search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை ரோகித் படைத்தார்.
    • ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.

    கொழும்பு:

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன.

    இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடைபெற்ற சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி 121 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் ரோகித் சர்மா 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    இந்திய அணி 24.1 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கு எதிராக முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார்.

    மேலும் இந்த ஆட்டத்தில் அவர் 4 சிக்சர்கள் அடித்திருந்தார். அதன் மூலம் 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். ஆசிய கோப்பையில் 23 சிக்சர் அடித்த ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் முறியடித்தார்.

    அதிக சிக்சர்கள் அடித்த முதல் 3 வீரர்கள் விவரம் பின்வருமாறு;-

    1. ஷாஹித் அப்ரிடி : 26 (21 இன்னிங்ஸ்) 1. ரோஹித் சர்மா : 26* (24 இன்னிங்ஸ்)

    2. சனாத் ஜெயசூர்யா : 23 (24 இன்னிங்ஸ்)

    3. சுரேஷ் ரெய்னா : 18 (13 இன்னிங்ஸ்)

    அத்துடன் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இலங்கை மண்ணில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற கிறிஸ் கெயில் படைத்திருந்த சாதனையையும் உடைத்து ரோகித் புதிய வரலாறு படைத்துள்ளார்.

    அந்த பட்டியல்: 1. ரோகித் சர்மா : 33*

    2. கிறிஸ் கெயில் : 30

    3. ஷாஹித் அப்ரிடி : 29

    4. சுரேஷ் ரெய்னா : 25

    • அணித் தேர்வின் ஆலோசனையில் நிறைய வீரர்கள் குறித்து பரிசீலித்தோம்.
    • தற்போது பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

    உலகக் கோப்பை அணியை அறிவித்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீரர்கள் அணியில் தங்களது இடத்திற்கு போராடுவது ஒன்றும் மோசமான விஷயம் அல்ல. சவால்கள் அதிகரிக்கும் போது அணித் தேர்வும் கடினமாகி விடுகிறது. ஆனால் யார் பார்மில் இருக்கிறார்? எதிரணி எது? இது போன்ற சூழலில் சிறப்பாக செயல்படும் வீரர் யார்? எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். இப்படி நடக்கும் போது நாம் விளையாடும் அணியில் சிலரை தவற விடுகிறோம். இது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்று தான். அணியின் நன்மைக்காக இப்படி கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டியுள்ளது.

    அணித் தேர்வின் ஆலோசனையில் நிறைய வீரர்கள் குறித்து பரிசீலித்தோம். இறுதியில் 15 பேர் கொண்ட மிகச்சிறந்த அணியை தேர்வு செய்திருப்பதாக நம்புகிறோம். எங்களது கன கச்சிதமான அணிச்சேர்க்கை இது தான். அணித் தேர்வு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது.

    ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முழுமையான ஒரு வீரர். பேட்டிங்கும் செய்கிறார். பந்தும் வீசுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவரது அருமையான பேட்டிங்கை பார்த்து இருப்பீர்கள். அத்துடன் கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பந்து வீச்சிலும் முத்திரை பதிக்கிறார். உலகக்கோப்பை போட்டியில் அவரது 'பார்ம்' நமக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

    தற்போது பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை நீங்கள் பார்த்தாலே ஏன் அணியில் ஆல்-ரவுண்டர் தேவை என்பது புரிந்திருக்கும். அந்த ஆட்டத்தில் நாம் 266 ரன்கள் எடுத்திருந்தோம். இன்னும் பேட்டிங் தெரிந்த பந்து வீச்சாளர் இருந்திருந்தால் கூடுதலாக 15 ரன் கிடைத்திருக்கும். இந்த 15 ரன் வித்தியாசம் என்பது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கக்கூடியது. எனவே பந்து வீச்சாளர்களும் பேட்டிங் செய்ய வேண்டிய அவசியம் குறித்து பல முறை பேசி இருக்கிறேன். இதனால் அணியின் சமநிலையை கருத்தில் கொண்டு 4 ஆல்-ரவுண்டர்கள் (பாண்ட்யா, ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஷர்துல் தாக்குர்) தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    அதுமட்டுமின்றி சில சமயம் பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய ரன்கள் விட்டுக்கொடுக்கும் போது, அவர்கள் தங்களது 10 ஓவர்களை முழுமையாக வீச முடியாத நிலை உருவாகும். அப்போது ஆல்-ரவுண்டர்கள் கைகொடுப்பார்கள். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அணியில் ஆல்-ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
    • அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஆயத்தமாகி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒரு கேப்டனாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் வெளியில் நடக்கும் விஷயங்களை பற்றி கவலைப்படாமல் மனதை நெருக்கடியின்றி எப்படி இயல்பாக வைத்துக் கொள்கிறேன் என்பதே முக்கியம். இன்னும் சொல்லப்போனால் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எத்தகைய மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலைக்கு செல்ல விரும்புகிறேன். அப்போது மனதளவில் மிகவும் நல்ல நிலையில் இருந்தேன். போட்டிக்கும் சிறப்பாக தயாராகி (5 சதம் உள்பட 648 ரன் குவித்தார்) இருந்தேன். அந்த சமயம் என்னவெல்லாம் செய்தேனோ அதனை மீண்டும் நினைவுக்குள் கொண்டு வந்து, அதன்படி தயாராக முயற்சிக்கிறேன். அதை செய்ய எனக்கு போதுமான நேரம் இருக்கிறது.

