search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school van driver killed"

    திருச்சி அருகே பள்ளி வேன் டிரைவர் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவெறும்பூர்:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் பாத்திமா நகர், இந்திரா நகரைச் சேர்ந்தவர் அப்பாஸ் அலி (வயது 36). சொந்தமாக ஆம்னி கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார்.

    மேலும் பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றி செல்லும் வேலையும் பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை அப்பாஸ் அலி திருச்சி மஞ்சத்திடல்-பாப்பாக்குறிச்சி இடையே உள்ள சுடுகாடு அருகில் தனக்கு சொந்தமான ஆம்னி வேனில் உடல் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் அங்கு சென்று காரில் தீயில் கருகிய நிலையில் கிடந்த அப்பாஸ் அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்பாஸ் அலிக்கு கடன் பிரச்சினை இருந்துள்ளது. எனவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அவரது உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பினர்.

    அப்பாஸ் அலி நேற்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது தாய் நூர்ஜகானிடம் சவாரி உள்ளதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில்தான் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அப்பாஸ் அலி உடலில், தலை, கை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன. காரில் 5 லிட்டர் பெட்ரோல் கேனும் எரிந்த நிலையில் கிடந்தது.

    அவரை மர்ம நபர்கள் சவாரி இருப்பதாக கூறி அழைத்து சென்று, வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு, இங்கு வந்து உடலை போட்டு சென்றுள்ளனர். உடலை எரிக்க முயன்றுள்ளனர். ஆனால் அப்போது யாராவது வந்திருக்கலாம். அதனால் உடலை பாதியிலேயே அப்படியே போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.

    நேற்று காலை சவாரிக்கு சென்ற அப்பாஸ் அலி திருச்சி ஏர்போட் பகுதியில் காரில் சுற்றியதாக அவரது செல்போன் டவர் காட்டுகிறது. அதன்பிறகு காலை 9 மணிக்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே அதன் பிறகு தான் அவர் அடித்து கொலை செய்யபட்டிருக்கலாம் என உறவினர்கள் கூறுகிறார்கள்.

    வாடகை கார் ஓட்டி வந்த அப்பாஸ் அலி சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பொதுப்பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முன் நின்று தீர்த்து வைப்பார். எனவே இதில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    காரில் கிடந்த கேன் மற்றும் செல்போன் பொருட்களை கைப்பற்றிய போலீசார் தடயவியல் நிபுணர்களையும் வர வழைத்து துப்பு துலக்கினர். தடயவியல் நிபுணர்கள் காரில் இருந்த கை ரேகைள். பெட்ரோல் கேன் மற்றும் கார் கதவுகளில் இருந்த கை ரேகைகள் ஆகியவற்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அப்பாஸ் அலி உடல் பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு தான் இதில் உள்ள மர்மங்கள் விலகும்.

    கொலையுண்ட அப்பாஸ் அலிக்கு பேகம், என்ற மனைவியும், அப்துல் அஜித் என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் அப்பாஸ் அலியின் உடல் பிரேத பரி சோதனை நடைபெறும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தலைவர் ஹசன் தலைமையில் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.

    அப்பாஸ் அலி கொலையில் உரிய விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    ×