search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையின் இருபுறமும் குழி தோண்டி 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.
    • பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

    வீரபாண்டி :

    திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் வித்தியாலையம் பேருந்து நிறுத்தத்தின் இருபுறத்திலிருந்து சாலை அகலப்படுத்தும் பணிக்காக சாலையின் இருபுறமும் குழி தோண்டி 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. தோண்டிய பின்பு எந்த பணியும் நடைபெறவில்லை. சாலையின் இருபுறமும் குடிநீர் குழாயும் கேபிள் வயர்களும் செல்லுகின்றன.

    சாலையை அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ளும் முன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குடிநீர் வாரிய அதிகாரிகளிடமும் . மாநகராட்சி அதிகாரிகளிடமும் எந்த தகவலும் தெரிவிக்காமல் விரிவாக்கம் பணிக்காக குழி தோண்டிவிடுகிறார்கள். இதனால் குடிநீர் குழாய் உடைந்துவிடுகிறது. கேபிள் வயர்களும் துண்டிக்கப்படுகின்றன. பொதுமக்கள் புகார் செய்த பின்பு வரும் அதிகாரிகள் குடிநீர் குழாயை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட நாட்களும் ,அதன் பின்பு கேபிள் வயர்களை சரிசெய்ய ஒரு குறிப்பிட்ட நாட்களும் எடுத்துக்கொள்கின்றார்கள். இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். மேலும் இருபுறமும் பள்ளி கூடம் இருக்கிறது. பேருந்துக்கு செல்லும் குழந்தைகள் குழியில் விழுந்து விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் இரவு நேரத்தில் வாகன ஒட்டிகளும் இந்த குழியில் விழுந்து விபத்து ஏற்படுகின்றன. . இது போன்ற பணிகளை மேற்கொள்ளும் போது அது சம்பந்தமான துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பணியை தொடங்க செய்யவேண்டும்.ஆனால் நெடுஞ்சாலை துறை அப்படி செய்வதில்லை. மேலும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் பணிகளை மேற்கொள்ளும் போது விரைந்து முடிக்க வேண்டும்.இதனை வலியுறுத்தி வித்தியாலையம் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளார்கள். எனவே மாவட்ட கலெக்டர் இதில் உடனடியாக தலையீட்டு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை-தென்காசி மாவட்ட மக்கள் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளங்கள், மண் குவியல்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி இடையேயான சாலை 2 மாவட்டங்களை மட்டுமல்லாது இரு மாநிலங்களை இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலையாகும்.

    கோவில்கள்

    தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் தான் செல்கிறது. மேலும் சிமெண்ட், மரம், ஓடு, காய்கறிகள் உள்ளிட்ட வையும் அதிக அளவில் இந்த சாலை வழியாக தான் வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது.

    குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில், பண்பொழி குமாரசுவாமி கோவில், கேரளாவில் உள்ள அச்சன்கோவில், சபரிமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கு செல்பவர்களும் இந்த சாலையை தான் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

    ரூ.430.71 கோடி

    மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராணி அண்ணா கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் பொறியியல், தொழில்நுட்பம், கலை கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இந்த சாலையில் அமைந்துள்ளதால் எப்போதுமே பரபரப்பாக காணப்படுகிறது.

    நெல்லை-தென்காசி மாவட்ட மக்கள் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.430.71 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முடிப்பதற்கு வருகிற ஆகஸ்ட் மாதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    விபத்துகள்

    இந்த சாலையில் பெரும்பாலும் கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவற்றில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளங்கள், மண் குவியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி விடுகின்றனர்.

    எனவே போதுமான எச்சரிக்கை பலகைகள், வழிகாட்டி பலகைகள், இரவில் எச்சரிக்கை செய்யும் விளக்குகள், வாகனங்கள் செல்லும் பகுதியையும் பணிகள் நடக்கும் பகுதியையும் பிரிக்கும் வகையில் தடுப்புகள் அதிக அளவில் வைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதிவேக பஸ்கள்

    தார் சாலையின் இருபுறமும் ஒரே நேரத்தில் பள்ளம் தோண்டி சாலை அமைக்கப்படும் பணிகள் நடைபெறுவதால் சாலையின் அகலம் குறைவு காரணமாக வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

    சாலை பணிகள் நடைபெறும் பகுதியில் வாகனங்கள் மாற்று பாதையில் செல்வதற்கு சரியான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது.

