search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scavenging issue"

    • கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது.
    • சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    திண்டுக்கல்:

    கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை செல்லவில்லை.

    அந்த மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் தொடர்ந்து சாராயம் காய்ச்சப்படுவதாக புகார்கள் வந்தது. இதில் தி.மு.க.வினரின் தலையீடு இருப்பதால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நான் வனத்துறை அமைச்சராக இருந்தபோது சம்பவ இடத்திற்கு அதிகாரிகளுடன் சென்று சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுத்து நிறுத்தினேன். ஆனால் தி.மு.க. அரசில் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளது. அதனால்தான் இப்பிரச்சினையில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரிகளில் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது. இதுகுறித்து நாங்கள் கேள்வி எழுப்பிய போது சுகாதாரத்துறை அமைச்சர் அதனை திசைதிருப்ப முயற்சிக்கிறார். சட்ட பேரவையில் இதுகுறித்து பேச அ.தி.மு.க.விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தான் நாங்கள் வெளிநடப்பு செய்தோம். தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அரசை கண்டிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    மக்களுக்கு பயன்தராத கொடுமையான ஆட்சி நடந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து மக்களை அடைத்து வைத்துள்ளனர். இதுபோல் நடக்கும் என்பதால்தான் நாங்கள் தேர்தலில் போட்டியிட வில்லை. பாராளுமன்ற தேர்தலில் பணம் கொடுத்து 40 எம்.பி.களை விலைகொடுத்து வாங்கியதுபோல சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று விடலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசுகையில், `இது திராவிட மாடல் ஆட்சி அல்ல. சாராய மாடல் ஆட்சி. தகுதியில்லாதவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. ஆட்சி, நிர்வாகத்தில் தி.மு.க.வினரின் குடும்ப தலையீடு அதிக அளவில் உள்ளது. விலைமதிப்பற்ற 60 உயிர்கள் பலியான போதும் தி.மு.க. அரசு அதுபற்றி கவலைப்படாமல் அலட்சியமாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் வருகிற சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×