search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seaplane"

    • கடல் விமானம் நீர்நிலைகளில் தரையிறங்கி, அதன் பிறகு நீர்நிலை பரப்பில் ஓடி வானில் பறக்க தொடங்கும்.
    • கேரளாவுக்கு 5 பேர் பயணிக்கக்கூடிய கடல் விமானமே சோதனை ஓட்டத்திற்கு வந்திருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சுற்றுலா பயணிகளை கவருவதற்காக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை கடல் விமான சுற்றுலாவை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இந்த சேவையின் சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக கேரள மாநிலத்திலும் கடல் விமான சுற்றுலா சேவை தொடங்கப்பட உள்ளது. கேரளாவில் கடல் விமான சுற்றுலா கொச்சியில் இருந்து மூணாறுக்கு இடையே தொடங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது.

    இதற்காக 5 பேர் பயணிக்கக்கூடிய கடல் விமானம் நேற்று கொச்சி வந்தது. கொச்சி போல் காட்டி காயல் பகுதியில் தரையிறக்கப்பட்டது. அங்கிருந்து இன்று புறப்படும் விமானம், மூணாறு அருகே உள்ள மாட்டுப்பெட்டி நீர்த்தேக்கத்தில் தரையிறக்கி சோதனை செய்யப்படுகிறது.

    இந்த சோதனை ஓட்டத்தை கேரள மாநில சுற்றுலாத்துறை மந்திரி முகம்மது ரியாஸ் தொடங்கி வைக்கிறார். மூணாறில் தரையிறங்கும் கடல் விமானத்தை அந்த மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

    கடல் விமானம் நீர்நிலைகளில் தரையிறங்கி, அதன் பிறகு நீர்நிலை பரப்பில் ஓடி வானில் பறக்க தொடங்கும். அவ்வாறு பறக்கும் போது நிலப்பரப்பில் உள்ள இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.

    கேரள மாநிலத்தில் கடல் விமான சேவை சுற்றுலாவுக்கு மட்டுமின்றி அவரச காலங்களிலும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது. 9 முதல் 30 பேர் வரை பயணிக்கக்கூடிய வகையில் கடல் விமானங்கள் இருக்கின்றன. ஆனால் கேரளாவுக்கு 5 பேர் பயணிக்கக்கூடிய கடல் விமானமே சோதனை ஓட்டத்திற்கு வந்திருக்கிறது.

    கேரளாவில் கொல்லம்-ஆலப்புழா இடையே கடல் விமான சேவை தொடங்க பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது.கொல்லம் அஷ்டமுடி ஏரியில் கடல் விமான திட்டத்தை கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியும் வைத்தார்.

    ஆனால் மீனவர்களின் போராட்டம் காரணமாக அந்த திட்டம் அப்போது கைவிடப்பட்டது. கேரளாவில் தற்போது அந்த திட்டம் மீண்டும் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×