search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pookku Descent"

    • இரவில் அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அம்மன் வீதிஉலா.
    • அம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வழிபட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 8-ந்தேதி பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. 9-ந்தேதி பூச்சொரிதல் எனப்படும் பூத்தேர் ஊர்வலமும், 13-ந்தேதி கொடியேற்றமும் நடைபெற்றது.

    அதனைதொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தில்லைதெரு பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி நேற்று நடைபெற்றது.

    இரவில் அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. வெண்பட்டு உடுத்தி சரஸ்வதி அலங்காரத்தில் கையில் வீணையுடன் எழுந்தருளிய அம்மனை பக்தர்கள் வழிநெடுகிலும் காத்திருந்து வழிபட்டனர்.

     திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இதற்காக கோவில் முன்பு பூக்குழி தயாரிக்கப்பட்டு முதலில் கோவில் பூசாரி அதில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கினர்.

     கையில் குழந்தையை ஏந்தியவாறும், தீச்சட்டி எந்தியவாறும், அலகு குத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தையை சுமந்தும், பக்தர்கள் பூக்குழி இறங்கியது மெய்சிலிர்க்க வைத்தது.

    3400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழிய இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை காண திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக போலீசார், தீயணைப்புத் துறையினர், ஆயுதப்படை போலீசார் ஆகியோர் குவிக்கப்பட்டிருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

    ×