search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panjankulam issue"

    • நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாஞ்சாங்குளம் கிராமத்தில் குவிப்பு.
    • சமாதான பேச்சுவார்த்தைக்காக வருவாய் துறையினர் அந்த பகுதியில் முகாம்.

    பாஞ்சாங்குளம்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதுதொடர்பாக ஒரு தரப்பினர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மற்றொரு தரப்பினர் மீது அடிதடி வழக்கு பதிவானது.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தரையா என்பவரது மகன் மகேஷ்வரன் ஊர் நாட்டாமையாக செயல்பட்டதாகவும், பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மற்றொரு தரப்பினர் வைத்துள்ள கடைகளில் இருந்து பொருட்கள் வழங்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மகேஷ்வரன் வைத்துள்ள பெட்டிக்கடையில் சமீபத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்க வந்துள்ளனர். அவர்களிடம் பொருட்கள் தரமாட்டேன், ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மாணவர்களுடன் அவர் நடத்திய உரையாடல் வீடியோவை தனது உறவினர் ராமச்சந்திர மூர்த்தியுடன் சேர்ந்து தங்கள் சமுதாய வாட்ஸ்-அப் குரூப்பில் மகேஷ்வரன் போட்டுள்ளார். அந்த வீடியோ பரவி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இது குறித்த புகாரின்பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துடன் மகேஷ்வரன் மற்றும் அவரது உறவினர் ராமச்சந்திர மூர்த்தியையும் கைது செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, தாசில்தார் பாபு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனர்.

    மேலும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாஞ்சாங்குளம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். வருவாய் துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு இரு தரப்பினர் இடையே சுமூக உடன்படிக்கை ஏற்படும் வகையில் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளனர்.

    ×