search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OFFICER ARRESTED"

    • குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வேங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது.
    • தற்போது திருப்பணி நடத்த முடிவு செய்து, அதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் உதவியையும் பெற்றுள்ளனர்.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வேங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் தீர்த்தம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் குணமடைவதாக ஐதீகம். இக்கோவிலின் பரம்பரை நிர்வாகியாக பிச்சுமணி என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதற்கிடையே கோவிலில் திருப்பணிகளை நிறைவேற்றுவதற்காக மூர்த்தீஸ்வரி என்ற ஒரு பெண் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது திருப்பணி நடத்த முடிவு செய்து, அதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் உதவியையும் பெற்றுள்ளனர். இருந்தபோதிலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாநில அளவிலான நிபுணர் குழு கமிட்டியில், ஆய்வறிக்கை ஒன்றையும் பெற்று, அதை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி கடந்த ஜூன் மாதம், குணசீலம் கோவிலை நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். ஆனால் அதற்கான அறிக்கை வழங்கப்படவில்லை. இதுபற்றி கோவில் நிர்வாகத்தினர் அந்த குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அந்த குழுவில் இடம்பெற்றிருந்த பெண் அதிகாரியான மூர்த்தீஸ்வரி கோவில் அறங்காவலரிடம் அறிக்கை வழங்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அறங்காவலர் அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என்று கூறியுள்ளார். அதற்கு மூர்த்தீஸ்வரி, 5 லட்ச ரூபாய் கொடுங்கள் போதும் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, முதலில் ரூ.1 லட்சம் பணம் தருவதாகவும், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு தனியார் விடுதியில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் பிச்சுமணி, மூர்த்தீஸ்வரியிடம் கூறியுள்ளார். அதன்படி பணத்தை வாங்கவந்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மூர்த்தீஸ்வரியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை திருச்சி காஜாமலையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடததினர். அப்போதுதான், இவர் அதிகாரியாக பணியாற்றிய பல கோவில்களில் திருப்பணி வேலைகள் நடக்க அரசின் நிதியுதவியை பெற்றுத்தருவதற்கான அறிக்கை வழங்க லஞ்சம் கேட்ட தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

    மேலும் அவரது காரை சோதனை செய்த போலீசார் அதில் மறைத்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த பணம் யாரிடம் இருந்து பெறப்பட்டது என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வரும் பெண் அதிகாரியான மூர்த்தீஸ்வரி லஞ்சம் வாங்கி சிக்கியது அறநிலையத்துறையினரிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ×