search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quills"

    • குறிப்பாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 8-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து உள்ளன.
    • தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த தானியங்கி எந்திரம், குவிலென்ஸ் ஆகியவை சேதம் அடைந்து உள்ளன.

    அருவங்காடு,

    நீலகிரியில் எண்ணற்ற சுற்றுலாதலங்கள் உள்ளதால் மாநிலம் முழுவதிலும் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் அதிகளவில் வந்து செல்கின்றனர். அப்போது மலை மாவட்டத்தின் போக்குவரத்து விதிகள் குறித்து அறியாமல் ஒருசில வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.

    அதிலும் குறிப்பாக கடந்த 2 மாதத்தில் மட்டும் 8-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து உள்ளன. இதில் 9 பேர் பலியாகினர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

    நீலகிரி மலைப்பாதைகளில் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் இன்றுவரை நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அபாயகரமான பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் சிலவை தற்போது மாயமாகி விட்டது. மேலும் அந்த வழித்தடத்தில் உள்ள 14 கொண்டை ஊசிவளைவுகளில் குவிலென்சுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இது அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகளுக்கு உதவியாக இருந்து வந்தது.

    மேலும் காட்டேரி, கல்லாறு ஆகிய பகுதியில் உள்ள அபாயகரமான வளைவுகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

    ஆனால் அங்கு தற்போது எச்சரிக்கை பலகை மட்டுமின்றி நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டு இருந்த தானியங்கி எந்திரம், குவிலென்ஸ் ஆகியவை சேதம் அடைந்து உள்ளன.

    இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் எவ்வித கட்டுப்பாடு இன்றி அதிவேகமாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே அங்கு விபத்துகள் அதிகளவில் நடக்கின்றன.

    இதற்கிடையே நீலகிரி மலைப்பாதையில் வாகன விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் குன்னூர் நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    இதுகுறித்து நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா கூறியதாவது:-

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில நாட்களாக விபத்துக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் நெடுஞ்சாலை துறையினருடன் இணைந்து அபாயகரமான பகுதிகளில் உள்ள சேதம் அடைந்த எச்சரிக்கை பலகைகள் சீரமைக்கப்படும். மேலும் அந்த பகுதிகளில் புதிய குவிலென்ஸ்கள் பொருத்தப்படும்.

    இதுதவிர மண் சரிவு, நிலச்சரிவு உள்ளிட்ட அபாயகரமான பகுதிகளை கண்டறிந்து அந்த இடத்தில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என குன்னூர் நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதுகுறித்த தீர்மானத்தை அரசுக்கு அனுப்பி வைத்து தேவையான நிதியை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×