search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway gate employee"

    கோவை அருகே ரெயில் வருவதற்காக பூட்டிய ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை என்று கூறியதால் ஊழியரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை அருகே உள்ள கவுண்டர் மில்ஸ் பகுதியில் இருந்து உருமாண்ட பாளையம், கணபதி, அன்னூர் சாலையில் கோவை- மேட்டுப்பாளையம் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது.

    இங்குள்ள உருமாண்ட பாளையம் ரெயில்வே கேட்டில் கேட் கீப்பராக கண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் பணியில் இருந்தார். மாலை 6 மணிக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதற்காக கண்ணன் ரெயில்வே கேட்டை பூட்டினார். அதன் பின்னர் கேட் திறக்கப்படவில்லை. இதனால் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது.

    வாகன ஓட்டிகள் கேட் கீப்பர் கண்ணனிடம் ஏன் கதவை திறக்கவில்லை என கேட்டனர். அதற்கு அவர் கதவை திறக்க முடியவில்லை என பதில் அளித்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த பொதுமக்களில் ஒருவர் ரெயில்வே கேட்டை திறந்து பார்த்தார். உடனடியாக திறந்தது. இதனால் பொதுமக்கள் கேட் கீப்பர் கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கை கலப்பும் உருவானது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் சங்கனூர், வெள்ளக்கிணர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கேட் கீப்பர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் கண்ணனுக்கு ஆதரவாக பொதுமக்களிடம் தகராறு செய்தனர்.

    இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. கேட் கீப்பரிடம் புகார் புத்தகத்தை கொடுங்கள். நாங்கள் அதில் எழுதி வைக்கிறோம் என பொதுமக்கள் கேட்டனர்.

    அதற்கு கண்ணன் உள்ளிட்ட மற்ற கேட் கீப்பர்கள் புத்தகத்தை கொடுக்காமல் கேட் கீப்பர் தங்கும் அறையை பூட்டி விட்டு சென்றுவிட்டனர்.

    மேலும் ரெயில்வே கேட்டும் திறந்து கிடந்தது. வாகன ஓட்டிகள் இரு புறமும் சென்று வந்தனர். இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர்.

    அதற்குள் கேட் கீப்பரிடம் தகராறு செய்த பொதுமக்கள், கேட் கீப்பர்கள் சென்றுவிட்டனர். கண்ணனும் அவர்களுடன் சென்றுவிட்டார். இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு விட்டது.

    ஆனால் உருமாண்டம் பாளைத்தில் ரெயில்வே கேட் திறந்து இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து தற்காலிக கேட் கீப்பர் வரவழைக்கப்பட்டு ரெயில்வே கேட் பூட்டப்பட்டது. நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் அந்த வழியாக சென்றது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக வரும் போது கேட் திறக்கப்பட்டு இருந்தால் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். எனவே பொறுப்பு இல்லாமல் செயல்பட்ட கேட் கீப்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    ×