search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "online fraud"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார்
    • மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறினார்.

    இந்தியா முழுமைக்கும் செல்போன் போலி அழைப்புகள் மூலம் அரங்கேறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் கவனமாக இருக்க எவ்வாறு அறிவுறுத்தினாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    இதுபோன்ற சைபர் மோசடிகளை செய்வதையே வேலைவாய்ப்பாகச் சிலர் கருதி முழு நேரமும் அதில் ஈடுபட்டு வருகின்றனர். நான் போலீஸ் அதிகாரி பேசுகிறேன், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, பணம் கொடுத்தால் உங்களை இந்த சிக்கலில் இருந்து காப்பற்றுகிறேன் என்று கூறியும் மோசடிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் வழக்கம்போல போலீஸ் உடை அணிந்து வீடியோ கால் மூலம் மோசடி செய்யலாம் என்று நினைத்த நபர் தவறுதலாக மோசடிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட கேரள சைபர் செல் அலுவலகத்துக்கே வீடியோ கால் போட்டுள்ளார். திருச்சூர் கேரள சைபர் செல் அதிகாரி ஒருவருக்கு வீடியோ கால் வந்துள்ளது.

    அதை அவர் தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார். எதிர் பக்கம் இருந்த போலீஸ் உடையணிந்த மோசடி காரர் வழக்கம்போல பேசியுள்ளார். தனது கேமரா வேலை செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார், ஆனால் மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறியதால் சைபர் போலீஸ் தனது கேமராவை ஆன் செய்தார்.

    அதன் பின்னரே தான் வசமாக சிக்கியதை மோசடிக்காரர் உணர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சைபர் போலீஸ், இந்த வேலையை செய்யாதீர்கள், என்னிடம் உங்களின் முகவரி, நீங்கள் உள்ள இடம் என அனைத்தும் தெரியும், இது சைபர் செல், இந்த [மோசடி] வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்வதே உங்களுக்கு நல்லது என்று எச்சரித்துள்ளார். அவர் பேசியது அனைத்தும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட்ட நிலையில் அதை திருச்சூர் சைபர் போலீஸ் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 1,77,000 வியூஸ்களை கடந்து வைரலாகி வருகிறது.

     

    • பாதிக்கப்பட்ட நபர் கார் ரெண்டல் இணையதளங்களை கூகுளில் தேடியுள்ளார்.
    • சக்தி கார் ரெண்டல் இணையதளத்தின் தொலைபேசி எண்ணிற்கு அவர் அழைத்துள்ளார்.

    கர்நாடகாவில் போலியான கார் புக்கிங் இணையதளத்தில் கார் புக் செய்த நபர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 4.1 லட்சத்தை இழந்துள்ளார்.

    மேற்குவங்கத்தை சேர்ந்த நபர் ஒருவர் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கார் ரெண்டல் இணையதளங்களை கூகுளில் தேடியுள்ளார். அப்போது அவரின் கண்ணில் தென்பட்ட சக்தி கார் ரெண்டல் இணையதளத்தின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்துள்ளார்.

    அப்போது அவரிடம் பேசிய நபர், எங்கள் இணையதளத்தில் 150 ரூபாய் செலுத்தி காரை புக்கிங் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    அவரும் தனது டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை உபயோகித்து பணம் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணம் செலுத்தமுடியவில்லை. அப்போது தான் அவரது வங்கிக்கணக்கில் இருந்து லட்சக்கணக்கான பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு வங்கியில் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

    எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டில் இருந்து ரூ. 3.3 லட்சமும் கனரா வங்கி டெபிட் கார்டில் இருந்து 80,056 ரூபாயும் என மொத்தமாக 4.1 லட்சம் ரூபாயை அவர் இழந்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள உடுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நடப்பாண்டில் 4 மாதங்களில் 7.40 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளது.
    • பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக எச்சரித்தும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


    வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும், வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்றும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும், போதை பொருள் அடங்கிய பார்சல் வந்து இருப்பதா கவும் கூறி பல வகைகளில் சைபர் கிரைம் கும்பல் அப்பாவி மக்களிடம் பணத்தை அபேஸ் செய்து வருகின்றன.

    இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் ஏமாந்து பணத்தை இழந்து வருகின்றனர். ஏமாற்றுபவர்கள் புது வகையான டெக்னிக்கல் யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடு கின்றனர்.

    சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது.

    எந்த புலனாய்வு அமைப்பும் தொலைபேசி அல்லது வீடியோ மூலம் விசாரணைக்கு தொடர்பு கொள்ளாது. அவ்வாறு யாரேனும் தொடர்பு கொண்டு பேசினால் உடனடியாக போலீசாருக்கு தெரி விக்க வேண்டும். டிஜிட்டல் மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று நேற்று நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிபேசி யுள்ளார்.

    பிரதமர் மோடியே விழிப்புணர்வு ஏற்படுத்தும் அளவுக்கு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.

    இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 7.40 லட்சம் ஆன்லைன் மோசடி புகார்கள் பதிவாகியுள்ளது. இதில் ரூ.120 கோடி வரை மோசடி கும்பல் பறித்துள்ளனர். ஆன்லைன் மோசடி கும்பல்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே தொடர்பு கொள்கின்றனர்.

    இந்தியாவை குறிவைத்து மியான்மர், லாவோஸ், கம்போடியாவில் இருந்து ஏராளமான மோசடி கும்பல் போன் மற்றும் தகவல் தொடர்பு மூலம் மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த 3 நாடுகளில் இருந்து மட்டும் 46 சதவீதம் அளவிற்கு மோசடி செய்துள்ளனர்.


    ஆன்லைன் மோசடிகளில் சபலபுத்திக்காரர்களை குறி வைத்து இனிமையான குரலில் பேசி காதல் செய்யலாம் என்றும் டேட்டிங்கிகுக்கு அழைத்தும் ஏராளமான மோசடிகள் நடந்துள்ளது. ரூ.13.23 கோடி வரை காதல் மற்றும் டேட்டிங் மோசடிகள் நடந்துள்ளது.

    குறைந்த பணம் முதலீடு செய்தால் அதிகளவில் லாபம் சம்பாதிக்கலாம் என்றும், பணம் குறுகிய காலத்திலேயே இரட்டிப்பாகும் என்றும் ஒரு கும்பல் மோசடி செய்து வருகிறது. அந்த வகையான மோசடிகளில் ரூ.222.53 கோடி மோசடி நடந்துள்ளது.

    ஆன்லைனில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக கூறிதான் அதிகளவில் மோசடி நடந்துள்ளது. இந்த வகையில் ரூ.1776 கோடி வரை மோசடி நடந்துள்ளது.

    தற்போது புதிய வகையாக உங்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. போதை பொருட்கள், சட்ட விரோதமான பொருட்கள் கொண்ட பார்சல்களை நீங்கள் அனுப்பியுள்ளீர்கள் என்று வீடியோ அழைப்பு மூலமும் மோசடி நடக்கிறது.

    அமலாகத்துறையில் இருந்து பேசுவதாகவும் போலீசார் சீருடை அணிந்து பேசுவது போலவும் மோசடி செய்து பணத்தை பறிக்கின்றனர்.

    கடந்த 2023-ம் ஆண்டு 15.56 லட்சம் ஆலைன் மோசடி புகார்களும், 2022-ம் ஆண்டு 9.65 லட்சம் புகார்களும், 2021-ம் ஆண்டு 4.52 லட்சம் புகார்களும் வந்துள்ளது.

    தற்போது நடப்பாண்டில் 4 மாதங்களில் 7.40 லட்சம் புகார்கள் பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆலைன் மோசடி புகார் அதிகரித்தே வருகிறது.

    அனைத்து மாநிலத்திலும் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஆலைன் மோசடி குறையவில்லை. அதிகரித்துதான் வருகிறது. பொதுமக்கள் விழிப்புணர்வாக இல்லா விட்டால் ஆன்லைன் மோசடியை குறைக்க முடியாது என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடை பெற தொடங்கிவிட்டன.
    • போலீசார் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவது பொருட்களை ஆர்டர் செய்வது போன்ற செயல்பாடுகள் மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கிய பிறகு ஆன்லைன் மோசடிகளும் அதிக அளவில் நடை பெற தொடங்கிவிட்டன.

