search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranji Trophy"

    • மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.
    • 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி மத்திய பிரதேசம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது.

    பெங்களூரு:

    பெங்களூரில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை, மத்திய பிரதேச அணிகள் மோதின.

    மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ் கான் சதமடித்து 134 ரன் எடுத்தார்.

    மத்திய பிரதேசம் சார்பில் கவுரவ் யாதவ் 4 விக்கெட், அகர்வால் 3 விக்கெட், சரன்ஷ்ஜ் ஜெயின் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அதன்பின், முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 536 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ரஜத் படிதார், யாஷ் துபே 133 ரன்னும், ரஜத் படிதார் 122 ரன்னும், சுபம் சர்மா 116 ரன்னும் குவித்தனர். சரன்ஷ் ஜெயின் 57 ரன்கள் எடுத்தார்.

    மும்பை அணி சார்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மோஹித் அவஸ்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய மும்பை 2வது இன்னிங்சில் 269 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சுவேத் பார்கர் 51 ரன்னும், சர்ப்ராஸ் கான் 45 ரன்னும், பிரித்வி ஷா 44 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேசம் சார்பில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டும், கவுரவ் யாதவ், சஹானி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேசம் களமிறங்கியது. 29.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் வலுவான மும்பை அணியை வீழ்த்தி முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    மத்திய பிரதேச வீரர் சுபம் சர்மா ஆட்ட நாயகன் விருதும், மும்பையை சேர்ந்த சர்ப்ராஸ் கான் தொடர் நாயகன் விருதும் வென்றனர்.

    • 795 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய உத்தரகாண்ட் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
    • 92 ஆண்டு கால உலக சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறபகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் மும்பை அணி, உத்தரகாண்டை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முதல் இன்னிங்சில் 166.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 647 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. சுவேத் பார்கர் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

    அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய உத்தரகாண்ட் அணி 114 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்க்ஸை தொடங்கிய மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் குவித்து மீண்டும் 'டிக்ளேர்' செய்தது.

    இதையடுத்து 795 ரன்கள் என்ற மிக இமாலய இலக்குடன் உத்தரகாண்ட் அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணி இன்று 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    அதுமட்டுமின்றி முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய வெற்றி (ரன்கள் அடிப்படையில்) என்ற உலக சாதனையை மும்பை அணி படைத்துள்ளது. 92 ஆண்டுகளுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து அணியை 685 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூ சவுத் வேல்ஸ் அணி வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி முறியடித்துள்ளது.

    ரஞ்சி டிராபியை பொருத்தவர, 1953-54ல் பெங்கால் அணி ஒடிசாவை 540 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

    நடப்பு ரஞ்சி டிராபி தொடரில், மும்பை அணி அரையிறதியில் உத்தர பிரதேச அணியுடன் விளையாட உள்ளது.

    • ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் பெங்கால் அணி 773 குவித்து டிக்ளேர் செய்தது.
    • பெங்கால் அணி சார்பில் அந்த அணியில் 9 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர்.

    பெங்களூரு:

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பெங்கால், ஜார்க்கண்ட் அணிகள் இடையிலான காலிறுதி ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

    முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுக்கு 577 ரன்கள் எடுத்திருந்தது. மனோஜ் திவாரி 54 ரன்களுடனும், ஷாபாஸ் அகமது 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 773 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பெங்கால் அணியில் அபிஷேக் ராமன் (61 ரன்), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (65), சுதிப் கராமி (186), அனுஸ்துப் மஜூம்தார் (117), மனோஜ் திவாரி (73), அபிஷேக் போரெல் (68), ஷபாஸ் அகமது (78) ரன்கள் எடுத்தனர். இதேபோல், சயான் மொண்டல் 53 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், முதல்தர கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு அணியில் 9 வீரர்கள் குறைந்தது 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு 1893-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணிக்கு எதிரான முதல்தர போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது. இந்த 129 ஆண்டு கால சாதனையை பெங்கால் அணியினர் தகர்த்து புதிய சாதனை படைத்தனர்.

