search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perambalur Collector"

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் மண்வெட்டியால் குப்பைகளை வாரி தூய்மைப்படுத்தினார்.

    இப்பணியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு குளத்தினை தூய்மைப்படுத்தினர்.

    2021-2022-ம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    2021-2022-ம் கல்வி ஆண்டில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இம்மாவட்டத்தில் 20 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 14 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 3 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளும், 1 பழங்குடியினர் நல மாணவியர் விடுதியும், 1 பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி விடுதியும் என ஆக மொத்தம் 40 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    இவ்விடுதிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தாங்கள் சேரும் விடுதியில் விண்ணப்பங்களை பெற்று சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் வரும் 30-ந் தேதி மாலை 5மணிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி கல்வி நிறுவன சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர், மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் ஒன்றான நெய்யப்படாத கைப்பைகளை பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா அறிவுறுத்தியுள்ளார்.
    பெரம்பலூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து அரசு உத்தரவிட்டது. அதில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாநில அளவிலான தடையை அரசு அறிவித்தது. அதில் பாலிப்புரப்பிலீன் மற்றும் பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் பைகளும் (தடிமன் வேறுபாடின்றி) அடங்கும்.

    பாலிஎத்திலீனால் ஆன பிளாஸ்டிக் கைப்பைகளை மக்கள் பரவலாக பயன்படுத்தி வந்ததால், அதன் இயல்புகளை நன்கு அறிந்தனர். அதே சமயத்தில் பாலிப்புரப்பிலீன் பைகள் (நெய்யப்படாத கைப்பைகள்), அமைப்பு, வண்ணம் மற்றும் இயல்பில் துணிப்பைகள் போலவே இருப்பதால், அதை துணிப்பை என மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். ஆகவே நெய்யப்படாத கைப்பைகளும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களே ஆகும்.

    ஆங்கில புத்தாண்டு முதல் தமிழகம் தனது பயணத்தை “பிளாஸ்டிக் மாசில்லா“ மாநிலமாக தொடங்கப்பட்டிருந்தாலும், இவ்வகை நெய்யப்படாத கைப்பைகள் இனிப்பங்காடி, மருந்தகம், உணவகம், துணி கடைகளில் துணிப்பைகள் என தவறாக கருதப்பட்டு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இது போன்ற பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் நெய்யப்படாத கைப்பைகளை தவிர்த்து பாரம்பரிய சணல், துணி மற்றும் காகித பைகளை பொதுமக்கள் உபயோகிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #tamilnews
    கிணற்று தண்ணீரை விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 215 மனுக்களை பெற்றார். கூட்டத்தில், பெரம்பலூர் தாலுகா புதுவேலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஒருவர் தனது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் தண்ணீரை விவசாயத்திற்கு அதிகமாக பயன்படுத்தாமல், விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.

    இதனால் அவர் கிணற்றை சுற்றி சுமார் 20 விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள கிணறுகளின் தண்ணீரும் வற்றி போகிறது. இதனால் போதிய தண்ணீர் இல்லாமல் அவர்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, அவரை விவசாய பயன்பாட்டிற்கு மட்டும் கிணற்றின் தண்ணீரை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும் சுற்றியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    குன்னம் தாலுகா ஒதியம் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி கொடுத்த மனுவில், ஒதியம் கிராமத்தில் உள்ள புதுக்காலனியில் ஒரு இடத்தில் சுகாதாரமற்ற வகையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதில் சீமைக்கருவேல மரங்களும் அதிகமாக வளர்ந்துள்ளன. எனவே அந்த இடத்தை தூய்மைப்படுத்தி, அங்கு பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் சமுதாயக்கூடம் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    குன்னம் தாலுகா பெரிய வெண்மணி கிராமத்தை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், படித்த ஏராளமானவர்கள் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வரும் அரசு பணிகள் நேரடியாக விண்ணப்பம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் வேலைக்காக பதிவு செய்தவர்கள் வேலை கிடைக்காமல் பதிவு மூப்பு கடந்து காலாவதியான விரக்தியில் உள்ளனர். எனவே மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை மூட வேண்டும் அல்லது அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காமல் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதந்தோறும் குறிப்பிட்ட நிதி வழங்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

    இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 231 மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். 
    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் எண் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று பெரும்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனைசெய்பவர்கள் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு மற்றும் உரிம சான்றிதழை ஆன்லைனில் பெறுவது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டமன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது;-

    தமிழ்நாடு உணவுபாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் உத்தரவின்படி, வருகிற 2019 ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல், பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கு இ-பேமெண்ட் வாயிலாக மட்டுமே பெற முடியும். இணையதளத்தின் மூலம் அவரவர் வங்கி கணக்கில் இருந்து அதற்கான தொகையினை உரிமம் அளிக்கும் அரசு நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றாலும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஓட்டல்கள் அல்லது உணவு  நிறுவனங்களில் பயன்படுத்தினாலும் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலும் 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப் மூலம் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கலாம். 24 மணி நேரத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    கிராமபுற அனைத்து கிராமிய கலைஞர்களுக்கும், அடையாள அட்டை, நல வாரிய அட்டை அரசு வழங்க வேண்டும் என பெரம்பலூர் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். இந்நிலையில் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் கிராமத்தில் வசிக்கும் பெண்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

    அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், அரும்பாவூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கின்றனர். மிகவும் ஏழை, எளிய மக்களாகிய நாங்கள் குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் எங்களுக்கு அரும்பாவூரில் இருந்து பூலாம்பாடிக்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தில் இடம் வழங்க வேண்டும் அல்லது அரும்பாவூரில் ஏதேனும் ஒரு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    குன்னம் தாலுகா வேப்பூர் ஒன்றிய தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நிர்வாகி பொன்னுச்சாமி தலைமையில், அதன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கொடுத்த மனுவில், கிராமபுற அனைத்து கிராமிய கலைஞர்களுக்கும், அடையாள அட்டை, நல வாரிய அட்டை அரசு வழங்க வேண்டும். கிராமிய கலைஞர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். பறை இசை, தப்பாட்டம், நாடகக்குழு, கோலாட்டம், சிலம்பாட்டம் போன்றவைகளுக்கு சினிமா கலைஞர்களுக்கு வழங்கும் விருதுகளை போன்று கிராமிய கலைஞர்களுக்கும் வழங்க வேண்டும்.

    வேப்பூர் ஒன்றியத்தில் கிராமிய கலைஞர்களின் மரபு சார்ந்த கலைகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திடவும், அரசின் நல திட்ட உதவிகளை பெறவும், அவர்கள் ஒன்று கூடி அலுவலகம் கட்ட குன்னத்தில் இடம் தந்து உதவ வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    பெரம்பலூர் மக்கள் நல போராட்டக்குழுவை சேர்ந்த நிர்வாகிகள் கொடுத்த மனுவில், வி.களத்தூர் கிராமத்தில் இரு மதத்தினருக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மாவிலங்கை கிராம மனுநீதி நாள் நிறைவு விழாவில் ரூ. 1.76 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
    பாடாலூர்:

    ஆலத்தூர் தாலுகா மாவிலங்கை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.

    ஆலத்தூர் ஒன்றியத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் அனைவருக்கும் பொருளாதாரத்தில் முன்னேற்ற மடைவதற்கு திறன் பயிற்சி, மதிப்பு கூட்டு பயிற்சி உள்ளிடவைகள் பெண்களுக்கு அளிக்கப்படடு வருகிறது. அதன் மூலம் அவர்களுடைய குடும்பம் முன்னேற்றம் அடைவதுடன், நமது தேசமும் வளர்ச்சி அடையும் என்றார்.

    நிகழ்ச்சியில் வருவாய்த் துறை மூலம் 129 பயனாளிகளுக்கு ரூ.29.43 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், ஊரகவளர்ச்சித்துறை மூலம் 56 பயனாளிகளுக்கு ரூ.95.25 லட்சம் மதிப்பிலான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கடன் மான்யமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகளும், வேளாண்மைத் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசனத்திற்கான கருவிகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.3.37 லட்சம் மதிப்பிலான வெங்காயம் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்,

    மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத் துறை மூலம் 76 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பிலான விவசாயக் கடன் போன்ற நலத்திட்ட உதவிகளையும், கால்நடைத் துறை மூலம் 48 பயனாளிகளுக்கு ரூ.5.08 லட்சம் மதிப்பிலான நாட்டுக் கோழி வளர்ப்பில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் என பல்வேறு துறைகளின் சார்பில் 322 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களை மானிய விலையில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், குறைந்த நீரில் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டக் கூடிய காய்கறிகள், பழப் பயிர்கள், மலர் பயிர்கள் மற்றும் மலை தோட்டப் பயிர்கள் ஆகியவற்றை சாகுபடி மேற்கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 எக்டருக்கு மானிய உதவிகள் வழங்கப்படுவதோடு உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் திட்ட விரிவாக்க அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு வீரிய ஒட்டு ரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடு பொருட்கள் எக்டருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகிறது. மஞ்சள் மற்றும் மிளகாய் போன்ற சுவை தாளித பயிர்கள் சாகுபடி மேற்கொள்ள எக்டருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் நடவுச்செடிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. மல்லிகை மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய எக்டருக்கு ரூ.16 ஆயிரம் வீதம் நடவுச்செடிகள் வழங்கப்படுகிறது. சம்பங்கி போன்ற கிழங்கு வகை மலர்களுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்படும்.

    விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகள், நடவு செடிகளின் விவரங்கள் மற்றும் அனைத்து திட்ட விவரங்கள் “உழவன் செயலி’’ மூலம் அறிந்து இச்செயலி மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் திட்ட பயன்கள் வழங்கப்படுகிறது. இது தவிர, விவசாயிகள் திட்டங்கள் தொடர்பாக தேவைப்படும் விவரங்களை தங்களது வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×