search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengottai train track"

    செங்கோட்டை அருகே ரெயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடப்பதை தூரத்தில் வரும் போதே என்ஜின் டிரைவர் பார்த்து ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    செங்கோட்டை:

    ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் செங்கோட்டை- புனலூர் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த மீட்டர் கேஜ் ரெயில்கள் நிறுத்தப்பட்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இதற்காக கடந்த 2010-ம் ஆண்டு ரெயில்சேவை நிறுத்தப்பட்டது.

    ஆரியங்காவு உள்ள பகுதிகளில் குகை மற்றும் மலை பகுதிகளாக காணப்பட்டதால் அகல ரெயில் பாதை பணிகள் தாமதமானது. இதையடுத்து பணிகளை விரைந்து முடிக்ககோரி பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்த கோரிக்கைவிடுத்துவந்தனர்.

    இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 30-ந் தேதி முதல் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. நெல்லையில் இருந்து தென்காசி, செங்கோட்டைக்கு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்னர் பயணிகள் ரெயில் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புனலூர் ரெயில்பாதை பணிகள் முடிவடைந்து அகலப் பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

    இதையடுத்து நெல்லையில் இருந்து கேரளாவுக்கு தென்காசி, செங்கோட்டை வழியாக கூடுதல் ரெயில் இயக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து புனலூர் வரை இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட‌து.


     

    அதன்படி புனலூர்- பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரை நீட்டித்து தென்னக ரெயில்வே அறிவித்தது. இந்த ரெயில் கடந்த 9-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கொல்லத்தில் இருந்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 12.30-க்கு புறப்பட்டு அதிகாலை 3.50-க்கு செங்கோட்டை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

    இந்நிலையில் வழக்கம் போல் கொல்லத்தில் இருந்து புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை பகவதிபுரம் அருகே உட்கோணம் என்ற காட்டுப் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் ஒரு ராட்சத மரம் விழுந்து கிடந்தது. இதைப்பார்த்த ரெயில் என்ஜின் டிரைவர் அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் உடனடியாக ரெயிலை நிறுத்தினர். இதுகுறித்து பகவதிபுரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் உதவியுடன் விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் மீட்டு பணியில் தாமதம் ஏற்பட்டது.

    இதையடுத்து கடும் போராட்டத்திற்கு பின்னர் மரம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு தண்டவாளத்திலிருந்து அகற்றப்பட்டது. இதையடுத்து பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் புறப்பட்டது. அதிகாலை நேரம் என்பதாலும், காட்டுப்பகுதியில் ரெயில் நின்றதாலும் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.

    ரெயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் விழுந்து கிடப்பதை தூரத்தில் வரும் போதே என்ஜின் டிரைவர் பார்த்து ரெயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக அதிகாலை 3.50மணிக்கு செங்கோட்டை வரவேண்டிய பாலருவி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதமாக காலை 6.50 மணிக்கு வந்தது. பின்பு அங்கிருந்து நெல்லைக்கு புறப்பட்டது.

    ×