    மூன்றாம் நாள் முடிவில் ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய விதர்பா அணி, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. #RanjiTrophyFinal #VIDvSAU
    நாக்பூர்:

    ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியன் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே விதர்பா அணி 312 ரன்னும், சவுராஷ்டிரா அணி 307 ரன்னும் எடுத்தன. 5 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய விதர்பா அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. கணேஷ் சதீஷ் 24 ரன்னும், வாசிம் ஜாபர் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய விதர்பா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. வாசிம் ஜாபர் 11 ரன்னிலும், கணேஷ் சதீஷ் 35 ரன்னிலும், அக்‌ஷய் வாத்கர் ரன் எதுவும் எடுக்காமலும், அக்‌ஷய் கார்னிவார் 18 ரன்னிலும், மொகித் காலே 38 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

    நிலைத்து நின்று ஆடிய ஆதித்யா சர்வாதே 133 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 49 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக வீழ்ந்தார். விதர்பா அணி 92.5 ஓவர்களில் 200 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சவுராஷ்டிரா அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் தர்மேந்திரசிங் ஜடேஜா 6 விக்கெட்டும், கம்லேஷ் மக்வானா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 206 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி துவக்கத்திலேயே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்னெல் பட்டேல் 12 ரன்னிலும், ஹர்விக் தேசாய் 8 ரன்னிலும், மற்றும் நட்சத்திர வீரர் புஜாரா ரன் எதுவும் எடுக்காமலும், அர்பித் வசவதா 5 ரன்னிலும், ஷெல்டன் ஜாக்சன் 7 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

    இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் சவுராஷ்டிரா அணி 2-வது இன்னிங்சில் 28 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. விஸ்வராஜ் ஜடேஜா 23 ரன்னுடனும், கம்லேஷ் மக்வானா 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். விதர்பா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதித்யா சர்வாதே 3 விக்கெட்டும், அக்‌ஷய் வாக்கரே ஒரு விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபட்டதால் விதர்பா அணி வெற்றியை நோக்கி பயணித்தது.

    இந்நிலையில், இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு மேலும் 148 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், நிதானமாக விளையாடியது. மக்வானா 14 ரன்கள் எடுத்த நிலையில் சர்வாதேவிடம் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மன்கட் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரை வாக்கரே பெவிலியனுக்கு அனுப்பினார். அப்போது அணியின் வெற்றிக்கு 115 ரன்கள் தேவைப்பட்டது.

    நெருக்கடிக்கு மத்தியிலும் விக்கெட்டைக் காப்பாற்ற கடுமையாகப் போராடிய ஜடேஜா, அரை சதம் கடந்தார். ஆனால், அவர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் டிஏ ஜடேஜா 17 ரன்னிலும், உனாத்கட் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, சவுராஷ்டிரா அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

    இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ஆதித்யா சர்வாதே, 2ம் இன்னிங்சில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். முதல் இன்னிங்சில் 98 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. #RanjiTrophyFinal #VIDvSAU
    பெங்களூருவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் கர்நாடகாவை வீழ்த்தி சவுராஷ்டிரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #RanjiTrophy
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடகா - சவுராஷ்டிரா அணிகள் மோதின. பெங்களூருவில் கடந்த 24-ந்தேதி தொடங்கிய ஆட்டத்தில் கர்நாடகா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 275 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா 236 ரன்னில் சுருண்டது. 39 ரன்கள் முன்னிலையுடன் கர்நாடகா 2-வது இன்னிங்சில் விளையாடியது. சவுராஷ்டிராவின் நேர்த்தியான பந்து வீச்சால் கர்நாடகாவால் 2-வது இன்னிங்சில் அதிக ரன்கள் குவிக்க இயலவில்லை. மயாங்க் அகர்வால் 46 ரன்களும், ஷ்ரேயாஸ் கோபால் 61 ரன்களும் அடிக்க 239 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    இதனால் சவுராஷ்டிரா அணியின் வெற்றிக்கு 279 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 279 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சவுராஷ்டிரா அணியின் தேசாய், பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தேசாய் 9 ரன்னிலும், பட்டேல் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ஜடேஜா டக்அவுட் ஆனார்.

