search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sajeeb wazeb"

    • பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • அவாமி லீக் கட்சிக்காக நிச்சயம் வங்காளதேசம் திரும்புவார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.

    வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்கள் போராட்டம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா வந்துள்ளார்.

    இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ள அவர், இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்து இது தொடர்பாக எந்த பதிலும் அளிக்காமல் உள்ளது. இதற்கிடையே இந்தியாவும் அவருக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்குமா? என்பதில் கேள்வி எழுந்தது.

    இதனால் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடு எது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தனது தாயார் வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பிய பின், சொந்த நாடு திரும்புவார் என ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் தெரிவித்துள்ளார்.

    சஜீப் வசேத் பிடிஐ-க்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    எனது தாயார் ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார். அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் திரும்புவாரா? அரசியல் செயல்பாட்டுடன் திரும்புவாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

    ஷேக் முஜிபுர் ரஹ்மான் குடும்ப உறுப்பினர்கள் நாட்டு மக்களை கைவிட்டுவிட மாட்டார்கள். அதேபோல் பாதிக்கப்பட்டுள்ள அவாமி லீக் கட்சியையும் கைவிடமாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்.

    தனது தாயைப் பாதுகாத்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச கருத்தை உருவாக்கவும் அழுத்தம் கொடுக்கவும் இந்தியா உதவ வேண்டும் என இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பமாட்டார் என்று நான் சொன்னது உண்மைதான். ஆனால், நாடு முழுவதும் அவாமி லீக் தலைவர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

    இப்போது நாங்கள் எங்கள் மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க என்ன வேண்டுமானாலும் செய்யப் போகிறோம். நாங்கள் அவர்களை அப்படியே விட்டுவிடப்போவதில்லை.

    அவாமி லீக் வங்கதேசத்தின் மிகவும் பழமையான கட்சி. ஆகவே, அக்கட்சி தொண்டர்களிடம் இருந்து அப்படியே விலகிச் செல்ல முடியாது. வங்கதேசத்தில் மீண்டும் ஜனநாயகம் திரும்பும்போது ஷேக் ஹசீனா உறுதியாக வங்காளதேசம் திரும்புவார்.

    சூழ்நிலை ஆதாரங்களை வைத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலையீடு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். தாக்குதல்கள் மற்றும் எதிர்ப்புக்கள் மிகவும் ஒருங்கிணைக்கப்பட்டவை, துல்லியமாக திட்டமிடப்பட்டவை மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நிலைமையைத் தூண்டிவிட வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் என்ன செய்தாலும், அவர்கள் நிலைமையை மோசமாக்க முயன்றனர்.

    இவ்வாறு சஜீப் வசாத் தெரிவித்துள்ளார்.

    ×