search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parking area"

    ஊட்டியில் வாகன நிறுத்தும் இடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு வந்து செல்கிறார்கள். ஊட்டி நகரில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் (என்.சி.எம்.எஸ்.), அசெம்பிளி ரூம்ஸ், திபெத்தியன் மார்க்கெட், ஏ.டி.சி. திடல் அருகே உள்ள காந்தி மைதானம் உள்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு, சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதில் ஒரு சில வாகன நிறுத்துமிடங்களில் கார், வேன், பஸ்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்து உள்ளன.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு பல்வேறு புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில், சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யும் இடங்களில் வாகனங்கள் 24 மணி நேரம் நிற்கலாம். கார் மற்றும் ஜீப்புக்கு ரூ.50, வேன் மற்றும் மினி பஸ்சுக்கு ரூ.100, பஸ்சுக்கு ரூ.150-ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும். நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஊட்டியில் உள்ள ஒருசில வாகனம் நிறுத்தும் இடங்களில் கார் மற்றும் ஜீப்புகளுக்கு ரூ.60-ம், பஸ்சுக்கு ரூ.180-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த ரசீதுகளும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்களின் முன்பகுதியில் புதியதாக வைக்கப்பட்டு உள்ள அறிவுப்பு பலகையை சுற்றுலா பயணிகள் பார்த்து விட்டு, கட்டணம் வசூலிப்பவரிடம் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் கூடுதல் கட்டணமே வசூலிப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்ட போலீசார் சார்பில், ஊட்டியில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் நிர்ணயம் குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு சில இடங்களில் அந்த பலகைகள் மறைக்கப்பட்டு உள்ளது. சில பார்க்கிங் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நிர்ணயம் செய்யப்பட்டதை விட பஸ்சுக்கு ரூ.30 கூடுதலாக வசூலிப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து பார்க்கிங் நிர்வாகிகள் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர். 
    ×