search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Export"

    • வழக்கமாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை இல்லாததால் அந்த நேரத்தில் அரிசி விலை கூடும்.
    • இன்னும் ஓரிரு நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 வரை குறையும்.

    சென்னை:

    ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தியை பொறுத்தவரையில் 70 லட்சம் டன் இருக்கிறது. இதனால் தமிழ்நாடு அரிசி உற்பத்தியில் தன்னிறைவு மாநிலமாக இல்லை என்பது தெரியவருகிறது. உற்பத்தி செய்யப்படும் 70 லட்சம் டன் அரிசியில் கூட 5 முதல் 10 லட்சம் டன் கேரள மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது.

    மீதமுள்ள 60 லட்சம் டன் அரிசியுடன், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆண்டுக்கு 35 லட்சம் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் தேவையைவிட 5 லட்சம் டன் அரிசியாகவோ, நெல்லாகவோ நம்மிடம் இருப்பு இருந்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருகிறது.

    வழக்கமாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை இல்லாததால் (ஆப்-சீசன்), அந்த நேரத்தில் விலை கூடும். அதன் பின்னர் விலை சாதாரண நிலைக்கு வந்துவிடும். பொதுவாக ரூ.2 முதல் ரூ.3 வரை ஆப்-சீசனில் விலை உயரும். ஆனால் இந்த முறை ரூ.4 வரை உயர்ந்துள்ளது.

    இதற்கு உக்ரைனில் நிலவும் போர் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் கருங்கடலில் உணவு தானியங்களை கொண்டு செல்லக்கூடாது என ரஷியா போர்க்கொடி தூக்கியுள்ளதால், ஐரோப்பிய நாடுகளில் அரிசிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி ஏற்றுமதி அதிகளவில் இருந்தது. வழக்கமாக வெளிநாடுகளுக்கு 11½ லட்சம் டன் ஏற்றுமதி இருந்த நிலையில், அங்கு தேவை அதிகரித்து கூடுதலாக 3 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி ஆனது. இதன் காரணமாகவே ஆப்-சீசனில் விலை அதிகமாக உயர்ந்தது என்கின்றனர், அரிசி ஆலை உரிமையாளர்கள்.

    இந்த நிலையில் மத்திய அரசு, உள்நாட்டு தேவையை கருத்தில்கொண்டு, 'சூப்பர் பைன் வெரைட்டி' அரிசி ஏற்றுமதிக்கு கடந்த 20-ந் தேதி தடை விதித்து இருக்கிறது. இந்த சூப்பர் பைன் வெரைட்டியில் பி.பி.டி., சோனார்மசூரி அரிசி ரகங்கள் வருகின்றன. இவை பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகாவில் விளையக்கூடியது. தற்போது இந்த ரக அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதால், உள்நாட்டின் தேவையை அதிகளவில் இந்த ரக அரிசி பூர்த்தி செய்யும். எனவே வரக்கூடிய நாட்களில் அரிசி விலை குறையவே வாய்ப்பு அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரிசி உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன செயலாளர் டாக்டர் மோகனிடம் கேட்டபோது, 'இன்னும் ஓரிரு நாட்களில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.2 வரை குறையும். அதன் பின்னர் மேலும் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. இது ஒரு புறம் இருக்க தற்போது குறுவை சாகுபடியின் அறுவடை ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் இருக்கும். ஆனால் தென்மாநிலங்களில் போதிய மழை இல்லாதது, வட மாநிலங்களில் அதிகளவில் வெள்ளம் போன்ற காரணங்களால் எதிர்பார்த்த குறுவை சாகுபடி இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதன் நிலையை பொறுத்து அந்த நேரத்தில் அரிசி விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது' என்றார்.

    மேலும், உள்நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம் என்று கூறும் அரிசி ஆலை உரிமையாளர்கள், மத்திய அரசின் தற்காலிக ஏற்றுமதி தடைக்கு வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர். இருந்தாலும், இந்த தடை நிரந்தரமாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×