search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sipcot Perundurai"

    பெருந்துறை சிப்காட் வளாகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி இல்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறினார். #KCKaruppannan #SIPCOT
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிப்காட் வளாகம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் பெரும்பாலான நிறுவனங்கள் சாய தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகள்தான். இந்த நிறுவனங்களில் இருந்து கழிவு நீர் பெரும்பாலும் சுத்திகரிப்பு செய்யப்படாமல் வெளியேற்றப்படுவதால் இந்த சிப்காட்டை சுற்றியுள்ள சுமார் 10 கிமீ தொலைவிற்குள் உள்ள அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டநிலையில் சாயக்கழிவின் நிறத்துடனேயே உள்ளது.

    இது தொடர்பான கோர்ட்டின் உத்தரவிற்கு பின்னர் ஜீரோ டிஸ்ஜார்ஜ் முறை அமுலுக்கு வந்தது. பெரும்பாலான நிறுவனங்கள் அதற்கு பின்னர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சுத்திகரிப்பின் போது வெளியாகும் திடக்கழிவுகள் சிமெண்ட் பேக்டரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து சிப்காட்டால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் வருகின்ற 26ம் தேதி பெருந்துறை, சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.

    இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈரோடு மாவட்ட கலெக்டர் தலைமையில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் முன்னிலையில் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் அனைத்து நிறுவனங்களிலும் இருந்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.



    அதன்படி பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் சிப்காட்டில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், எஸ்பி சக்தி கணேசன், ஆர்டிஓ நர்மதா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசும் போது கூறியதாவது:-

    பெரும்பாலான நிறுவனங்கள் சாயக்கழிவு நீரை சூடேற்றி நீராவியாக மாற்றி கீழே தேங்கும் திடக்கழிவுகளை மட்டும் அப்புறப்படுத்தி விடுகின்றன. இந்த முறையில் அந்த நிறுவனங்கள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையை பின்பற்றுகின்றன.

    ஆனால் இந்த வளாகத்தில் உள்ள 13 நிறுவனங்கள் சோலார் பேனல் முறையை பயன்படுத்தி சாயக்கழிவு நீரை ஆவியாக்குகின்றனர். இதில் குறைந்த அளவே நீர் ஆவியாகிறது. அதிகப்படியான சாயக்கழிவு வரும் பட்சத்தில் இந்த நீர் சுத்திகரிப்பு செய்யப்படாமலேயே வெளியேறி விடுகிறது. மேலும் மழை காலங்களில் இந்த முறை பயனற்றதாகி விடுகிறது. அந்த சமயங்களில் சாயக்கழிவு நீர் வெளியேறி அருகில் உள்ள குளம் குட்டைகளில் தேங்கி விடுகிறது. ஆகவே இந்த நிறுவனங்களும் இந்த முறையை கைவிட்டு மற்ற நிறுவனங்களை போல நீரை கொதிக்க வைத்து ஆவியாக்க வேண்டும்.

    30 நாட்களில் இருந்து 60 நாட்களுக்குள் இந்த நிறுவனங்கள் ஜீரோ டிஸ்சார்ஜ் முறைக்கு மாறி விடுவதாக உறுதியளித்துள்ளன. இதனால் இந்த பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட பொதுமக்களின் பிரச்சினை பெரும்பாலும் இன்னும் 2 மாதத்திற்கும் சரிசெய்யப்படும்.

    சிப்காட் வளாகத்தில் புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதியளிக்கும் எண்ணம் தற்போது இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KCKaruppannan #SIPCOT


    ×