    உங்களது பெயரில் போதைப் பொருள் பார்சல் அனுப்பப்பட்டுள்ளது. "நாங்கள் சொல்வது போன்று கேட்காவிட்டால் நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும்" என்று எச்சரிக்கும் மோசடி பேர் வழிகள் தங்களை சைபர் கிரைம் போலீசார் என்று மிரட்டி அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டுவது ஒரு பக்கம் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.

    இதில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள போலீசார் பல்வேறு அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இருப்பினும் ஆன்லைன் மோசடி நபர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை நாடு முழுவதுமே வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ஆன்லைன் மோசடிக் கும்பல் போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.


    அந்த வகையில் தமிழக வாலிபர்களை குறிவைத்து புதுவிதமான மோசடி ஒன்றை வெளிநாட்டு கும்பல் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. கம்போடியா, மியான்மர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து செயல்படும் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிதாக இந்த மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    திருவொற்றியூர், அம்பத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலும், சென்னை மாநகரிலும் இந்த மோசடி அரங்கேறி இருக்கிறது.

    இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை மூளைச் சலவை செய்து போலியாக வங்கிக் கணக்கை தொடங்க செய்யும் மோசடிக் கும்பலின் ஏஜெண்டுகள் இதற்காக ரூ.20 ஆயிரம் வரையில் பணம் கொடுத்து ஆசை காட்டுகிறார்கள்.

    இப்படி தொடங்கப்படும் போலி கணக்குகளுக்காக போலியான கம்பெனி முகவரியுடன் கூடிய அலுவலகங்களையும் தயார் செய்து மோசடி பேர் வழிகள் ஆட்களை பிடித்து வருகிறார்கள்.

    இந்த வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்ட பின்னர் அதில் லட்சக்கணக்கில் மோசடி பணத்தை டிரான்ஸ்பர் செய்யும் மோசடிக் கும்பல் அந்த பணத்தை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விடுகிறது.

    இதன் பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டது உள்ளூர் வாலிபர்களுக்கு தெரிய வருகிறது. அவர்களும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். இது தொடர்பாக சென்னையில் மட்டும் 250 வழக்குகள் பதிவாகி உள்ளன.

    புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. எனவே புதிய கணக்கு தொடங்குங்கள் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று யாராவது நாடினால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். இல்லை யென்றால் நீங்கள் சிக்கலில் மாட்டி சிறை செல்ல நேரிடும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.
    • கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக பல்வேறு வழிகளில் பணம் திருடப்பட்டு வருகிறது.

    கூரியர் தபாலில் உங்கள் பெயரில் போதை பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் உங்களை கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று மிரட்டி ஐ.டி. ஊழியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பது தொடர்ந்து வருகிறது.

    அதே நேரத்தில் உங்கள் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகப் போகிறது, மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் என்பது போன்ற பொய்களை அள்ளி வீசியும் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் பொது மக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் சுருட்டுகிறார்கள்.

    இந்த நிலையில் கூகுள்பே, கியூஆர் கோடு மூலமாக புதிய மோசடி அரங்கேற்றப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலமாக நடைபெறும் வியாபாரம் மூலமாகவும் உங்கள் வங்கி கணக்கில் தெரியாமல் பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்புங்கள் எனக் கூறி கியூஆர் கோடை அனுப்பியும் மோசடி நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இப்படி ஆன்லைனில் அனுப்பப்படும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பினால் மர்ம நபர்கள் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்து அதில் உள்ள பணத்தை சுருட்டி விடுவதாக போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, `ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அறிமுகம் இல்லாத நபர்களின் தேவையில்லாத அழைப்புகளை உடனடியாக துண்டித்து விட வேண்டும். தொடர்ந்து நீங்கள் பேசினால் உங்களை பயன்படுத்தி நிச்சயம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுவார்கள் என்றார்.

    • கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர்.
    • குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.

    கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது. தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார்.

    இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

    • லிங்க் திறப்பதன் மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம்.
    • மூத்த குடிமக்கள் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    திருப்பதி:

    ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, 'அயோத்தியின் நேரடி புகைப்படங்கள்' வீடியோ இருப்பதாகக் கூறி, ஆன்லைனில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது.

    இது ஐதராபாத் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அதில் "ஜனவரி 22-ந் தேதி 'அயோத்தியின் நேரடிப் புகைப்படங்கள்' அல்லது அது போன்ற உள்ளடக்கம் கொண்ட பல லிங்க் மொபைல் சாதனங்களில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.


    இதுபோன்ற இணைப்புகளை நீங்கள் திறக்காமல் இருப்பது மிகவும் அவசியம்.

    லிங்க் திறப்பதன் மூலம் உங்கள் மொபைல் போன் ஹேக் செய்யப்படலாம் மற்றும் உங்கள் வங்கிக் கணக்குகள் கொள்ளையடிக்கப்படலாம்.

    மூத்த குடிமக்கள் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார்.
    • ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர். இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடினார். அப்போது இவரது வாட்ஸ் அப்புக்கு கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பகுதி நேர வேலை குறித்து விளம்பரம் வந்தது.

    அதில் தெரிவிக்கப்பட்டிருந்த எண்களை டெலிகிராம் மூலம் அந்த வாலிபர் தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசிய நபர் ஆன்லைனின் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற முடியும் என கூறினார். அதை நம்பிய அவர் மர்மநபர் அனுப்பிய யு.பி.ஐ.-ஐ.டி.க்களில் பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து 9 லட்சத்து 33 ஆயிரத்து 710 ரூபாயை அனுப்பினார்.

    பணம் சென்றடைந்த நிலையில் மர்ம நபர் தொடர்பை துண்டித்து விட்டார். பல முறை முயற்சி செய்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அந்த வாலிபர் அனுப்பிய வங்கி கணக்கு எண்களை வைத்து பணம் யாரிடம் சென்றுள்ளது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் கிரைம் எச்சரிக்கை
    • ரூ.9 3/4 லட்சம் பணத்தை அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 5 பேர் ஆன்லைனில் ரூ.13 லட்சம் பணத்தை இழந்தனர்.

    புதுவையை சேர்ந்த பெண் இணையத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து குறைந்த விலையில் உலர் பழங்கள் (டிரை ப்ரூட்ஸ்) கிடைக்கிறது என்பதை நம்பி ரூ.18 ஆயிரத்துக்கு ஆர்டர் செய்து கடந்த 15 நாட்களாக பொருள் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார்.

    உங்களுடைய கிரெடிட் கார்டின் கடன் வாங்கும் தொகையை அதிகரித்து தருகிறோம் என்று பேசி வந்த எண்ணுக்கு ஓ.டி.பி.யை சொன்னவுடன் கிரெடிட் கார்டில் ரூ.27 ஆயிரம் பொருளை இணை மோசடிக்காரர்கள் வாங்கி அவரை ஏமாற்றி உள்ளனர்.

    மற்றொருவர் மார்க்கெட் மதிப்பில் ரூ. 4 லட்சம் விலை உடைய ஹைட்ராலிக் லிப்டிங் மிஷினை ரூ.1 3/4 லட்சத்துக்கு தருகிறோம் என்று இணையவழியில் வந்த விளம்பரத்தை நம்பி பணத்தை செலுத்தி 10 நாட்களாக பொருள் மற்றும் எந்த தகவலும் இல்லை என்று புகார் அளித்துள்ளார்.

    புதுவையைச் சேர்ந்த 2 பேர் இணைய வழியில் முதலீடு செய்தால் நாள் ஒன்றுக்கு 20 சதவீதம் உங்களுக்கு வருமானம் தருகிறோம் என்று சொன்னதை நம்பி பல்வேறு வங்கி கணக்கில் ரூ.9 3/4 லட்சம் பணத்தை அனுப்பிய பிறகு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. அனுப்பிய பணத்தையும் எடுக்க முடியவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர்.

    இந்த புகார் சம்பந்தமாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் விசாரணை செய்து வருகின்றனர்.

