search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pandalam King Kerala Varma Raja"

    சபரிமலை தரிசனம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பந்தள மன்னர் கேரள வர்மராஜா கூறினார். #Sabarimala #SabarimalaTemple
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பந்தள மன்னர் மகம் திருநாள் கேரள வர்மராஜா சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு அனைத்து தரப்பு பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் வேறு, கோவிலில் வழிமுறை வேறு. சபரிமலை மட்டுமல்ல ஒவ்வொரு கோவிலுக்கும் வழிபாட்டுமுறைகள் மாறுபடும். அதை விடுத்து சபரிமலையில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை தரிசனத்திற்கு அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    கடந்த ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி தீர்ப்பு வழங்கிய மறுநாள் முதல் கேரளத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டு, பக்தர்கள் யாருமே சபரிமலை செல்ல முடியவில்லை. ஆனால் கோவிலில் தங்கியிருந்த தந்திரிகளால் பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றது. இதிலிருந்தே ஐயப்பனின் கோபம் தெரிய வருகிறது.

    இப்பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீர்வு காண வேண்டும். எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அகிம்சை வழியில் போராட்டம் நடத்திடுவோம். நீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்யும் வழக்கு விசாரணை 22-ந் தேதி வர உள்ளது. நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டுமென சுவாமி ஐயப்பனை வேண்டுகிறோம். இப்பிரச்சினை தொடர்பாக கேரள அரசு எங்களிடம் பேசவில்லை. தேவசம் போர்டே பேச்சுவார்த்தை நடத்துகிறது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எங்களுடைய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    மகரஜோதிக்கு ஆபரணப்பெட்டிகளை நாங்கள் வழங்க மாட்டோம் என்ற செய்தி தவறானது. சபரிமலையில் நடக்கும் எந்த நடைமுறைகளையும் நாங்கள் நிறுத்த மாட்டோம். அது எங்கள் உரிமை ஆகும். கேரள அரசைப் பொறுத்தவரையில், உச்சநீதிமன்ற தீர்ப்பான அனைத்துதரப்பு பெண்களையும் அனுமதிப்பதை நடைமுறைப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டுகிறது. மற்ற சிறுசிறு பிரச்சனைகள் எதுவும் இருந்தால் நாங்கள் கூறியபடி தேவசம் போர்டு உடன்பாடு செய்து கொள்கிறது.

    கோவில் தந்திரி மோகனருவின் பேரன் ராகுல் ஈஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் மன்னர் குடும்பத்தினர் இணைந்து நாளை (இன்று) பம்பை நதிக்கரையில் உள்ள பந்தள அரண்மனை மண்டபத்தில் ஏராளமான பக்தர்களுடன் ஒன்று கூடி, வரக்கூடிய பெண் பக்தர்களுக்கு ஐயப்பன் வரலாற்றை எடுத்துக்கூறி, அவர்களை மனமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவோம். சபரிமலையில் இன்று நடைதிறக்க உள்ளது. வழக்கம்போல் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்க உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து மாலையில் ஐயப்ப பக்தர்களின் சரண கோ‌ஷ ஊர்வலம் கேரள பந்தள மன்னர் தலைமையில் நடைபெற்றது. பேரணி திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காமராஜர் சாலை, ரதவீதிகள் மாடவீதி பந்தல் மண்டபம் வழியாக வந்து தேரடியில் நிறைவு பெற்றது. பேரணியில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், திருச்செந்தூர் பாதயாத்திரை குழுத்தலைவர் அமெரிக்க சர்மா, முன்னாள் பேரூராட்சி தலைவர் சுரே‌ஷபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.  #Sabarimala #SabarimalaTemple
    ×