என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shops"

    • விருதுநகர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 கடைகள்-நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த் ஆணையின்படி கடைகள் மற்றும் வர்த்தக நிறுவ னங்களில் குறிப்பாக தனியார் நிதி நிறுவனங்கள், மருந்து கடைகள், ஸ்கேன் ைமயங்கள், ஸார்டுவேர் கடைகள், பரிசோதனை மையங்கள், கால் சென்டர்கள் உள்ளிட்ட நிறுவனங்க ளில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிடப் பட்டது.

    அதன்படி இந்த கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 17 நிறுவனங்கள் மீது முரண்பாடு கண்டறியப்பட்டது. 17 நிறுவனங்கள் மீது மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு, 17 நிறுவனங்களில் பணிபுரிந்த 35 தொழிலாளர்களுக்கு குறைவுச்சம்பளம் ரூ.9லட்சத்து 66ஆயிரத்து 56-ஐ பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களும் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின் கீழ் அந்தந்த தொழில் நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை (ஊதியம் மற்றும் அகவிலைப்படி) அளிக்க வேண்டும். குறைவு ஊதியம் தொடர்பான புகார் தெரிவிக்க 04562-225130 என்ற விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஆய்வில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி முதல் மற்றும் 2-ம் சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மார்ச் 29-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற்றது.
    • 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து பெருமாநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மார்ச் 29-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற்றது. இதற்காக தற்காலிகமாக 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருவிழா முடிந்து கடைக்காரர்கள் ஒவ்வொருவராக கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இன்று காலை பணிகள் நடைபெற்றது.

    அப்போது திடீரென 300 அடி நீளமுள்ள மேற்கூரை சரிந்து விழுந்தது. இதனால் கடைகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தது. முதியவர் உட்பட 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கோவில் திருவிழா முடிவடைந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில், பந்தல் ஒப்பந்ததாரர் முறையாக பந்தலை அமைக்கவில்லை என வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உரிம கட்டணம் 11 மாதங்களுக்கு ஒருமுறை 8 சதவீத அடிப்படையில் உயர்த்தப்படும்.
    • சரக்கு மற்றும் சேவைவரி உரிம கட்டணத்திற்கு 18 சதவீதம் தனியாக செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    முன்னாள் படைவீரர் நலத்துறையை சேர்ந்த தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகையில் சுமார் 36658 சதுர அடி இடத்தில் 8328 சதுர அடி கட்டிடம் உள்ளது. அதில் 11 கடைகள் மற்றும் 2 அலுவலக அறைள் காலியாக உள்ளது.

    இந்த கடைகள் மற்றும் அலுவலக அறைகள் மாதாந்திர உரிம கட்டணம் அடிப்படையில் வாடகைக்கு வழங்கிட ஒப்பந்த விலைப்புள்ளிகள் இதன் மூலம கோரப்படுகிறது.

    உரிம கட்டணம் ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். மின்கட்டணம் உரிமதாரரால் செலுத்தப்பட வேண்டும். முன் வைப்பு தொகையானது உரிம கட்டணத்தின் 11 மாதங்களுக்கான மொத்த தொகையை செலுத்த வேண்டும்.

    உரிம கட்டணம் 11 மாதங்களுக்கு ஒருமுறை 8 சதவீத அடிப்படையில் உயர்த்தப்படும். மேலும் அரசு விதிகளின் படி சரக்கு மற்றும் சேவைவரி உரிம கட்டணத்திற்கு 18 சதவீதம் தனியாக செலுத்த வேண்டும்.

    எனவே விருப்பம் உள்ளவர்கள் அடுத்த மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தங்களது ஒப்பந்த விலைப்புள்ளியினை மூடிய உறையில் முத்திரையிடப்பட்டு கடை எண்யை பதிவு செய்து ஒப்பந்த விலைப்புள்ளி என்பதனை தெளிவாக குறிப்பிட்டும், செயலாளர், ராணுவத்தினர் மாளிகை, தலைமை தபால் நிலையம் எதிரில், தஞ்சாவூர்-01 என்னும் முகவரியில் சமர்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் ஒப்பந்த விலைப்புள்ளிகள் எந்த காரணத்திற்காகவும் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேண்டீன் நடத்திட கடைகள் ஒதுக்கப்பட மாட்டாது.

    இந்த ஒப்பந்த விலைப்புள்ளி அறிவிப்பிற்கான விலைப்புள்ளி சமர்பிக்கும் கடைசி தேதி நீட்டிப்பு செய்யவோ அல்லது இந்த அறிவிப்பை முழுமையாக ரத்து செய்யவோ தஞ்சாவூர் மாவட்ட ராணுவத்தினர் மாளிகை நிர்வாகத்திற்கு மட்டுமே முழு அதிகாரம் உண்டு. மேலும் ஒப்பந்த விலைப்புள்ளியின் மீது இறுதி முடிவு தஞ்சாவூர் மாவட்ட ராணுவத்தினர் மாளிகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாநாட்டில் பங்கேற்க வியாபாரிகள் வேன், கார்களில் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
    • டவுன் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    வணிகர் தினத்தை யொட்டி இன்று ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநாடு நடக்கிறது. இதில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்ற னர்.