    இது பற்றி சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறியதாவது:-

    செல்போனில் வரும் இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரத்தையும் நம்பி பணத்தை செலுத்த வேண்டாம். வேலைவாய்ப்பிற்கு பணம் செலுத்த வேண்டாம். முக்கியமாக சந்தை மதிப்பில் இருக்கின்ற பொருட்களை சந்தை மதிப்பை விட மிகவும் விலை குறைவாக கொடுப்பதாக வருகின்ற விளம்பரங்களை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

    பல்வேறு முக்கிய நிறுவனங்களின் பெயர்களில் படிப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு ரூ.100 ரூ.500 செலுத்தி எங்களுடைய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்புங்கள் என்றெல்லாம் நிறைய விளம்பரங்கள் இணைய வழியில் வந்து கொண்டிருக்கிறது. அது போல் எதையும் நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.
    • சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்த 29 வயதான சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் நீங்கள் மும்பையில் இருந்து தாய்லாந்திற்கு தடை செய்யப்பட்ட மருத்துவ பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பி இருக்கிறீர்கள் என கூறி உள்ளார்.

    அதற்கு அவர் நான் எந்த பார்சலும் அனுப்பவில்லை என தெரிவித்தார். மறுமுனையில் பேசியவர் நாங்கள் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி, உங்கள் பெயரில் தான் பார்சல் சென்றுள்ளது. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் ரூ.27 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டினார்.

    இதனால் பயந்து போன சாப்ட்வேர் என்ஜினீயர் 3 தவணைகளாக ரூ.8 லட்சத்து 29 ஆயிரத்து 348-ஐ அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். தொடர்ந்து கூடுதல் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது.

    இதனால் சந்தேகம் அடைந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோசடி கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாக கூறி நூதனம்
    • வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர், தொரப்பாடியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆகிய இருவரின் செல்போன் வாட்ஸ்-அப் எண்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த தகவலில் `ஆன்லைனில்' பகுதி நேர வேலையில் பங்கேற்று அதிகம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளனர்.

    ஆர்வம் உள்ளவர்கள் அவர்கள் அனுப்பிய இணைப்பில் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறி இருந்தனர்.

    அதனை உண்மை என நம்பிய 2 பேரும் தங்களது முழு விவரத்தையும் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

    மேலும் அவர்களுக்காக தனி கணக்கு தொடங்கி அதில் முதலீடு செய்து அவர்கள் அளித்த வேலையை செய்து முடித்துள்ளனர்.

    அவர்கள் கொடுத்த வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்ததால் அவர்கள் முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகையும் சேர்ந்துள்ளது.

    அதன்படி சேவூரைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழிய தனது வங்கி கணக்கிலிருந்து கடந்த மாதம் மொத்தம் ரூ.13.64 லட்சமும், தனியார் பள்ளி ஆசிரியரும் தனது வங்கி கணக்கில் இருந்து கடந்த 30, 31- ந் தேதிகளில் ரூ.6.15 லட்சமும் அனுப்பியுள்ளனர்.

    அவர்கள் கூறியபடி முதலீடு செய்த பணத்துக்கு கூடுதல் தொகை கிடைத்ததும் அதை தங்களது வங்கி கணக்கு இருவரும் மாற்ற முயன்றனர்.

    ஆனால் அந்தப் பணத்தை மாற்ற முடியாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் இருவரும் வேலூர் மாவட்ட சைர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார்.
    • பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர்.

    இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.

    வாணரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார். நெல்லித்தோப்பு ரமேஷ் ஆன்லைன் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1.3/4 லட்சம் செலுத்தி ஏமாந்தார்.

    ஏனாம் பிராந்தியம் தீபக்குமார் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தையை நம்பி ரூ.2 ¾ லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை பிரபாகரன் பான்கார்டு புதுப்பித்தல் என நம்பி வங்கி தகவலை தெரிவித்ததால் ரூ.24 ஆயிரத்து 986 இழந்தார்.

    இவர்கள் உட்பட கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவை முழுவதும் 19 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர புதுவை நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி ரூ.5.72 லட்சம் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்டேர் ரூ.2 கோடி வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×