    இதனால் 23 ரன்கள் எடுப்பதற்குள் சவுராஷ்டிரா அணி முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ஜேக்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் சதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 237 ரன்னாக இருக்கும்போது ஜேக்சன் 100 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    புஜாரா 131 ரன்கள் அடித்து களத்தில் நிற்க சவுராஷ்டிரா 91.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் சவுராஷ்டிரா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான விதர்பாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நாக்பூரில் அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.
    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. #RanjiTrophy
    சென்னை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி முதல் இன்னிங்சில் 432 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து இருந்தது. ஜான்டி சித்து 104 ரன்னுடனும், லலித் யாதவ் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முதல் இன்னிங்சில் 133.1 ஓவர்களில் 336 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. லலித் யாதவ் 91 ரன்னில் கேட்ச் ஆனார். ஜான்டி சித்து 140 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அத்துடன் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. இதனால் தனது பிரிவில் (பி) 8-வது இடத்தை பிடித்த தமிழக அணி அடுத்த சீசனில் இதே பிரிவில் நீடிப்பதை உறுதி செய்தது. அதே சமயம் தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட டெல்லி அணி அடுத்த சீசனில் ‘சி’ பிரிவுக்கு தரம் இறக்கப்படுகிறது.

    கால்இறுதி ஆட்டங்கள் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. கால்இறுதி ஆட்டங்களில் விதர்பா-உத்தரகாண்ட், சவுராஷ்டிரா-உத்தரபிரதேசம், கர்நாடகா-ராஜஸ்தான், கேரளா-குஜராத் அணிகள் மோதுகின்றன.  #RanjiTrophy

    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இமாச்சல பிரதேசம் #RanjiTrophy
    ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் கடந்த 22-ந்தேதி தொடங்கிய ஆட்டம் ஒன்றில் தமிழ் நாடு - இமாச்சல பிரதேச அணிகள் மோதின. தரம்சாலாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இமாச்சல பிரதேச அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தமிழ்நாடு 227 ரன்களில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இமாச்சல பிரதேச அணி அங்கித் கல்சியின் (144) அபார சதத்தால் 463 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. 236 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு அபிநவ் முகுந்த் (128), பாபா இந்திரஜித் (106) ஆகியோரின் சதத்தால் 345 ரன்கள் சேர்த்தது.

    இதனால் 110 ரன்கள் இமாச்சல பிரதேச அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது தமிழ்நாடு. இமாச்சல பிரதேசம் 1 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் தமிழ்நாடு 7 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வி, 4 டிரா மூலம் 12 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் 8-வது இடத்தை பிடித்துள்ளது.
    தர்மசாலாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 2வது நாள் ஆட்ட முடிவில் இமாசலப்பிரதேசம் 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி 6 ஆட்டத்தில் 1 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இதற்கிடையே, தமிழ்நாடு அணி தனது 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் இமாச்சலப்பிரதேச அணியுடன் மோதியது. டாசில் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அந்த அணியில் அபராஜித் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார். அவருக்கு  ஒத்துழைப்பு கொடுத்த தன்வர் 44 ரன்னில் அவுட்டானார். இறுதியில், தமிழ்நாடு அணி 78.4 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இமாசலப்பிரதேசம் சார்பில் ஜெய்ஸ்வால் 3 விக்கெட்டும், கலேரியா, ராகவ் தவான், சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இமாசல் அணி களமிறங்கியது. அந்த அணியின்  தொடக்க ஆட்டக்காரர் ராகவ் தவான் 71 ரன்னில் வெளியேறினார்.
    சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நிகில் காங்டா 44 ரன்களில் அவுட்டானார்.

    அதன்பின் இறங்கிய அங்கிட் கால்சி, ரிஷி தவான் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அசத்தினர்.

    இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இமாசலப்பிரதேசம் அணி 5 விக்கெட்டுக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. அங்கிட் கால்சி 99 ரன்னிலும், ரிஷி தவான் 71 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    தமிழ்நாடு சார்பில் நடராஜன், மொகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இமாசல் அணி தமிழ்நாட்டை விட 113 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    தர்மசாலாவில் தொடங்கிய ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி 6 ஆட்டத்தில் 1 வெற்றி, 1 தோல்வி, 4 டிராவுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இந்நிலையில், அந்த அணி தனது 7-வது ‘லீக்’ ஆட்டத்தில் இமாச்சலப்பிரதேச அணியுடன் மோதியது. 4 நாட்கள் கொண்ட இப்போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

    டாசில் வென்ற தமிழ்நாடு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரரான அபினவ் முகுந்த் டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 7 ரன்னுக்கு 2 விக்கெட்டை இழந்து திணறியது.

    அபராஜித் - இந்திராஜித் நிதானமாக விளையாடி சரிவில் இருந்து அணியை மீட்க இந்த ஜோடி போராடியது. தமிழ்நாடு அணி 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 31 ரன் எடுத்து இருந்தது.

