search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Perungalathur fire accident"

    பெருங்களத்தூரில் தனியார் ஆம்னி பஸ்ஸில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 35 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    தாம்பரம்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தேனிக்கு நேற்று இரவு 8.15 மணிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் பாண்டியன் ஓட்டினார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர்.

    மதுரவாயல் பைபாஸ் சாலை வழியாக பஸ் சென்று கொண்டிருந்தது. இரவு 9.45 மணிக்கு அந்த பஸ் மதுரவாயல் பைபாஸ் சாலை முடியும் இடத்தில் பெருங்களத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது பஸ்சின் வலதுபுற விளக்கில் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டு புகை கிளம்பியது. உடனே டிரைவர் பாண்டியன் சுதாரித்துக் கொண்டு பஸ்சை நிறுத்தினார். உடமைகளை எடுத்துக் கொண்டு உடனே கீழே இறங்குமாறு பயணிகளிடம் கூறினார்.

    பயணிகளும் தங்களின் உடமைகளை எடுத்துக்கொண்டு உடனே கீழே இறங்கி ஓடினார்கள். பயணிகள் இறங்கிய சிறிது நேரத்தில் பஸ்சில் தீ பரவத் தொடங்கியது. திடீரென்று பஸ் கொளுந்துவிட்டு எரிந்தது.

    இதனால் பஸ்சுக்கு பின்னால் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தீவிபத்து பற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் 35 பயணிகளும் தப்பினார்கள்.

    உடனே போக்குவரத்து போலீசார் கிரேனுடன் அங்கு விரைந்தனர். முற்றிலும் எரிந்து சேதமடைந்த பஸ்சை கிரேன் மூலம் எடுத்து பீர்க்கங்கரணை ஏரிப்பகுதியில் கொண்டு நிறுத்தினார்கள். தீப்பிடித்து எரிந்த பஸ்சில் வந்த பயணிகள் மாற்று பஸ் மூலம் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த தீவிபத்து காரணமாக மதுரவாயல்- பெருங்களத்தூர் சாலையிலும், தாம்பரம்- செங்கல்பட்டு சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதிகாலை 2 மணி வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
    ×