    புலம்பல்

    மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 3 விபத்துகளாவது ஏற்படுகிறது. உயிர் சேதம், பொருள் சேதம் என பல்வேறு இழப்புகள் ஏற்படுகிறது. நேற்று கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் அருகே தென்காசியில் இருந்து நெல்லை சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஆனால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதுகுறித்து பஸ் டிரைவர்களிடம் கேட்டால், தாமதமாக சென்றால் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும். இதனால் அலுவலக நடவடிக்கைகளுக்கு பயந்து நாங்கள் இவ்வாறு குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்றடைய வேண்டியுள்ளது என்று புலம்புகின்றனர்.

    இந்த சாலை விபத்துகள் குறித்து சமூக ஆர்வலர் பாவூர்சத்திரம் பாண்டியராஜா கூறுகையில், நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.


    • வடக்குபொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
    • பொதுமக்கள் தங்களது குறைகளை இலவச எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி காவல் சரகம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்

    பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், வேளாங்கண்ணி சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கை குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
    • புங்கனூர் ஊராட்சியில் உள்ள நடுத்தெரு, வடக்குதெரு, மேலத்தெரு ஆகிய தெருக்களுக்கு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் உள்ள சாலைகள்குண்டும், குழியுமாக சேதமடைந்தி ருந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    இதனை யடுத்து சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜூனைதா பேகம்க மாலூதீன் சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

    இதனையடுத்துசீர்காழி சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புங்கனூர் ஊராட்சிக்கு சாலை அமைத்திட ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல் ஒன்றியக்குழு உறுப்பினர் சோனியாகாந்தி இளமுருகன் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், ஊராட்சி நிதி ரூ.4.25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைக்கொண்டு புங்கனூர் ஊராட்சியில் உள்ள பள்ளிவாசல்தெரு, நடுத்தெரு, வடக்குதெரு, மேலத்தெரு, ரஹ்மான்தெரு ஆகிய தெருக்களுக்கு தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

    இந்த பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் ஜுனைதா பேகம்கமாலூதீன் பார்வையிட்டார். சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் சோனியாகாந்தி இளமுருகன் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.

    • தென்காசி - இலஞ்சி சாலையில் புதியப்பாலம் கட்டப்பட்ட சாலையில் தார்ச்சாலை பெயர்ந்து உள்ளது.
    • தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கோட்டை:

    தென்காசியில் இருந்து இலஞ்சி செல்லும் சாலையில் அரிகரா நதியும், சிற்றாறும் இணையும் இடமான ஆற்றின் குறுக்கே ரூ. 3 கோடி செலவில் புதியபாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

    நெடுஞ்சாலைத்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது.பாலப் பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இதனால் செங்கோட்டையில் இருந்து இலஞ்சி வழியாக தென்காசிக்கு 8 கி.மீ. தூரத்தில் செல்ல வேண்டியதை குற்றாலம் வழியாகவோ அல்லது இலஞ்சி, குத்துக்கல்வலசை வழியாகவோ கூடுதலாக 5 கி.மீ., சுற்றி சென்றன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்துள்ளனர்.

    பாலப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இந்த பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டது.சுமார் 13 மாதங்களுக்கு பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் தென்காசி - இலஞ்சி சாலையில் புதியப்பாலம் கட்டப்பட்ட சாலையில் தார்ச்சாலை பெயர்ந்து உள்ளது. இரவு நேரங்களில் பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படாததால் வெளிச்சம் இல்லாமல் பழுதடைந்த சாலையில் ஒருவித அச்சத்துடனே வாகனம் ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணிகளை முடித்து விரைவில் தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பலத்த சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் புகாரால் அந்த கட்டடம் இடிக்கப்பட்டது.

    அந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த, சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், அருகிலுள்ள மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டனர். 2 ஆண்டுகளாகியும் இடிக்கப்பட்ட கட்டடத்துக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படவில்லை. மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்தில் ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 45க்கும் அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் உள்ளனர். இடப்பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமன்றி குழந்தைகளை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அண்ணா நகர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. இடிக்கப்பட்ட அண்ணா நகர் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டவேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை புதூரில் தியாகிகள் நினைவுதினம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கும்படி கொடுத்த மனு அன்றே நிராகரிக்கப்பட்டது.

