search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road reconstruction"

    நாகையில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சிறப்பு பெற்ற மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோவில் உள்ளிட்ட மும்மதத்தினரும் வழிபட்டு செல்லும் முக்கிய இடமாக உள்ளது. நாகைக்கு வெளியூர், வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

    நாகை பழைய பஸ்நிலையத்தில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தோணித்துறை அருகே ரெயில்வே கேட் மேம்பால பகுதி உள்ளது. நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தோணித்துறை சாலை வழியாக அக்கரைப்பேட்டை, கல்லார், தெற்கு பொய்கைநல்லூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு இந்த சாலையை தான் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்களை சரக்கு வேன், ஆட்டோக்களில் ஏற்றி இந்த வழியாக தான் மீனவர்கள் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.

    முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கும் போது அக்கரைப்பேட்டை, தோணித்துறை ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதை காரணம் காட்டி சாலையை சீரமைப்பதை தாமதப்படுத்தி வருகின்றனர்.

    எனவே, தோணித்துறை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 
    ×