    அடுத்து இறங்கிய அபராஜித் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 53 ரன்னில் வெளியேறினார். அவருக்கு  தன்வர் ஒத்துழைப்பு கொடுத்தார். தன்வர் 44 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.
    இறுதியில், தமிழ்நாடு அணி 78.4 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இமாசலப்பிரதேசம் சார்பில் ஜெய்ஸ்வால் 3 விக்கெட்டும், கலேரியா, ராகவ் தவான், சோப்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    முதல் நாள் ஆட்ட முடிவில் இமாசல் அணி ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. #RanjiTrophy #Tamilnadu #HimachalPradesh
    டோனி ரஞ்சி டிராபியில் விளையாடினால் ஒரு இளைஞர் வெளியே இருக்க வேண்டியதிருக்கும் என ஜார்க்கண்ட் பயிற்சியாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். #MSDhoni
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் டோனி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். சமீப காலமாக டோனியின் பேட்டிங் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. மேலும், டோனிக்கு அதிக அளவில் ஓய்வு நேரம் கிடைக்கிறது. இதைபயன்படுத்தி பேட்டிங் திறமையை சிறப்பாக வைத்துக்கொள்ள டோனி உள்ளூர் தொடர்களில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இந்நிலையில் ஜார்க்கண்ட் அணிக்காக டோனி விளையாடினால் ஒரு இளைஞர் வெளியே இருக்க வேண்டியதிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என பயிற்சியாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜார்க்கண்ட் அணி பயிற்சியாளர் ராஜீவ் குமார் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி உள்ளூர் தொடரில் விளையாடாதது குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது. ஆனால், அவர் ஜார்க்கண்ட் அணியில் இணைந்து விளையாடினால், ஒரு இளைஞர் வெளியில் இருக்க வேண்டியதிருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



    எம்எஸ் டோனி இந்த செயலை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?. ஜார்க்கண்ட் அணி ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து, அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. டோனி நான்கு நாட்கள் கொண்ட ரஞ்சி டிராபி தொடரில் விளையாடினால், அது நியாயமானதாக இருக்காது.

    டோனி ராஞ்சியில் இருக்கும்போதெல்லாம் பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் வந்து இளைஞர்களுக்கு டிப்ஸ் வழங்குகிறார். இது இளைஞர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்றார்.
    ஆசிய கோப்பை தொடரின்போது காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா, தற்போது குணமடைந்து ரஞ்சி டிராபியில் களம் இறங்கியுள்ளார். #HardikPandya
    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. ஆசிய கோப்பை போட்டியின்போது காயம் அடைந்தார். இதனால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ஹர்த்திக் பாண்ட்யா ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.



    இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘எனது உடல் தகுதியை பரிசோதித்துக் கொள்ள ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறேன். எவ்வளவு விரைவில் அணியில் இடம் பெறமுடியுமோ அவ்வளவு விரைவில் அணிக்கு தேர்வாவேன்’’ என்றார்.
    ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்கால் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. #RanjiTrophy #Bengal #TamilNadu
    சென்னை:

    ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு - பெங்கால் அணிகள் இடையிலான லீக் (பி பிரிவு) ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் தமிழகம் 263 ரன்களும், பெங்கால் 189 ரன்களும் எடுத்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 141 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 216 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய பெங்கால் அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தமிழக பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அந்த அணி 150 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இறுதி கட்டத்தில் சட்டர்ஜீயும், பிரதிப்தா பிரமானிக்கும் மனஉறுதியுடன் போராடினர். சட்டர்ஜீ 40 ரன்னிலும், அடுத்து வந்த அசோக் திண்டா ஒரு ரன்னிலும் வெளியேறினர். அப்போது அந்த அணியின் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. 10-வது விக்கெட்டுக்கு இறங்கிய இஷான் போரெலுக்கு, ரஹில் ஷாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. கேட்டு தமிழக வீரர்கள் முறையிட்டனர். நடுவர் வழங்க மறுத்தார். அதற்குள் அவர்கள் ஒரு ரன் ஓடி எடுத்தனர். முடிவில் பெங்கால் அணி 82.5 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை பெற்றது. பிரமானிக் 25 ரன்களுடன் (97 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரஹில் ஷா 5 விக்கெட்டுகளை அறுவடை செய்தும் பலன் இல்லாமல் போய் விட்டது.   #RanjiTrophy #Bengal #TamilNadu
    ×