search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery In Chennai"

    சென்னையில் நடந்த தொடர் கொள்ளையில் தொடர்புடைய மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    பூந்தமல்லி:

    சென்னை அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் சில மாதங்களாக பங்களா வீடுகள், நகை கடைகளில் தொடர் கொள்ளைகள் நடந்து வந்தன. இதையடுத்து அண்ணா நகர் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    சில மாதங்களுக்கு முன்பு காரைக்காலை சேர்ந்த மணிகண்டன், திண்டுக்கல்லை சேர்ந்த கோபால், புதுச்சேரியை சேர்ந்த ரகு, மூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3/4 கிலோ தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் அளித்த தகவலின் பேரில் நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம், நாரையூரை சேர்ந்த தினகரன் (வயது 31), திருவாரூரை சேர்ந்த முருகன் உள்ளிட்ட சிலரை பிடிக்க அண்ணா துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் நெல்லையில் தினகரனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் நாகையை சேர்ந்த லோகநாதன் (52), காளிதாஸ் (34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    தினகரன், முருகன் ஆகியோர் கொள்ளை அடிக்கும் முன் வீட்டை முதலில் நோட்டமிடுவார்கள். வீட்டில் ஆட்கள் இல்லாதபோது ஒருவர் வீட்டின் பூட்டை கடப்பாறையால் உடைத்து உள்ளே செல்வார். மற்றொருவர் வெளியே நின்று காவல் காப்பார். செல்போன் பயன்படுத்தினால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால் வாக்கி டாக்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

    வெளியில் இருக்கும் நடமாட்டங்களை வீட்டிற்குள் இருப்பவருக்கு வாக்கி டாக்கி மூலமே தகவலை கொடுப்பார். மாடி வீடுகளில் கொள்ளையடிக்க கயிறுகளை கையோடு எடுத்து செல்வார்கள். கொள்ளை அடித்த நகைகளை லோகநாதன், காளிதாசிடம் கொடுப்பார்கள். அவர்கள் அதை உருக்கி விற்று பணமாக மாற்றி கொடுத்து வந்தது மட்டுமல்லாமல் கொள்ளையர்களுக்கு அடைக்கலமும் கொடுத்து வந்தனர். அதற்காக குறிப்பிட்ட தொகையையும் பெற்றுள்ளனர். 
    ×