search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parvathipuram bridge work"

    பார்வதிபுரம் மேம்பால பணியை விரைந்து முடிக்கா விட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி பல மாதங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் பள்ளி, கல்லூரிகள் ஜூன் 1-ந்தேதி திறக்க இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதோடு, குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவார்கள்.

    எனவே பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு இரவு பகல் பாராமல் மேம்பாலப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பஸ்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மணி மேடையில் இருந்து கட்டப் பொம்மன் சந்திப்பு செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்கு பள்ளங்கள் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த இரு பணிகளையும் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கு முன்பாக விரைந்து முடிக்கவில்லை என்றால் தி.மு.க. சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×