    இதனையொட்டி இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் கடைகளை அடைக்கும்படியும், மாநாட்டில் கலந்து கொள்ளும்படியும் வணிகர்க ளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    இதனையொட்டி நெல்லை மாவட்டத்தில் இருந்து மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு முதலே வியாபாரிகள் வேன், கார்களில் ஈரோட்டிற்கு புறப்பட்டு சென்றனர். இதனால் இன்று நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை டவுன் ரதவீதியை சுற்றிலும் அமைந்துள்ள கடைகளில் பெரும்பா லானவை அடைக்கப்பட்டு இருந்தது. டவுன் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கடைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பாளை மார்க்கெட் பகுதிகளிலும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த வியா பாரிகள் பெரும்பாலானோர் கடை களை அடைத்திருந்த னர். இதனால் மார்க்கெட் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    மாநகரில் பேக்கரி, பலசரக்கு, ஹார்டுவேர்ஸ் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மருந்து கடைகள் வழக்கம்போல் இயங்கின. பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் வழக்கம்போல் இயங்கியது.

    களக்காட்டில் புதிய பஸ் நிலையம், அண்ணாசாலை, பழைய பஸ் நிலையம், சேரன்மகாதேவி சாலை, கோவில்பத்து பகுதிகளில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் மாவட்டத்தில் அம்பை, வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி, மானூர், முக்கூடல் உள்ளிட்ட பகுதி களிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    • கடைகளில் காலாவதியான எலக்ட்ரானிக் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் இறைச்சி கடைகளில் பொதுமக்களுக்கு கிலோ கணக்கில் வழங்கப்படும் மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளின் எடை அளவுகள் குறைவாக இருப்பதாக பொதுமக்களி டம் இருந்து மாவட்ட தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாவட்ட தொழிலாளர் துறையின் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மைவிழி செல்வி உத்தரவின்பேரில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் வீரசோழன் பகுதிகளில் உள்ள மீன், கோழி, மட்டன் கடைகளில் தொழிலாளர் துறை ஆய்வாளர் சதாசிவம், உதவி ஆய்வாளர் உமா மகேஸ்வரன் தலைமையி லான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    தராசுகளில் சரியான அளவு காட்டுகிறதா? என சோதனையிட்ட அதிகாரி கள் தாங்கள் கொண்டு வந்த எடைக்கற்கள் தராசு களில் வைத்து அளவுகளை சரிபார்த்து ஆய்வுகள் மேற்கொண்டனர். கடைக்கு இறைச்சி வாங்க வந்த பொதுமக்களிடம் கடைகளில் வழங்கப்படும் இறைச்சியின் எடை சரியான அளவில் இருக்கி றதா? என்றும் விசாரித்தனர்.10-க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனையின்போது சில இறைச்சி கடைகளில் தராசுகள் காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. காலாவதி யான எலக்ட்ரானிக் தராசு, எடை மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
    • 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன.

    பல்லடம் :

    தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களுக்கு சுமார் 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் உள்ளன. இவற்றில் குறைந்த வாடகை, மற்றும் வாடகை இல்லாமலே குத்தகைதாரர்கள் உள்ளனர். இந்துக்கோவில்களின் வருமானத்தை உயர்த்துவதற்காக, கோவில்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள், ஆகியவற்றின் வாடகை, குத்தகை தொகை போன்றவைகளை உயர்த்துவதற்கு இந்து அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இந்துக்கோவில்களுக்கு சொந்தமான கடைகள் மற்றும் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்த நிலையில், அவற்றுக்கு நீண்ட காலமாக குறைந்த வாடகை, மற்றும் குறைந்த குத்தகை தொகை செலுத்தி வருகின்றனர். அவற்றை சரிபார்த்து, வாடகை மற்றும் குத்தகை தொகைகளை உயர்த்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும். தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து வாடகை மற்றும் குத்தகை தொகை ஆகியவற்றை உயர்த்தி கோவில்களின் வருமானத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம், அமுதம் நியாய விலைக்கடையில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொருட்களின் இருப்பு, விற்பனை செய்யப்பட்டது போக மீதமுள்ள இருப்பினை சரிபார்த்தார்.

    பின்னர் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், பொது விநியோக பொருட்கள் அனைத்தும் கிடைகிறதா என்றும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார்.

    பின்னர், விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை அதிநவீன விற்பனை முனைய கருவியினை (பாயிண்ட் சேல்ஸ் மிசின்) இயக்கி அதில் பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார்.

    மேலும், நியாய விலை கடையில் உள்ள குடோனில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு மூட்டைகளை நேரில் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சேந்தமங்கலம் வட்டாட்சியர் செந்தில், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
    • மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் மற்றும் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இங்கு உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தர வேண்டி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் அதிகாரிகள் மற்றும் கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மற்றும் வியாபாரிகள் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகரில் இடம் தேர்வு செய்வதற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா விடம் வலியுறுத்தி மனு அளித்தார். இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டார். இதனை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து பணிகளையும் உடனுக்குடன் முடித்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி பொறியாளர் மாலதி, உதவி பொறியாளர் மகாதேவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், தனித்தனி கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது.
    • தரை தளத்தில் 9 கடைகள், பயண அலுவலகம் மற்றும் ஆண், பெண் கழிவறைகள் உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 41 லட்சம் மதிப்பில் ஆம்னி பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்து விட்டன.

