search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rowdy Alwin"

    • ரவுடி தாக்கியதில் காயம் அடைந்த ஏட்டு ராஜ்குமார் கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • ரவுடி ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சிகள் வழக்குகள் உள்பட மொத்தம் 13 வழக்குகள் உள்ளது.

    கோவை:

    கோவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி பிரபல ரவுடியான சத்தியாபாண்டி என்பவரை ஒரு கும்பல் ஓடஓட விரட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் ராஜா, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அடுத்த வாத்தியார் விளையை சேர்ந்த பிரபல ரவுடியான ஆல்வின் உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் ஜெயிலில் இருந்த ஆல்வின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார். ஜாமினில் வெளியில் வந்த பின்னர் அவர் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்தார்.

    இதுதொடர்பான வழக்கு கோவை ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆல்வினை நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் நீண்ட காலமாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

    இதையடுத்து ரவுடி ஆல்வினை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ரவுடி ஆல்வினை பிடிக்க ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஏட்டுகள் சந்திரசேகர், ராஜ்குமார், சசி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர், ரவுடி ஆல்வினை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்த நிலையில் ரவுடி ஆல்வின் கோவை கொடிசியா மைதான பகுதியில் பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர், ரவுடி ஆல்வின் இருக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரை போலீசார் தங்களிடம் சரண் அடையுமாறு தெரிவித்தனர்.

    போலீசார் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்ததும் ரவுடி ஆல்வின் அங்கிருந்து தப்ப முயன்றார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தன் அருகே வந்தால் உங்களை கத்தியால் வெட்டி விடுவேன் என மிரட்டினார்.

    அப்போது ஏட்டு ராஜ்குமார், ரவுடி ஆல்வினின் அருகே சென்று அவரை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி தான் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அப்படியே தரையில் விழுந்தார்.

    ரவுடி ஆல்வின் அங்கிருந்து ஓட முயன்றார். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், பாதுகாப்புக்காக, தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி ஆல்வினின் கால் முட்டிகளில் சுட்டார். இதில் அவரது 2 கால் முட்டிகளிலும் குண்டு பாய்ந்து, ரத்தம் வெளியேறியது. வலியால் அலறி துடித்த ரவுடி ஆல்வின், ஓட முடியாமல் அங்கேயே தரையில் விழுந்தார்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து காலில் குண்டுகள் பாய்ந்து காயம் அடைந்த ரவுடி ஆல்வினை காரில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு காலில் பாய்ந்த குண்டுகளை அகற்றி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சிகிச்சை முடிந்து, குணமாகியதும், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ரவுடி தாக்கியதில் காயம் அடைந்த ஏட்டு ராஜ்குமார் கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இதற்கிடையே ரவுடி சுட்டுபிடிக்கப்பட்ட கொடிசியா மைதான பகுதியில் துணை கமிஷனர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்த ரவுடி ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சிகள் வழக்குகள் உள்பட மொத்தம் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோவையில் பிரபல ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×