், முன்னாள் ராணுவத்திற்கு உச்சுமான்சோலை கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தலா 1 ஏக்கர் நிலம் பட்டாவுடன் அரசு சார்பில் வழங்கப்பட்டது.
சில ஆண்டுகள் மட்டுமே நாங்கள் அதில் விவசாயம் செய்தோம்.அதன் பிறகு தனி நபர் ஒருவர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தார்.பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
அவரிடம் இது குறித்து கேட்டதற்கு சரியான பதில் இல்லை.எனவே அந்த நபரிடமிருந்து எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆலங்குடி அருகே 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
- சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும், அதன் தொடர்புடைய வருவாய் துறை ஆலங்குடி தாசில்தாருக்கும் உரிய பரிசீலனை செய்து இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.வி கோட்டை ஊராட்சி உருமநாதபுரம் கிராமம் பஸ் ஸ்டாப் அருகில் 6.76 ஹெக்டேர் அதாவது 17 ஏக்கர் வருவாய்த்துறை கணக்கில் கோவில் இடமாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த தவளைப்பள்ளம், பாத்திமா நகர், உருமநாதபுரம், அரசடிப்பட்டி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் ஆகிய கிராமத்தில் உள்ள நபர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மழவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த மழவராயர் சமூக அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் தெட்சிணாமூர்த்தி மகன் மீனாட்சி சுந்தரம் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த இடம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி 2021 ல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை பரிசிலினை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும், அதன் தொடர்புடைய வருவாய் துறை ஆலங்குடி தாசில்தாருக்கும் உரிய பரிசீலனை செய்து இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு கணக்கில் கோவில் இடம் என்றும் அறக்கட்டளை சார்பில் பெரிய கோட்டை முனீஸ்வரர் மற்றும் பன்னீர் கோட்டை பரிவார தெய்வங்களுக்கான இடம் என உயர்நீதிமன்றத்தில் வழக்காடியதாக கூறப்படுகிறது.
ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி தலைமையில் வருவாய் துறையினர் ஈடுபட்டு 17 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றினர். இந்நிலையில் ஒரு கிணற்றில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் குடிநீர் எடுத்துச் செல்லப்படுவதாக கூறினர். அதனால் அந்த கிணறு அகற்றப்படவில்லை. வருவாய்த்துறை சார்பில் ஆலங்குடி வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணன், சர்வேயர் கோபி கே.வி.கோட்டை கிராம நிர்வாக அலுவலர் காமாட்சி, உதவியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா தலைமையிலான 10-க்கு மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஜவஹர் பஜாரில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
- பஜார் சாலையில் வர்த்தக நிறுவனங்களை சார்ந்தவர்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
கரூர்:
கரூர் நகரத்தில், ஜவஹர் பஜார், தாலுகா அலுவலகம், கிளை சிறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், வங்கிகள், நகைக்கடை, ஜவுளி கடை, லாட்ஜ்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால், ஜவஹர் பஜாரில் தினமும் இரவு 11மணி வரை போக்குவரத்து இருக்கும். பஜார் சாலையில் வர்த்தக நிறுவனங்களை சார்ந்தவர்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குறிப்பாக, மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நடை பாதையை ஆக்கிரமித்துள்ளதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தில் தொடர்ந்து புகார்கள் சென்றன. அதன்படி, மாநகராட்சி ஊழியர்கள், ஜவஹர் பஜார் சாலை நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள் உட்பட அனைத்து பொருட்களும் அப்புறப்படு த்தப்பட்டன.
- கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
- சம்பந்தப்பட்ட இடத்தில் தனி நபர்கள் இரவோடு இரவாக வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை தெற்கு புற வழிச்சாலை மேலப்பாளையம் குறிச்சி சந்திப்பு பகுதியில் 20 சென்ட் இடம் உள்ளது. இதனை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக தகவல் வந்தது.
ஆக்கிரமிப்பு
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதில் தங்கள் பகுதியில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த இடத்தை மீட்டு தர வேண்டும் என கூறி இருந்த னர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.
சாலை மறியல்
இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட இடத்தில் தனி நபர்கள் வேலி அமைத்ததாக கூறப்படு கிறது. இதை அறிந்த அப்பகுதியினர் தெற்கு புறவழிச்சாலையில் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து சம்பந்தப் பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது அது கோவிலுக்கு சொந்த மான இடம் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வேலி அமைத்த வர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என துணை கமிஷனர் சீனி வாசன் உறுதி அளித்தார்.இதைத்தொடர்ந்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கண்ணாடி உடைப்பு
இதற்கிடையே மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 லோடு ஆட்டோக்களின் கண்ணாடி கள் உடைக்கப்பட்டிருந்தது.
இதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடைத் தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும் போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- முதல்கட்டமாக 2.7 கி.மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்.
- பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அதன் கரைகளை விரிவாக்கம் செய்து அதன் கரையோரங்களை அழகுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
அடையாறில் கூவம் ஆறு கலக்கும் முகத்துவார பகுதியில் இருந்து முட்டுக்காடு படகு இல்லம் வரை சுமார் 22 கி.மீட்டர் தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் கரைகளை ஆக்கிரமித்து இரு புறமும் ஏராளமான வீடுகள், கட்டுமானங்கள் உள்ளன. இதனால் கால்வாயின் அகலம் சுருங்கி வந்தது. மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதி மன்றம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற சம்பந்தப் பட்ட அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அதன் கரைகளை விரிவாக்கம் செய்து அதன் கரையோரங்களை அழகுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இதில் நீர்வளத்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பக்கிங்காம் கால்வாயில் முதல்கட்டமாக 2.7 கி.மீட்டர் தூரத்துக்கு கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற உள்ளது.
