search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sikkarayapuram Quarry"

    சென்னைக்கு குடிநீர் எடுக்கும் சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீரை எடுக்க முடியாத நிலை ஏற்படும்போது எருமையூர் குவாரியில் இருந்து நீர் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    பூந்தமல்லி:

    கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விட்டன. புழல், பூண்டி ஏரியில் இருந்து இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் பெற முடியும்.

    ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் நீரின் அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

    தினந்தோறும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீர் லாரிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    கல்குவாரி நீர் மற்றும் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்று தண்ணீரை எடுத்து வினியோகித்து வருகின்றனர். இந்த தண்ணீரும் போதுமான அளவு இல்லாததால் சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது.

    பெரும்பாலும் தண்ணீர் லாரிகளை நம்பியே பொதுமக்கள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக முன்பதிவு செய்தாலும் 20 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால் தனியார் தண்ணீர் லாரிகளை கூடுதல் பணம்கொடுத்து முன்பதிவு செய்து பெற்று வருகிறார்கள்.

    நங்கநல்லூர், மடிப்பாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், நீலாங்கரை, மூவரசம்பேட்டை, கீழ்கட்டளை உள்ளிட்ட புறநகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு தனியார் தண்ணீர் லாரிகளே கை கொடுத்து வருகிறது.

    இதற்கிடையே சென்னை குடிநீருக்காக எடுக்கப்படும் சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. ஒரு குவாரியில் நீர்மட்டம் அடியோடு குறைந்து விட்டது.

    அருகில் உள்ள மற்றொரு குவாரியில் இருக்கும் தண்ணீரை இன்னும் 2 மாதத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு மாற்று ஏற்பாடாக தாம்பரம் அருகே உள்ள எருமையூர் கல்குவாரி தண்ணீரை எடுப்பதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சிக்கராயபுரம் கல்குவாரி தண்ணீரை எடுக்க முடியாத நிலை ஏற்படும் போது எருமையூர் குவாரியில் இருந்து நீர் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “சிக்கராயபுரம் குவாரியில் இருந்து ஏப்ரல் முதல் வாரம் முதல் தண்ணீர் எடுத்து வினியோகித்து வருகிறோம். 100 நாட்களுக்கு நீரை எடுக்க திட்டமிட்டோம். ஆனால் எதிர்பார்த்ததைவிட கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் கிடைக்கும். எருமையூர் கல்குவாரி நீரை விரைவில் சப்ளை செய்ய உள்ளோம். வீராணம் ஏரி தண்ணீரும் இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்” என்றார்.

    ×