search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "s jaisankar"

    • குமரி மாவட்ட மூன்று மீனவர்கள், இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
    • கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

    டெல்லி:

    கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீட்பு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

    வெளிநாட்டு சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் துயரங்கள் குறித்து தெரிவித்த அவர், கடலில் மீன் பிடிக்க செல்லும்போது வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்வதை அவர் எடுத்துரைத்தார்.

    குறிப்பாக இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை அரசு தலையிட்டு விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிறையில் இருந்த போது ஒரு மீனவர் உயிரிழந்ததையும் மற்றும் மீனவர்களின் படகுகள் மற்றும் பொருட்கள் அந்த அரசின் வசம் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

    இத்தகைய கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் தூதரக ரீதியான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்தகைய பேச்சு வார்த்தைகளின் போது கடலோர பாராளுமன்ற தொகுதிகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து கருத்து கேட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மீனவர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் அவர்களது பாஸ்போர்ட்களை வேலை செய்யும் நிறுவனங்கள் பிணையாக எடுத்துக் கொள்வதை சுட்டிக்காட்டிய விஜய்வசந்த் எம்.பி., மீனவர்கள் நாடு திரும்ப விரும்பும் போது பாஸ்போர்ட் கிடைக்காமல் தவிப்பதாக கூறினார்.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் ஓமன் நாட்டில் இத்தகைய சந்தர்ப்பத்தில் சிக்கி அலை கழிக்கப்படுவதையும் அப்போது அவர் தெரிவித்தார்.  இந்திய தூதரகங்கள் இந்த விஷயங்களில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

    ×