கூவம் ஆற்றின் முகத்துவார பகுதியில் இருந்து ஆர்.கே.சாலை பாலம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட உள்ளது. இதனால் சுமார் 1,200 குடும்பத்தினர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து அவர்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் உள்ள முக்கிய நீர்வழிப் பாதையான பக்கிங்காம் கால்வாயை மீட்டு அதன் கட்டமைப்பை மேம்படுத்தி கரையோரங்களை அழகுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கால்வாயை பொழுது போக்கு இடமாக மாற்றவும் அரசு முடிவு செய்து இருக்கிறது.
இதைத்தொடர்ந்து பங்கிங்காம் கால்வாய் கரையோரத்தில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. முதல் கட்டமாக, கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து ஆர்.கே.சாலை பாலம் வரை 2.7 கி.மீ. தூரத்துக்கு மறு சீரமைக்கப்பட உள்ளது. இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் முக்கியமாக கால்வாயின் எல்லையை நிர்ணயிப்பதும், கரைகளை பலப்படுத்துவதும் ஆகும்.
இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள திரவியவதி நதியின் மறுசீரமைப்புத் திட்டம், ஒடிசாவில் உள்ள தாலடண்டா கால்வாய் மறு சீரமைப்பு மற்றும் குஜராத்தில் உள்ள சபர்மதி நதி முகப்பு மேம்பாடு போன்ற வெற்றிகரமான மறுசீரமைப்பு திட்டங்களை நீர்வளத்துறை யினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
அங்கு செயல்படுத்தப் பட்டதை போல் பங்கிங்காம் கால்வாயிலும் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் பல்வேறு உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கூடுதலாக, கால்வாய் பகுதியில் கழிவுநீர் வெளி யேறும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. பக்கிங்காம் கால்வாயில் உள்நாட்டு நீர்வழிப் பாதையை கடந்த 2016-ம் ஆண்டு இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் கைவிட்டது. பக்கிங்காம் கால்வாயின் மறுசீரமைப்பு, பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும். இதனால் நீரின் தரம் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றம் அடையும். மறுசீரமைப்பு திட்டம் இன்னும் திட்டமிடுதல் கட்டத்தில் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.
- அத்துமீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
ஒரத்தநாடு தாலுகா கருக்காடிப்பட்டி ஊராட்சி அம்மையன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் சுமார் 20 -க்கும் மேற்பட்ட விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு கடந்த 2000-ம் வருடம் தமிழக அரசால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டன.
இந்த மனைகளில் ஓட்டு மற்றும் குடிசை வீடுகளை கட்டி குடியிருந்து வருகிறோம்.மேலும் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, மின்சாரக் கட்டணங்கள் கட்டி அதற்கான ரசீதும் சட்டப்படி பெற்று உள்ளோம்.
இந்த நிலையில் ஒரு நபர், அரசு வழங்கிய அந்த இடத்திலும் வீட்டிற்குள்ளும் அத்து மீறி நுழைந்து கற்களை ஊன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
அவரிடம் கேட்டதற்கு இது எனது இடம் என்று கூறி வருகிறார். எனவே அந்த நபரிடமிருந்து , இடங்களை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேளாண் அதிகாரிகள் புறக்கணிப்பது குறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்படும்
- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ்பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
மோகன்தாஸ்:-
கிடாரங்கொண்டான்- தலையுடையவர் கோயில்பத்து, பொன்செய்-முடிகண்டநல்லூர் ஆகிய பகுதியில் இணைப்பு பாலம் வேண்டும்.
நாச்சிகட்டளை -தலைச்சங்காடு செல்லும் சாலையில் விவசாயிகள், பொதுமக்களுக்கு இடையூறாக பாதிப்புகளை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
ராஜ்கண்ணன்:-
ஆக்கூரில் பிடாரி குளத்தில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.
புங்கையன் தோப்பு பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்.
சுப்பிரமணியன்:-
கஞ்சாநகரம் அருகே மங்கனூர் கிராமத்தில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும்.
சக்கரபாணி:-
கருவாழக்கரை மாரியம்மன் கோயில் பகுதியில் வடிகால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மருதூர் அரசு பள்ளி நடுநிலைப் பள்ளி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.
ரஜினி:-
1-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட குளங்களை தூர்வார வேண்டும். சேமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
தேவிகா:-
இலுப்பூர் ஊராட்சி எரவாஞ்சேரி- மாரியம்மன் கோயில் சாலையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
லெனின் தாஸ்:-
காழியப்பநல்லூர் ஊராட்சியில் நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவற்றை தனிநபர் ஆக்கிரமித்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.மணல்மேடு ஊராட்சியில் காடுவெட்டி, நடுவலூர், நட்சத்திரமாலை ஆகிய கிராமங்களுக்கு சுடுகாடு சாலை அமைத்து தரவேண்டும்.
ஜெயந்தி:-
தில்லையாடி-திருவிடைக்கழி இடையே பூச்சாத்தனூர் பகுதியில் உள்ள சேதமடைந்த பாலத்தை புதிதாக கட்டித் தர வேண்டும்.
ஊராட்சியில் 100 நாள் பணியில் ஈடுபடும் மக்களுக்கு விடுபடாமல் சம்பளம் வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு கூட்டத்துக்கும் முன்கூட்டியே அழைப்புகள் விடுக்கப்படுகிறது.
அவர்கள் இதுவரை எதிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருவதை கண்டித்து மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் அனுப்பப்படும்.
உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பாக உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஒன்றிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார், உள்ளிட்ட யூனியன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.