search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rowdy murder threat"

    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மரத்தில் ஏறி ரவுடி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை கார்பெட் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). பிரபல ரவுடி.

    இவர் இன்று காலை திடீரென கொசு மருந்து வி‌ஷத்தை குடித்து விட்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் ராணுவ பீரங்கியை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்க வருகைதர உள்ளதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதனால் ராஜசேகர், தான் வி‌ஷம் குடித்துள்ளதை நுழைவு வாயிலில் இருக்கும் போலீசார் கண்டுபிடித்து, தன்னை கைது செய்து விடுவார்கள் என கருதி கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லவில்லை.

    நுழைவு வாயில் எதிரே உள்ள சாலையில் ராஜசேகர் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். காலை சுமார் 9 மணி அளவில் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் வெளியே இருக்கக்கூடிய பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பெரிய புளியமரத்தில் திடீரென ஏறினார்.

    பின்னர் மரத்தின் நடுவில் நின்று கொண்டு ‘‘நான் கீழே விழப் போகிறேன். தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’’ என சத்தம் போட்டு கூறினார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக புளியமரம் அருகே ஓடி வந்தனர்.

    போலீசார், அவரிடம் நீ கீழே இறங்கி வா, எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தனர். ஆனால், அதனை ராஜசேகர் கேட்கவில்லை.

    தொடர்ந்து மரத்தில் நின்று கொண்டு நான் கீழே விழப் போகிறேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் வேறு வழியின்றி போலீசார், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்து ராஜசேகரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நாங்கள் உன்னை எதுவும் செய்ய மாட்டோம் என உறுதி அளிக்கிறோம், நீ கீழே இறங்கி வா? என்றனர்.

    அதற்கு ராஜசேகர், தேவையில்லாமல் என் மீது புகார் கூறி போலீசார் விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள். எனது வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதனால் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. என் மீது எந்த வழக்கும் போடக்கூடாது. நான் வி‌ஷம் குடித்துள்ளேன். என்னால் மரத்தில் இருந்து இறங்கி வர முடியாது. நான் கீழே குதிக்கிறேன் என்று தெரிவித்தார்.

    இதனால் அதிர்ந்து போன போலீஸ் அதிகாரிகள், ராஜசேகருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. வி‌ஷம் குடித்துள்ளதால் அவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என அங்கிருந்த போலீசாருக்கும், தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் உத்தரவிட்டனர். மேலும் அவரை காப்பாற்றுவதற்கான ஆலோசனைகளும் வழங்கினர்.

    அதன்பேரில் முன்எச்சரிக்கையாக மரத்தின் கீழே தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் சேர்ந்து பெரிய வலை ஒன்றை விரித்து கையில் இறுக்கமாக பிடித்து வைத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து அருகே உள்ள சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டது.

    பின்னர் மரத்தில் 2 போலீசார் ஏறி ராஜசேகர் தவறி கீழே விழுந்து விடாமல் இருக்க வேண்டி அவரை பிடித்து இடுப்பில் கயிறை கட்டினார்கள். இதையடுத்து மரத்தின் மீது ராட்சத ஏணியை வைத்து 2 போலீசார் மரத்தில் ஏறினார்கள்.

    அதன் பிறகு 4 போலீசாரும் சேர்ந்து ராஜசேகரை பத்திரமாக ஏணி படிக்கட்டு வழியாக இறக்கினர். பின்னர் போலீசார், அவரை முதலில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.

    ராஜசேகர் அனுமதியின்றி வெளியே இருந்து மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்று வந்தார். இது பற்றி பொதுமக்கள் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து ராஜசேகரை சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது. ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.

    ஜாமீனில் வெளிவந்த ராஜசேகர் மீண்டும் மது விற்பனையை தொடங்கினார். இதனால் போலீசார் ராஜசேகரிடம் மது விற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அவர் இன்று காலை கொசுமருந்து குடித்து மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இவ்வாறு போலீசார் கூறினர். #tamilnews
    ×