search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem Chennai greenway road"

    அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு கருத்து கேட்க தேவையில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #LandAcquisition #MadrasHC
    சென்னை:

    சென்னை-சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்தும்போது மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை என்ற சட்டப்பிரிவை நீக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இவ்வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் உள்ள பிரிவு 105-ன்படி, தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும்போது சமூக பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அவசியம் இல்லை என குறிப்பிட்டுள்ளதாகவும், இது மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை தடுக்கும் வகையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, நில உரிமையாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்துப் பலன்களும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். அதன் நகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த திட்டத்திற்கு நிலம் வழங்குபவர்களுக்கு சந்தை மதிப்பை விட 3 முதல் 4 மடங்கு வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த வழக்கில் மனுதாரர் மற்றும் மத்திய அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அவசர தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்த கருத்து கேட்க தேவையில்லை என்ற சட்டப்பிரிவு செல்லும் என்று கூறிய நீதிபதிகள், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜனின் மனுவை தள்ளுபடி செய்தனர். #LandAcquisition #MadrasHC
    பாப்பிரெட்டிப்பட்டியில் போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளிடம் கருத்து கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழி பசுமைச் சாலையானது ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது. இந்த பசுமை வழிச்சாலையானது தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக சுமார் 919.24 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது.

    பசுமை வழிச்சாலை அமைவதால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோம்பூர், காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்டுசாலை, கோட்டமேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

    போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்திப்பது தவறு என்று அரூர் டி.எஸ்.பி. செல்ல பாண்டியன் கூறினார். ஆனால் போலீஸ் தடையை மீறி தொடர்ந்து பாலபாரதி மற்றும் மார்க்சிஸ்டு கட்சியினர் விவசாயிகளிடம் கருத்து கேட்டனர். இதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலர் ஏ.குமார் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. என்றாலும் போலீசார் அவர்களை வேனில் ஏற்றி சென்றனர். இரவு அவர்களை போலீசார் விடுதலை செய்தனர்.

    சென்னை முதல் சேலம் வரையிலான பசுமை வழிச்சாலையால் மலைவாழ் பழங்குடியின மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கின்றது. பசுமை வழிச்சாலையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

    வருவாய்த்துறை சார்பில் விவசாயிகளிடமிருந்து ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. பசுமை வழிச்சாலையை விவசாய நிலங்கள், வீடுகள், கல்வி நிறுவனங்கள் பாதிக்காத வகையில் மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்.

    பசுமை வழிச்சாலை குறித்து கருத்து தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்வதை அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாலபாரதி கைதை கண்டித்து தருமபுரி, அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிளில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பாலபாரதி உள்பட 15 பேர் மீது எ.பள்ளிப்பட்டி போலீசார் இன்று காலை வழக்கு பதிவு செய்தனர். சட்டவிரோதமாக கூடுதல், பதட்டத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் கூறினார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கு முறை ஏவப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைக் கூட தமிழக அரசு பறித்து வருகிறது. அரசு திட்டங்களுக்கு மாற்றுக்கருத்து கூறுகிறவர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்படுகிறார்கள். ஊடகங்கள் மீதும் வழக்கு போடப்பட்டு மிரட்டப்படுகிறது.

    இந்த அடக்குமுறைப் போக்கைக் கைவிடுமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலை நடைமுறைப்படுத்தபடுகிறது.

    ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்பட்ட உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. விவசாயிகளை சந்தித்து கருத்துக் கேட்பவர்களைக் கூட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்து காவல்துறை கைது செய்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டில்லி பாபு, பாலபாரதி உள்ளிட்டவர்களும் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களும், தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.


    ஜனநாயகத்துக்கு எதிராக அரசு நடந்து கொள்ளும் போது நீதிமன்றங்களே மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருக்கிறது.

    கூட்டத்திற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்று முடிவு செய்வதை விட்டு விட்டு சேலம்-சென்னை எட்டுவழி சாலை திட்டத்தைப் பாராட்டியும் அதற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிப்பதாக இருக்கிறது.

    அடக்குமுறையால் மக்களின் நியாயமான உணர்வுகளை நசுக்கிவிட முடியாது. இதை மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    எந்தக் காரணம்கொண்டும் மத்திய அரசின் நிர்பந்தத்துக்குத் தமிழக அரசு பணிந்து போகக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். அடக்குமுறைப் போக்கைக் கைவிட்டு ஜனநாயக வழியில் நடக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thirumavalavan #HighCourt
    ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    சென்னை- சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் வரை 274 கி.மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்கள் அளவிடப்பட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சமூக வலை தளங்களில் தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார். மேலும் தொலைக்காட்சி, ஊடகங்களிலும் பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறார்.

    பசுமை வழிச்சாலை அமைத்தால் 16 பேரை வெட்டுவேன் என்று அவர் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி சேலம் மாவட்ட குள்ளம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் லிங்கேஸ்வரன் காரியாப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே மதுரவாயல் ஆலப்பாக்கம் சீனிவாசன் நகரில் உள்ள வசீகரன் வீட்டுக்கு இன்று அதிகாலை காரியாப்பட்டி போலீசார் வந்தனர். அவர்கள் சென்னை போலீசாரின் உதவியோடு வசீகரனை கைது செய்தனர். பின்னர் அவரை காரியாப்பட்டிக்கு அழைத்து சென்றனர்.

    வசீகரன் மீது 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    ×