    ஒரு போட்டியின் முடிவு அல்லது ஒரே ஒரு சாம்பியன்ஷிப் என்னை எந்த வகையிலும் மாற்றி விடாது. கடந்த 16 ஆண்டுகளாக எப்படி இருக்கிறேனோ அதே போல் தான் இப்போதும் இருக்கிறேன். எனக்குள் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. அடுத்த 2 மாதங்களில் எனது இலக்கை எப்படி நிறைவேற்ற போகிறேன் என்பதில் ஒரு வீரராகவும், அணியாகவும் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி ஒன்று அல்லது 2 மாதத்திற்காக ஒரு நபர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.

    சாதனை புள்ளிவிவரங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. உங்களுக்கு என்ன தரப்படுகிறதோ அதை உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் செய்ய வேண்டும். எது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது என்பதை தான் நான் சிந்திக்கிறேன். என்னை பொறுத்தவரை சக வீரர்களுடன் இணக்கமான சூழலை கொண்டு வந்து, சிறந்த நினைவுகளை உருவாக்க வேண்டும். உங்களிடம் என்ன இருக்கிறது, என்ன கிடைக்கிறது என்பதை வைத்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

    அணியின் கலவை சரியாக அமைய வேண்டும் என்பதற்காக சில வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போய் விடுகிறது. அந்த சமயத்தில் நானும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களிடம் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறோம். இதே போல் களம் காணும் 11 பேரை இறுதி செய்யும் போதும், வெளியில் இருக்கும் மற்ற வீரர்களிடம் நீங்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுவோம்.

    சில நேரங்களில் அவர்களது இடத்தில் என்னை வைத்து பார்ப்பேன். 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு என்னை தேர்வு செய்யாத போது, மனம் உடைந்து புலம்பி இருக்கிறேன். ஆனால் கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்கள் ஆகியோர் எதிரணி, ஆடுகளம், எங்களது பலம், பலவீனம் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் கொண்டே அணியை தேர்வு செய்கிறார்கள். ஆனால் எல்லா நேரமும் நமது தேர்வு சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் தவறு நடக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்.
    • இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும்.

    ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்த பிறகு தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் நிருபர்களிடம் கூறுகையில், 'லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்படக்கூடிய வீரர். அவர் ஆசிய கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்துக்கு முன்பே முழு உடல் தகுதியை எட்டிவிடுவார் என்று நம்புகிறோம். லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளனர். இதில் லோகேஷ் ராகுலுக்கு புதிதாக ஏற்பட்டு இருக்கும் காயம் சிறிய பின்னடைவு தான். காயம் சரியாகி விடும் என்று நம்புகிறோம். அவர் மிகவும் முக்கியமான வீரர். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 1½ மாதம் இருக்கிறது. அதற்கு முன்பாக ராகுல், ஸ்ரேயாஸ்க்கு போதுமான அளவுக்கு கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். இதேபோல் இஷான் கிஷனும் நல்ல நிலையில் உள்ளார். இந்த தருணத்தில் இந்த 3 வீரர்களுக்கு தான் தொடக்க வரிசையில் முன்னுரிமை அளிக்க முடியும். அணியின் கலவையை கருத்தில் கொண்டு சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் அளிக்க முடியவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களில் சாஹலை விட அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர்கள் என்பதால் முன்னுரிமை அளிக்கப்பட்டது' என்றார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், 'இந்த அணியில் உள்ள எல்லோரும் எந்த வரிசையிலும் களம் இறங்கி பேட்டிங் செய்ய தயாராக இருக்க வேண்டும். பேட்டிங் வரிசை நெகிழ்வு தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். அது தான் அணிக்கு நல்லது. எனக்கு குறிப்பிட்ட வரிசை தான் சவுகரியமாக இருக்கும் என்று யாரும் சொல்லக்கூடாது. அணியின் தேவைக்கு தகுந்தாற் போல் எந்த வரிசையிலும் பேட் செய்ய முடியும் என்பதற்கு தங்களை பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும். இது கடந்த 3-4 ஆண்டுகளாக ஒவ்வொரு வீரருக்கும் சொல்லப்பட்டு வரும் செய்தியாகும். ஒரே நாள் இரவில் எந்தவொரு பேட்ஸ்மேனின் வரிசையும் மாற்றம் செய்யப்படுவது கிடையாது.

