search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relatives road picket"

    கோவையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. #GirlHarassment
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்றுமுன்தினம் மாயமானார்.

    பலஇடங்களில் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்காததால் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் வீட்டருகே நேற்று காலை சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது. கை, கால்கள் டி-சர்ட்டால் கட்டப்பட்டு இருந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் கொலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே சிறுமியின் சாவுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி நுழைவு வாயில் முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

    ஆனால், சிறுமியை கடத்திக் கொலை செய்தவர்களை கைது செய்து உரிய தண்டனை கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்களது உறவினர்கள் கூறி கலைந்து சென்றனர். இந்நிலையில், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி நேற்று இரவு 7.30 மணி அளவில் பன்னிமடை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கொலையாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மறியலை கைவிட்டனர். எனினும், இன்று காலை வரை கொலையாளிகள் கைது செய்யப்படாததால் சிறுமியின் உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் திரண்டு துடியலூர் பஸ் நிலைய சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இதற்கிடையே, சிறுமி கொலை வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    மேலும் கொலையாளிகளை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டிய ராஜன் உத்தரவிட்டார். அதன்படி டி.எஸ்.பி. மணி மேற்பார்வையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சிறுமி படித்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் உள்பட பலரிடம் விசாரித்தனர். பஸ் நிலையம் உள்ளிட்ட அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இதுதொடர்பாக சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர்கள் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #GirlHarassment
    ×