search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police Akka Scheme"

    • போலீஸ் அக்கா திட்டம் தமிழகத்தில் முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது.
    • போலீஸ் அக்கா திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    கோவை:

    கோவை மாநகரில் ஏராளமான கலை அறிவியல் கல்லூரிகள், என்ஜினியரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் என பல்வேறு கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    இங்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கி படித்து வருகின்றனர்.

    கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் உளவியல், பாலியல் ரீதியான என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். ஆனால் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்களால் பெற்றோரிடமோ, கல்லூரி நிர்வாகம் என யாரிடமும் சொல்ல முடிவதில்லை. தயக்கத்தால் அதனை சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே போட்டு மூடி மறைத்து கொள்கின்றனர்.

    இதனால் சில நேரங்களில் சிலர் தவறான முடிவுகளை எடுப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். அப்படி மாணவிகள் எந்த தவறான முடிவையும் எடுக்காமல் இருக்கவும், அவர்கள் தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு தெரிவிப்பதற்காகவும் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் போலீஸ் அக்கா என்ற திட்டத்தை கோவை மாநகர போலீசார் தொடங்கி உள்ளனர்.

    இந்த திட்டம் தமிழகத்தில் முன்னோடி திட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்திற்காக பிரத்யேகமாக 37 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை என்பது மாணவிகளை சந்தித்து பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை தீர்த்து வைப்பது தான். போலீசார் பொறுமையாக மாணவிகளின் பிரச்சினைகளை கேட்டு அதற்கான தீர்வினை காணுவார்கள். அதற்காக போலீசாருக்கு பிரத்யேகமாக சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக கோவை மாநகரில் 60 கல்லூரிகளில் இந்த போலீஸ் அக்கா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பணியாற்றும் பெண் போலீசுக்காக கல்லூரிகளில் தனியாக என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தில் உள்ள பெண் போலீசார் மாதத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவார்கள்.

    அப்போது மாணவிகளிடம் ஒரு சகோதரியை போல் பேசி, அவர்களால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கல்லூரிகளில் யாராவது பிரச்சினை செய்தால் அதனை மனம் விட்டு பெண் போலீசாரிடம் தெரிவிக்கலாம்.

    அவர்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் மாணவிகள் கூறி முடிக்கும் வரை மிக பொறுமையாக இருந்து அதனை கேட்டு, அந்த பிரச்சினைக்கு தீர்வும் கண்டு கொடுப்பார்கள்.

    கல்லூரிகளில் மாணவர்கள் யாராவது மாணவிக்கு தொந்தரவு கொடுத்தால் முதலில் மாணவரை அழைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவர்.

    சமூக வலைதளங்களில் ஏதாவது மிரட்டல்கள் அல்லது வேறு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதனை கேட்டு கொண்டு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து அவர்கள் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள்.

    இதுதவிர கல்லூரிகளில் நடைபெறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உளவியல், பாலியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்து கூறி அந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவார்கள்.

    கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் கருத்து மோதல்கள், போதை பொருட்கள் விற்பனை பற்றிய தகவல் போலீஸ் அக்கா திட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு தெரியவந்தால் அவர்கள் அதனை கல்லூரி நிர்வாகத்தினருக்கு கொண்டு சென்று அந்த பிரச்சினையையும் தீர்த்து வைப்பார்கள்.

    மாணவிகளுக்கு நல்ல சகோதரியாக இருந்து, அவர்கள் கொடுக்கும் அனைத்து தகவல்களையும் ரகசியமாக பாதுகாத்து அதற்கும் தீர்வும் கண்டு கொடுப்பர்.

    பெண் போலீசார் கல்லூரிகளில் சென்று மாணவிகளை சந்தித்து பேசும் போது, நேரில் சொல்வதற்கு பலர் தயக்கம் காட்டுவார்கள். அப்படி தயக்கம் காட்டுபவர்களுக்கு வசதியாக கல்லூரி அறிவிப்பு பலகை மற்றும் மாணவிகளிடம் போலீஸ் அக்கா திட்டத்தில் உள்ள பெண் போலீசாரின் செல்போன் எண்கள் வழங்கப்பட்டு விடும்.

    நேரில் தெரிவிக்க முடியாத மாணவிகள், செல்போனில் பெண் போலீசை தொடர்பு கொண்டு தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை தெரிவித்தால் அதற்கான தீர்வுகளையும் காண்பார்கள்.

    இந்த திட்டத்தின் மூலம் குற்ற செயல்களை முன்கூட்டியே தடுக்க முடியும். மாணவிகள் பாதிக்கப்பட்ட பின் போலீஸ் நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். எனவே மாணவிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொண்டு தங்கள் புகார்களை பெண் போலீசாரை போலீசாராக எண்ணாமல் தங்களை சகோதரியாக நினைத்து புகார்களை தெரிவித்து தீர்வு காணலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    ×