    அணி தேர்வில் ஆப் ஸ்பின்னர்கள் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பெயரும் பரிசீலனை செய்யப்பட்டது. 17 பேரை மட்டுமே அணிக்கு தேர்வு செய்ய முடியும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு அணியில் இடம் அளிக்க முடியவில்லை. அவரை சேர்க்க வேண்டும் என்றால் ஒரு வேகப்பந்து வீச்சாளரை நீக்க வேண்டியது வரும். அடுத்த 2 மாதங்களில் நடக்கும் போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பதால் வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 8-வது அல்லது 9-வது வரிசையில் ஆடும் பவுலரும் கொஞ்சம் பேட்டிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். சில வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் இருந்து திரும்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு போதிய ஆட்டங்களில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

    அணியில் யாருக்கும் கதவு மூடப்பட்டுவிடவில்லை. யார் வேண்டுமென்றாலும் எப்போதும் அணிக்கு வரலாம். உலகக் கோப்பை போட்டிக்கு யுஸ்வேந்திர சாஹல் தேவைப்பட்டால், அவரை எப்படி சேர்த்து கொள்வது என்பதை பார்ப்போம், அஸ்வின், வாஷிங்டன் விஷயத்திலும் இது பொருந்தும்' என்றார்.

    • முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
    • 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.

    புதுடெல்லி:

    10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் உலககோப்பை தொடருக்கான கனவு 11 அணியில் தான் தேர்வு செய்த முதல் 5 வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்கள், ஒரு ஆஸ்திரேலிய வீரர் , ஒரு தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் கூறியுள்ளார். 2-வது வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். இவர் ஐசிசி மற்றும் இருதரப்பு தொடர்களில் அதிக ரன்களை குவித்து சிறப்பான வீரர் என நிரூபித்துள்ளார்.

    3-வது வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார். 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். 5-வது வீரராக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவை தேர்வு செய்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார்.
    • ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்பாக 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் ஆகஸ்ட் 30 முதல் செப்.17 வரை நடக்கவுள்ளது.

    இந்நிலையில் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் தேர்வுக் குழு அஜித் அகர்கர், தேர்வுக் குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அணி தேர்வில் முதல்முறையாக பயிற்சியாளரும் சேர்க்கப்பட்டிருந்தார். ரவி சாஸ்திரி கூட அணித் தேர்வுக்கான கூட்டத்தில் இதுவரை பங்கேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மா இடம் பிடித்துள்ளார். வழக்கம் போல சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை

    ஆசிய கோப்பைக்கான இந்திய வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சர்துல் தாகூர், பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப் யாதவ்.பிரதிஷ் கிருஷ்ணா.

    ரிசர்வ் வீரர்: சஞ்சு சாம்சன்

    இதே அணி தான் உலககோப்பைத் தொடருக்கும் பயணம் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

    • ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வரிசையில் நன்றாக விளையாடினார்.
    • துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாய் அய்யருக்கு காயம் கொஞ்சம் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

    மும்பை:

    ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டிக்கான இந்தியாவின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செயல்படுகிறார். மும்பையில் நேற்று நடந்த இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோகித் சர்மா பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங்கில் 4-வது வரிசை நீண்டகாலமாகவே பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. யுவராஜ்சிங்குக்கு பிறகு அந்த இடத்தில் எந்த பேட்ஸ்மேனும் தங்களை வலுவாக நிலைநிறுத்திக்கொள்ளவில்லை. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் 4-வது வரிசையில் நன்றாக விளையாடினார். கணிசமான ரன்களும் குவித்தார். துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாய் அய்யருக்கு காயம் கொஞ்சம் குடைச்சலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

    உண்மையை சொல்ல வேண்டும் என்றால், 4-5 ஆண்டுகளாக இது தான் நடக்கிறது. அந்த வரிசையில் ஆடிய நிறைய வீரர்கள் காயமடைந்து இருப்பதும், பிறகு அந்த இடத்திற்கு புதிய வீரர்கள் வந்து ஆடுவதும் வாடிக்கையாகி விட்டது. இருப்பினும் எந்த வீரரும் அந்த வரிசையில் கச்சிதமாக பொருந்தவில்லை. சரியான வீரர்களை அடையாளம் காண்பது சவாலாக உள்ளது.