    மதுரை

    அலங்காநல்லூரை சேர்ந்த செல்வராஜ் மதுரை ஐகேர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவளவு தியாகிகளின் 25-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி திருமாவளவன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

    இதற்காக காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கும்படி கொடுத்த மனு அன்றே நிராகரிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மருத்துவமனை நிறைந்த பகுதியாக இருப்பதாக கூறி மனுவை நிராகரித்தனர்.

    பின்னர் மதுரை மாநகரில் ஏதேனும் ஒரு பகுதியை காவல்துறையினரை தேர்வு செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மீண்டும் மனு அளித்தோம். அந்த மனு மீது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வருகிற 30-ந் தேதி மேல வளவு தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை புதூரில் பொதுக்கூட்டம் நடத்த மாநகர காவல் ஆணையர் நேற்று அனுமதி வழங்கி உள்ளார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    • பண்ருட்டியில் பொதுமக்களுடன் இணைந்து தீவிர சுகாதார பணியில் ஈடுபட வேண்டும் என நகராட்சி தலைவர் பேசினார்.
    • தெருக்களை பெருக்கி, குப்பை சேகரித்ததோடு, சுவர்கள் மற்றும் தூண்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து சுத்தம் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சியில் எனது குப்பை, எனது பொறுப்பு'என்கிற விழிப்புணர்வு பிரச்சாரம் 4-வது வார்டில் நடந்தது. இதில் பண்ருட்டி நகராட்சி தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    எல்லோரும் சுத்தத்தைப் பற்றி பேசலாம்; ஆனால் செயல் என்று வரும்போது,ஒவ்வொரு நகரிலும் வீட்டுக் குப்பையை தெருவில் எறிகிறவர்களாகதான் இருக்கிறோம் இதனால் நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலாய் மாறிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதில் மாற்றத்தை விதைக்கின்ற விதத்தில் நகரங்களில் துாய்மைக்கான மக்கள் இயக்கத்தை தமிழக முதல-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

    இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரை ஒருங்கிணைத்து பொது இடங்களை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இவ் வாறு அவர் பேசினார்.

    கமிஷனர் மகேஸ்வரி, அரசு பள்ளிபெற்றோர் ஆசிர்யர் கழக தலைவரும்,தொழில் அதிபருமான ஜாகீர் உசேன்,வார்டு கவுன்சிலர் சாந்தி செந்தில், அரிசி மண்டி அதிபர்ரகுஉள்ளிட்டோர்விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தெருக்களை பெருக்கி, குப்பை சேகரித்ததோடு, சுவர்கள் மற்றும் தூண்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை கிழித்து சுத்தம் செய்தனர்.

    தொடர்ச்சியாக, 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தில், பயணிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது. குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டிய அவசியம் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் தரப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை துப்புரவு அலுவலர் முருகேசன், சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்,

    • பேரூராட்சியில் 800 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250 பொதுகுடிநீர் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
    • இதன் காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    பேரூராட்சியில் 800 வீட்டு குடிநீர் இணைப்புகளும், 250 பொதுகுடிநீர் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 200 வீடுகளில் விதிகளுக்கு புறம்பாக தரை மட்ட தொட்டியில் இணைப்பு கொடுத்து மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி வருவதாகவும், இதனால் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து தலைஞாயிறு பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான குடிநீர் செல்ல வீட்டு இணைப்புகளை ஆய்வு செய்து வீட்டின் வெளியே குடிநீர் குழாய் பொருத்த வேண்டும் என செயல் அலுவலர் குகன் உத்தரவிட்டார். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் பணியாளர்களை நியமித்து குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணியை தடுத்து நிறுத்தினர் இந்த நிலையில் தலைஞாயிறு மேலத்தெரு பகுதியில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த பேரூராட்சி பணியாளர்கள் பொக்லின் எந்திரத்துடன் சென்றனர்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த சில பெண்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லின் எந்திரம் மூலம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பணி செய்யவிடாமல் தடுத்தனர். இதன் காரணமாக பணி பாதியில் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து குடிநீர் இணைப்புகள் முறைப்படுத்தும் பணி போலீசார் பாதுகாப்புடன் நடக்கும் என்றும், இதை தடுப்பவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும் செயல் அலுவலர் குகன் எச்சரிக்கை விடுத்தார்.

    • சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், புஞ்சை பாலதொழுவு ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு, மேற்கு பள்ளபாளையம், கிழக்கு பள்ளபாளையம், ஒலப்பாளையம், ராசம்பாளையம், திப்பம்பாளையம், வசந்தம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இந்த பகுதி நொய்யல் ஆற்றின் ஒரத்துப்பாளையம் அணையொட்டிய பகுதிகளில் வருவதால் சாயகழிவு நீர் தேங்கிய காரணத்தால் இந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு கொடுமுடி, முத்தூர், காங்கேயம் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை குடிநீர் கேட்டு புஞ்சை பாலதொழுவு கிராம மக்கள் சென்னிமலை -ஊத்துக்குளி மெயின் ரோட்டில் ஆலமரம் 4 ரோடு சந்திப்பில் அரசு டவுன் பஸ்சினை சிறைப்பிடித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தீர்வு ஆக வில்லை. இதனால் காலையில் திருப்பூர் பனியன் நிறுவனத்திக்கு வேலைக்கு செல்ல வேண்டிய பணியாளர்கள் செல்லும் வேன்கள் அதிகளவில் வந்ததால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உடனடியாக பெருந்துறை தாசில்தார் குமரேசன், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளருமான எஸ்.ஆர்.எஸ்.செல்வம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சி தலைவர் தங்கமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உடனடியாக லாரி தண்ணீர் வழங்கவும், தொடர்ந்து நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட 9 பேர் கொண்ட கமிட்டி அமைத்து விரைவில் சென்னிமலை யூனியன் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் கூட்டம் நடத்தி அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் குமரேசன் உறுதிமொழி கொடுத்ததை தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இந்த சாலை மறியலால் சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் பயனற்று கிடக்கின்றன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் முக்கியப் பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் கிடைப்பதால் மக்கள் பணம் கொடுத்து குடிநீரை வாங்க வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

    இங்குள்ள ஆதி ஜெகநாதர் கோவில் ராமர் காலத்திற்கு முந்தைய காலக் கோவில் ஆகும். இது 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசமாக விளங்குகிறது. திருமணத்தடை, குழந்தைபேறு வேண்டி இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    பெருமை வாய்ந்த கோவில் உள்ள ஊரில் எங்கு பார்த்தாலும் குப்பையாக உள்ளது. குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்படுகிறது. மெயின் ரோடுகள் தவிர மற்ற தெருக்களில் சரியான சாலை வசதி இல்லை.

    இந்த ஊர் மக்கள் குறிப்பிட்டு சொல்லும் முக்கிய பிரச்சினையாக குடிநீர் பிரச்சனை உள்ளது. 2 நாட்களுக்கு ஒருமுறை, 4 நாட்களுக்கு ஒருமுறை, சில நேரங்களில் வாரத்திற்கு ஒரு முறை என குடிநீர் வருகிறது. அதுவும் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கே வரும். அதை தவற விட்டால் தண்ணீர் கிடைக்க வாய்ப்பில்லை. வெளியில் பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும்.

    திருப்புல்லாணி ஊருக்குள் நுழையும் இடத்தில் ஊரணி உள்ளது. அதை மக்கள் பயன்படுத்துவதைத் தவிர பன்றிகளே பயன்படுத்துகின்றன. இங்கு சரியான படித்துறைகளும் இல்லை. திருப்புல்லாணியில் 2016-17-ல் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் புதிய மீன் மார்க்கெட் உள்ளது. ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கடைகள் அனைத்தும் பயனற்று கிடக்கின்றன.

    இந்த மார்க்கெட்டிற்கு எதிரே கருவேல முட்கள் மண்டி கிடப்பதுடன் குப்பை, கழிவுகளை கொட்டுகின்றனர். திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகம், குடிநீர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து மக்களின் குறைகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
    • காங்கயம் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே உள்ள அவினாசிபாளையம் வண்ணாந்துறைபுதூர் பகுதியில் வி.ஜி.வி.கார்டன் குடியிருப்பு உள்ளது.இங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி தவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும்நாச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் அங்குள்ள காங்கயம் சாலையில் திடீரென காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவினாசிபாளையம் போலீசார் மற்றும் நாச்சிப்பாளையம் ஊராட்சி தலைவர் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குடிநீர் இல்லாததால் மாணவர்கள், குழந்தைகள்என அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளோம். விநியோகிக்கப்படும் குடிநீரும் துர்நாற்றத்துடன் வருகிறது. எனவே சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். தொடர்ந்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது லாரி மூலம் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 2 மணிநேரமாக நீடித்த மறியல் காரணமாக காங்கயம் சாலையில் 1 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.  

    ×