search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Second Year Classes"

    • அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் அரசு மாதிரி மேல்நிலை இரண்டாமாண்டு வகுப்புகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    • அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் அரசு மாதிரி மேல்நிலை இரண்டாமாண்டு வகுப்புகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் தமிழக அரசால் சிறப்புத் திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் தற்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடத்தப்பட்ட வினாடி, வினா தேர்வு மற்றும் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் மாநில கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.

    அதனடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    மாணவ, மாணவிகளின் விருப்பத்தின் பெயரில் தற்போது 40 மாணவர்கள், 40 மாணவிகளுடன் அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உண்டு, உறைவிடத்துடன் கூடிய மாதிரி பள்ளி மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இம்மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து விதமான தேர்வுகளிலும் பங்கேற்கும் வகையில் சிறப்பு பாட வல்லுநர்களை கொண்டு திறன் கரும்பலகை எனப்படும் ஸ்மார்ட் போர்ட் மூலம் இணைய வகுப்புகள், பல்வேறு பள்ளிகளிலுள்ள சிறந்த ஆசிரியர்களை கொண்டு நேரடி வகுப்புகளும் நடத்தப்படும்.

    மேலும், தினசரி வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் மாணவ, மாணவிகளும் தங்கி பயில்வதற்கான அனைத்து வசதிகளுடன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் இந்த வசதிகளை முறையாக பயன்படுத்தி பெற்றோர், ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் கலியபெருமாள், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×