search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police compalint"

    மணலில் ரூ.10 லட்சம் கேட்டு தனியார் நிறுவன ஊழியரை கடத்தியதாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மாதவரம்:

    எர்ணாவூர் ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பிரவீன். அதே பகுதியில் உள்ள தீபா என்ஜினீயரிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.

    இவர் மாதவரம் பால் பண்ணை போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    மணலி சி.பி.சி.எல். நிறுவனத்தில் சப்-காண்டிராக்ட் எடுத்து மூன்று வருடங்களாக தொழில் செய்து வருகிறேன். சில தினங்களுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட ஆட்கள் எங்களது நிறுவன ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து, “ஒழுங்காக தொழில் செய்ய வேண்டும் என்றால் திருவொற்றியூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ணணுக்கு மாமூல் தர வேண்டும் என்று மிரட்டினர்.

    மணலி காமராஜர் சாலையில் உள்ள விடுதியில் தங்கியிருக்கும் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் சிந்தூர்கனி செட்டி என்பவரை 4 பேர் தொலைபேசி மூலம் வெளியே வரும்படி அழைத்தனர்.

    பின்னர் பகுதி செயலாளர் கிருஷ்ணன் அழைத்து வரச் சொன்னார் என்று கூறி அவர்களது மோட்டார் சைக்கிளில் சிந்தூர்கனி செட்டியை கடத்தி சென்று விட்டனர்.

    அவரை விடுவிக்க ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்கள். பணம் கொண்டு வந்தால் விடுவிப்பதாக கூறுகிறார்கள்.

    எனவே எங்கள் ஊழியரை கடத்திய பகுதி செயலாளர் கிருஷ்ணன் மீதும் அவரது அடியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் பிரவீன் கூறி உள்ளார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை செய்து வந்தார். இதற்கிடையே கடத்த பட்டதாக கூறப்பட்ட சிந்தூர்கனி செட்டி ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்தார். அப்போது தன்னை கடத்தியவர்களே விடுவித்து விட்டார்கள் என்று கூறினார்.

    இதுபற்றி அறிந்ததும் அங்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சிந்தூர்கனி செட்டியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மணலி பெரிய தோப்பு பகுதியை சேர்ந்த ஜேம்ஸ், வினோத், மணிகண்டன் ஆகிய 3 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    ×