    கடந்த 4-5 ஆண்டுகளாக வீரர்கள் அதிக அளவில் காயமடைவது நமது நீண்டகால திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வீரர்கள் காயமடையும் போதோ அல்லது அணித் தேர்வில் இருந்து ஒதுங்கி இருக்கும் போதோ புதிய வீரர்களை கொண்டு வெவ்வேறு விதமான முயற்சிகளை செய்து பார்க்கிறோம். அதனால் தான் 4-வது பேட்டிங் வரிசையை பற்றி பேச வேண்டி இருக்கிறது. நான் கேப்டனாக இல்லாத போது கூட இந்த வரிசையில் நிறைய வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்திருக்கிறார்கள்.

    இந்திய அணியில் எனக்கு உள்பட யாருக்கும் தானாகவே இடம் கிடைத்து விடாது. இதே போல் யாருக்கும் இடம் உறுதி என்று கூறிவிட முடியாது. தாங்கள் உலகக் கோப்பை அணியில் இடம் பெறப்போகிறோம் என்பது சில வீரர்களுக்கு தெரியும். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

    ஸ்ரேயாஸ் அய்யரும், லோகேஷ் ராகுலும் கடந்த 4 மாதங்களாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. பெரிய அளவில் காயமடைந்து ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள். நானும் ஒரு முறை காயத்துக்கு ஆபரேஷன் செய்து இருக்கிறேன். காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்புவது எவ்வளவு கடினம் என்பதை உணர்ந்துள்ளேன். அவர்கள் எந்த அளவுக்கு காயத்தில் இருந்து மீண்டு தயாராக இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

    இன்னும் சில தினங்களில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணி தேர்வு செய்யப்பட உள்ளது. வீரர்களை தேர்வு செய்வதில் நிறைய விவாதங்கள் இருக்கும். ஆனால் யாருக்கும் அணியில் தானாகவே இடம் கிடைத்து விடாது. ஒவ்வொரு இடத்திற்கும் கடும் போட்டி இருக்கிறது. நிறைய வீரர்களின் பெயர் பரிசீலனையில் உள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு எது சரியான அணி கலவையாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டியது முக்கியம்.

    உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டி உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தரமான அணிக்கு எதிராக நமது சில பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு மத்தியில் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன்.

    50 ஓவர் உலகக்கோப்பையை நான் வென்றதில்லை. அதை கையில் ஏந்த வேண்டும் என்பதே எனது கனவாகும். அதற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம். அதை வெல்வதை விட மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவும் இருக்க முடியாது. உலகக் கோப்பையை தட்டில் வைத்து தந்து விட மாட்டார்கள். உண்மையிலேயே இதற்காக மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். 2011-ம் ஆண்டில் இருந்து இப்போது வரை நாங்கள் எல்லோரும் இதற்காகத்தான் போராடி வருகிறோம்.

    ஒவ்வொருவரும் களத்திற்கு சென்று வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர். ஏனெனில் நம்மிடம் சிறந்த அணி உள்ளது என்பதை அறிவோம். நமது வீரர்கள் அனைவரும் திறமையானவர்கள். அவர்களால் இதை செய்ய முடியும் என்ற உள்ளுணர்வும், தன்னம்பிக்கையும் இருக்கிறது.

    அணியை வழிநடத்தினாலும் முதலில் நான் ஒரு பேட்டர். அதன் பிறகு தான் கேப்டன். அதனால் அணியில் எனது பங்களிப்பு பேட்டிங்கில் தான் அதிகம் உள்ளது. கேப்டன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட வேண்டியது தான். அதே நேரத்தில் நான் நிறைய ரன்கள் குவித்து அதன் மூலம் அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் கலந்து ஆலோசித்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கிறோம். சுழற்சி முறையில் அவர்களை பயன்படுத்துகிறோம். இது உலகக் கோப்பை ஆண்டு. ஒவ்வொரு வீரரும் புத்துணர்வுடன் இருக்க வேண்டும். எந்த வீரரும் முக்கியமான போட்டிகளை தவற விடுவதை நாங்கள் விரும்பவில்லை.

    இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மாவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அவரை நான் இரு ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். முதிர்ச்சியான வீரர் போல் செயல்பட்டு வருகிறார். நான் அவரிடம் பேசும் போது, அவர் தனது பேட்டிங்கை நன்கு புரிந்து வைத்திருப்பதை அறிந்து கொண்டேன். பந்தை எங்கு அடிக்க வேண்டும், எந்த சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அவருக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்குமா என்பது தெரியாது. ஆனால் அவரிடம் நிறைய திறமை இருக்கிறது. இந்தியாவுக்கு ஆடிய கடந்த சில ஆட்டகளில் அதை நிரூபித்து காட்டி விட்டார்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களில் யார் சிறந்த பந்து வீச்சாளர் என ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்டார்.
    • அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வின் போது ஒரு ரசிகரின் கேள்விக்கு தனது பதிலால் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். 36 வயதான அவர் சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இடம்பெற்றார். அதை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இளம் வீரர்களை வளர்க்கவும், வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கு முன்னதாக பல்வேறு சேர்க்கைகளை முயற்சிக்கவும், ரோகித் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில், விடுமுறையில் இருக்கும் ரோகித் சர்மா, அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வின் போது ஒரு ரசிகரின் கேள்விக்கு தனது பதிலால் அனைவரையும் மிகவும் கவர்ந்துள்ளார்.

    பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களில் யார் சிறந்தவர் என ரசிகர் ஒருவர் ரோகித் சர்மாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அவர் அனைவருமே சிறந்த பந்து வீச்சாளர்தான். யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. நீங்கள் பெரிய சர்ச்சையை எதிர்பார்த்து இந்த கேள்வியை கேட்டுள்ளீர்கள் என அவர் பதலளித்தார்.


    இதனை கேட்ட அனைவரும் சிரித்தனர். அவரது மனைவி ரித்திகாவும் சிரித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • 2011-ம் ஆண்டு உலக கோப்பை நாம் வென்ற போது கூட நான் அணியில் இடம் பெறவில்லை.
    • உள்நாட்டு ரசிகர்களின் மத்தியில் உலக கோப்பையை வெல்வோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    மும்பை:

    உலக கோப்பை கிரிக்கெட்போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 10 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை வெற்றியை நான் அருகில் இருந்து பார்த்ததில்லை. 2011-ம் ஆண்டு உலக கோப்பை நாம் வென்ற போது கூட நான் அணியில் இடம் பெறவில்லை. பார்க்கவே அழகான உலக கோப்பைக்கு பின்னால் நிறைய மறக்க முடியாத நினைவுகளும், வரலாறும் இருக்கிறது. இந்த முறை உலக கோப்பையை கையில் ஏந்த முடியும் என்று நம்புகிறேன்.

    சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் ஒவ்வொரு இடத்திற்கும், மைதானத்திற்கும் செல்லும் போதும் ரசிகர்களின் ஆதரவு பிரமாண்டமாக இருக்கும் என்பது தெரியும். அது மட்டுமின்றி அது சாதாரண போட்டி அல்ல. உலக கோப்பை. 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடக்கிறது. அதனால் ஒவ்வொருவரும் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

    நினைவில் உள்ள ஒவ்வொரு உலக கோப்பை போட்டி குறித்து கேட்கிறீர்கள். 2003-ம் ஆண்டில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்பு வரை உண்மையிலேயே சிறப்பாக ஆடியது. பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் ரன்வேட்டை நடத்தினார்.

    வெஸ்ட் இண்டீசில் நடந்த 2007-ம் ஆண்டு உலக கோப்பை நமக்கு நல்லவிதமாக அமையவில்லை. துரதிர்ஷ்டவசமாக லீக் சுற்றை கூட தாண்ட முடியாமல் வெளியேறி விட்டோம்.

    2011-ம் ஆண்டு உலக கோப்பை நாம் எல்லோருக்கும் மறக்க முடியாது ஒன்று. ஆனால் நான் ஒவ்வொரு ஆட்டத்தையும், ஒவ்வொரு பந்தையும் வீட்டில் டி.வி.யில் கண்டுகளித்தேன். இந்த உலக கோப்பையில் எனக்கு இரு விதமான உணர்வு பூர்வமான விஷயங்கள் உண்டு. ஒன்று நான் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானேன். அதனால் உலக கோப்பை போட்டியை பார்க்ககூடாது என்று முடிவு செய்தேன். பிறகு மனதை மாற்றிக் கொண்டேன். அடுத்ததாக இந்திய அணி கால்இறுதியில் இருந்து அருமையாக விளையாடி மகுடம் சூடியதை என்னால் மறக்க முடியாது.

