search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament election பாராளுமன்ற தேர்தல்"

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில், நிலையான கண்காணிப்பு மற்றும் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:-

    நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஆணையத்தின் உத்தரவின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 30 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை பணியிலிருக்க வேண்டும்.

    நிலையான கண்காணிப்பு குழுவில் ஒரு மாஜிஸ்திரேட் அந்தஸ்து வழங்கப்பட்ட அலுவலர் தலைமையில் மூன்று காவல் துறையினர் மற்றும் வீடியோ கிராபர் ஒருவர் உள்பட 5 பேர் கொண்ட குழு பணி செய்ய வேண்டும்.

    தேர்தல் பறக்கும்படை குழுவில் கூடுதலாக ஒரு காவலரும் கொண்ட 6 பேர் பணி செய்ய வேண்டும். இக்குழுக்களின் முக்கிய பணிகளாக தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறான செயல்பாடுகளை கண்காணித்து கிடைக்கப் பெறும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,

    முக்கியமாக வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்தில் ஆதாரம் இல்லாமல் ரொக்க பணம் ரூ. 50 ஆயிரத்திற்கு மேல், ரூ. 10 ஆயிரத்திற்கு மேல் மதிப்புள்ள, வெளிமாநில மதுவகைகள், எரிசாராயம், கள்ளச்சாராயம் ஆகியவற்றை கொண்டு சென்றால், முறைப்படி பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உரிமம் இல்லாத மற்றும் உரிமம் பெற்ற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கொண்டு செல்வதை கண்காணித்து பிடித்து முறைப்படி பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து, குற்றம் நடைபெறுவதை தடுத்தல், அனைத்து பெரிய ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை வீடியோ பதிவு செய்து கண்காணித்தல் வேண்டும்.

    அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்த பணம் மற்றும் பொருட்களை படிவம் ஏ-யின் மூலமும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையினை படிவம் பி-யின் மூலமும் தெரிவித்தல் வேண்டும். பெண்களை சோதனை செய்யும்போது ஒரு பெண் அலுவலர் மூலமாக மட்டுமே சோதனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×