    இந்த நிலையில் இன்று மதியம் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நேரில் சென்று ஆம்னி பஸ் நிலையத்தை பார்வை யிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-தஞ்சையில் ஆம்னி பஸ்கள் இதற்கு முன்னர் பழைய பஸ் நிலையம் அருகே ஆங்காங்கே நின்று கொண்டிருந்தது. இதனால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

    இதனை ஒழுங்குப்படுத்தி ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பஸ் நிலையம் கட்ட மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கி முடிவடைந்து விட்டன.

    5400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பஸ் நிலையத்தில் 26 பஸ்களை நிறுத்தி வைக்கலாம். தரை தளத்தில் 9 கடைகள், பயண அலுவலகம் மற்றும் ஆண், பெண் கழிவறைகள் உள்ளன.

    முதல் தளத்தில் 7 கடைகளும், 6 தங்கும் அறைகளும், தனித்தனி கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது. நான்கு சக்கர இலகு ரக வாகனங்கள், தானியங்கி மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என முன்புறம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சுற்றி வர தார் சாலையும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆம்னி பஸ் நிலையத்தால் பயணிகள் மிகவும் பயனடைவர். விரைவில் ஆம்னி பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது போது துணை மேயர் அஞ்சுகம் பூபதி, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் ரமேஷ், 51-வது வார்டு தி.மு.க. செயலாளர் ராஜகுமார், மாவட்ட பிரதிநிதி உதேக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.படவிளக்கம்தஞ்சையில் ஆம்னி பஸ் நிலையத்தை மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அருகில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் உள்ளனர்.

    • 10 கடைக்காரர்களுக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது.
    • மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர் .

    அவினாசி

    உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்றுஅவினாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன் தலைமையில் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் அவினாசியை அடுத்து கருவலூரில்உள்ள மளிகை கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரிகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர் .

    அப்போது அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்ததாக 10 கடைக்காரர்களுக்கு தலா ரூ .500 அபராதம் விதிக்கப்பட்டது.

    • பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.
    • அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இது திறக்கப்படுகிறது.

    இந்த பஸ் நிலையத்தின் தரை தளத்தில் கடைகள், உணவகம், டீக்கடை, பியூட்டி பார்லர், மற்றும் டிக்கெட் கவுண்டர் உள்ளிட்டவைகள் அமைகிறது.

    முதல் தளத்தில் டிரைவர்கள் கண்டக்டர்கள் தங்குவதற்கும், பொதுமக்கள் அமர்வதற்கும் டார்மெட்ரி வகையில் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. இந்த பஸ் நிலையத்தின் வடிவமைப்பு குளறுபடி காரணமாக அதை சரி செய்யும் பணியை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக இந்த துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவ்வப்போது உயர் அதிகாரிகளுடன் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    மழை பெய்தால் இப்போது அங்கு தண்ணீர் தேங்குகிறது. அதை சரிசெய்ய வழிவகை காணுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். பஸ்கள் வந்து செல்லும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உள்ளது. அதை சரி செய்யும்படி கூறி உள்ளார். அதனடிப்படையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    பல்வேறு அடிப்படை பணிகள் நடந்து வந்தாலும் அடுத்த மாத கடைசியில் பஸ் நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த புதிய பஸ் நிலையத்தில் 100 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுக்க 1000 பேர்களுக்கு மேல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

    அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள் வாரியத் தலைவர்கள் கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் என தி.மு.க.வில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பல பேர் கட்சியினருக்கு கடைகளை வாங்கி கொடுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் போட்டி பலமாக உள்ளது.

    ஆனால் எந்த கடைகளும் இன்னும் ஏலம் விடப்படவில்லை. சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதா? அல்லது பொது ஏலத்தில் விடுவதா? என்று முடிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ஒவ்வொரு கடைக்கும் சிபாரிசு பலமாக உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டதற்கு புதிய பஸ் நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு பெறுவதற்கு கடும் போட்டி நிலவுவது உண்மைதான். இதை சமாளிப்பது பெரிய கஷ்டம். எனவே சி.எம்.டி.ஏ. வழி காட்டி விதிமுறைப்படி விரைவில் இதுபற்றி முடிவெடுப்போம் என்றார்.

    • திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
    • அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு திருமருகல் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயபால் சங்கர் தலைமை வகித்தார்.

    செயலாளர் காமராஜ், துணைத் தலைவர் காசி அறிவழகன், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் ரஞ்சித் வரவேற்றார்.

    கூட்டத்தில் திருமருகல் கடைவீதியில் சங்கத்தின் பெயர் பலகை வைக்க வேண்டும், அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்,

    விபத்துக்கள் நடை பெறாமல் இருக்க திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் சங்க நிர்வாகி ஹரிஹரன் நன்றி கூறினார்.

    ×