    அதன் பிறகு 2015 மற்றும் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளில் நானும் அணியில் இருந்தேன். இதில் நாங்கள் நன்றாக விளையாடினோம். அரைஇறுதி வரை முன்னேறினோம். இறுதி சுற்றை எட்ட எல்லா வகையில் முயற்சித்து பார்த்தோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.

    இப்போது மீண்டும் சொந்த மண்ணில் விளையாடுகிறோம். கடைசி கட்ட தடையை தாண்டி கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறேன். ஆனால் அதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். ஒன்றிரண்டு நாட்களில் நீங்கள் உலக கோப்பையை வென்று விட முடியாது. போட்டி நடக்கும் ஒன்றரை மாதங்களும் சிறப்பாக விளையாடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் புது நாள். ஒவ்வொரு ஆட்டமும் புது தொடக்கம். இது டெஸ்ட் கிரிக்கெட் போன்று கிடையாது. ஒருநாள் கிடைக்கும் உத்வேகத்தை அடுத்த நாளுக்கு கொண்டு செல்ல முடியாது.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன்.
    • அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று கயானாவில் நடந்தது. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், ஒருபுறம் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா சர்வதேச டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதவு செய்தார். அவர் 41 பந்துகளில் ஒரு சிக்சர் 5 பவுண்டரிகள் உள்பட 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தப் போட்டியில் இந்தியா 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அரைசதம் மற்றும் சதம் அடித்தால் வீரர்கள் அவர்களுக்கு என்று ஒரு பாணியை வைத்துள்ளனர். ஜடேஜா என்றால் பேட்டை சுழற்றி காட்டுவார். கேஎல் ராகுல் காதை மூடிக்கொள்வார். இப்படி இருக்க திலக் வர்மாவும் தனக்கென ஒரு பாணியை கொண்டுள்ளார்.


    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது போட்டியில் அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் திலக் வர்மா இரு கட்டை விரல்களையும் மாற்றி மாற்றி காண்பித்து குழந்தையை போல் கொண்டாடினார்.

    இது குறித்து திலக் வர்மா கூறியிருப்பதாவது:-

    இந்த அரைசதத்தை ரோகித் சர்மாவின் மகளான சமைராவுக்கு நான் அர்ப்பணிக்கிறேன். அதற்காகத்தான் வித்தியாசமான முறையில் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.

    நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். ஆதலால், நான் எனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எப்போது அரைசதம் அடிக்கிறேனோ அதனை சமைராவுக்கு அர்ப்பணிப்பதாக சொல்லியிருந்தேன். அதன்படியே செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
    • ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் திலக் வர்மாவை தவிர மற்ற இந்திய அணி வீரர்கள் சொதப்பினர். திலக் வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20-யில் தனது முதல் அரை சதம் அடித்தார்.

    இந்நிலையில் எனது உத்வேகம் சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா என்று திலக் வர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து திலக் வர்மா கூறியதாவது:-

    சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா எனது உத்வேகம். ரோகித் பாயுடன் அதிக நேரம் செலவிடுகிறேன். என்னுடைய முதல் ஐபிஎல் தொடரில், திலக் நீங்கள் ஒரு அனைத்து வடிவ கிரிக்கெட் வீரர் என்று அவர் என்னிடம் கூறினார். அது என் நம்பிக்கையை அதிகரித்தது. அவருடைய வழிகாட்டுதல் எனக்கு மிகப்பெரியதாக இருந்தது.

    ரோகித் சர்மா எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருந்தார். எப்போதும் என்னிடம் பேசி விளையாட்டை ரசிக்கச் சொல்வார். ஐபிஎல் தொடர் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவுக்காக விளையாட எனக்கு இந்த சிறப்பான ஆட்டம் உதவியது. முன்னோக்கி செல்லும் நான் அதை தொடர விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார்.
    • துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடுகின்றனர்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இன்று பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர்களாக இஷான் கிஷன், ஷுப்மன் கில் விளையாடுகின்றனர்.

    இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதில் சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர். கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொருத்தவரை ரோவ்மன் பாவெல் மற்றும் டொமினிக் ட்ரேக்ஸ் நீக்கப்பட்டு, அல்சாரி ஜோசப் மற்றும் கார்ட்டி ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர்.

    ×