search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "safe place"

    • காவிரி கரையோரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பெருகமணி, மாதவபெருமாள் கோவில், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அமைச்சர் கே.என். நேரு சந்தித்தார்
    • மேட்டூரில் தற்போது 2.17 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது.

    திருச்சி :

    திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே‌.என்.நேரு இன்று காலை முக்கொம்பு அணையில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் காவிரி கரையோரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பெருகமணி, மாதவபெருமாள் கோவில், பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்தார். அவர்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேட்டூரில் தற்போது 2.17 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. தண்ணீரின் அளவு குறைந்து பாதுகாப்பான சூழல் நிலவும் வரை இந்த முகாமில் பொதுமக்கள் பாதுகாப்பாக இங்கேயே இருப்பார்கள். தற்போது இந்த முகாம்களில் 309 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    கொள்ளிடத்தில் உள்ள பழைய பாலத்தை இடித்து அப்புறப்படுத்த ஏற்கனவே ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பாலம் தானாக விழுந்தால் ரொம்பவும் நல்லது. தற்போது லால்குடி பகுதியில் 100 ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது என்றார்.

    இந்த ஆய்வின்போது, திருச்சி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம், எம்.எல்.ஏ. பழனியாண்டி, ஒன்றியக்குழுத் தலைவர் துரைராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×