search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rickets"

    எலும்புருக்கி நோய் பாதிப்பால் சிறப்பு அனுமதி பெற்று படித்து சமீபத்தில் உயிரிழந்த கோவை மாணவி பிளஸ் 1 தேர்வில் 600-க்கு 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். #Plusoneresult
    கோவை:

    கோவை சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிட்டி பாபு. கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகள் பிரித்தி.

    இவர் சிறு வயது முதல் எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆனால் அவர் படிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.

    தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் படிப்பில் சுட்டியாக விளங்கினார். அவர் சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள மேல் நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார். பிரித்தியால் நடக்க முடியாது என்பதால் அவரை தாய் புவனேஸ்வரி தனது தோளில் சுமந்து சென்று பள்ளியில் விட்டு வந்தார்.

    பள்ளி முடியும் வரை தனது மகளுக்கு உதவியாக இருந்தார். இதன் பலனாக மாணவி பிரித்தி நன்கு படித்தார். அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 468 மதிப்பெண் பெற்றார்.

    இதனை தொடர்ந்து பிரித்தி கலைப்பிரிவில் படிக்க விரும்பினார். ஆனால் சீரநாயக்கன் பாளையம் மேல்நிலைப்பள்ளியில் கலைப்பிரிவு பாட வகுப்புகள் இல்லை. மற்ற பாடப்பிரிவுகள் தான் இருந்தது.

    இதனால் தன்னால் மேற்படிப்பு படிக்க முடியாமல் போய் விடுமோ என கவலை அடைந்தார். பிரித்தியின் தாயும் வேறு பள்ளியில் மகளை சேர்த்தால் எப்படி அவளை சுமந்து கொண்டு செல்வது என வருத்தத்தில் இருந்தார்.

    இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் கல்வி அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அதே பள்ளியில் வணிக கணிதம் பிரிவு கொண்டு வந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த பிரித்தி அதே பள்ளியில் மீண்டும் சேர்ந்து பிளஸ்-1 படித்தார்.

    பிளஸ்-1 பொது தேர்வையும் அவர் எழுதினார். தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்த அவர் பொழுது போகாமல் தவிர்த்து வந்தார். தேர்வு முடிவை அவர் ஆவலுடன் எதிர் பார்த்து இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரித்தி திடீரென மரணம் அடைந்தார்.

    அவரது மரணம் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அப்பகுதி பொது மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பிளஸ்-1 தேர்வு முடிவு இன்று வெளியான நிலையில் மாணவி பிரித்தி 471 மதிப்பெண் பெற்று இருந்தார்.

    அவர் தமிழில் 93, ஆங்கிலம்- 54, பொருளாதாரம்-68, வணிக கணிதம்- 74, வணிகவியல்-88 அக்கவுண்டன்சி -94 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்.

    பிளஸ்-1 தேர்வில் 471 மதிப்பெண் பெற்ற மாணவி தற்போது உயிருடன் இல்லை என்பதை நினைத்து பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்ணீர் வடித்தனர். #Plusoneresult
    ×