search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sadhabishegam"

    கடலூரில் தந்தையின் சதாபிஷேக விழாவில் நாகபாம்பை வைத்து பூஜை செய்த புரோகிதரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பாம்பாட்டியை தேடிவருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 45). இவர் கடலூரில் உள்ள ஒரு கோவிலில் புரோகிதராக உள்ளார்.

    இவரது தந்தைக்கு 80 வயது பூர்த்தியானதை தொடர்ந்து அவருக்கு சிறப்பாக சதாபிஷேக விழா நடத்த முடிவு செய்தார்.

    நாகபாம்பை வைத்து பூஜை செய்தால் பெற்றோரின் ஆயுள் கூடும் என கருதி அதை வைத்து பூஜை நடத்த திட்டமிட்டார்.

    தந்தையின் சதாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும்படி உறவினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் விழா நடந்தது. பாம்பாட்டி பழனி ஒரு நாக பாம்பை கொண்டு வந்தார். சுந்தரேசனின் பெற்றோர் முன்பு நாகபாம்பை வைத்து பூஜை செய்யப்பட்டது.

    விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் இந்த பூஜையை செல்போன் மூலம் படம் எடுத்தனர். மேலும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். சதாபிஷேகத்தில் எடுக்கப்பட்ட படங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.

    இது கடலூர் மாவட்ட வனத்துறையினர் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வனவர் அப்துல் மற்றும் வனத்துறையினர் நாகபாம்பை வைத்து பூஜை செய்தது தொடர்பாக புரோகிதர் சுந்தரேசனிடம் விசாரணை நடத்தினர்.

    வன விலங்கை துன்புறுத்தும் வகையில் அதை பயன்படுத்தியதாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து புரோகிதர் சுந்தரேசனை கைது செய்தனர்.

    பின்னர் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நாகபாம்பை பூஜைக்கு கொடுத்த பாம்பாட்டி பழனி தலைமறைவாகி விட்டார். அவரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.

    மேலும் சதாபிஷேக விழாவில் கலந்து கொண்டவர்களிடமும் விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×