search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivakasi tasmac shop"

    சிவகாசியில் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடித்த நண்பர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    விருதுநகர்:

    சிவகாசி லிங்காபுரம் காலனியில் டாஸ்மாக் மதுக்கடை(எண்-11851) உள்ளது. இங்கு நேற்று மதியம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் மது பாட்டில்களை வாங்கியுள்ளனர். அவர்கள் மதுபாட்டில்களுடன் சிறுகுளம் கண்மாய் கரை பகுதிக்கு சென்று ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். மது குடித்த சில நிமிடங்களிலேயே காமராஜர் காலனியை சேர்ந்த முனியப்பன் என்பவரது மகன் கணேசன்(வயது21) வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதைப்பார்த்ததும் மற்றவர்கள் பயந்து போய் கணேசனின் தம்பி சக்திவேலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் ஆட்டோவில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் அங்கு வந்து சேருவதற்குள் மதுகுடித்த மேலும் 3 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அனைவரையும் சக்திவேல் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள்அறிவுறுத்தினர்.

    உடனே அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கணேசன், வேலாயுத ரஸ்தாவை சேர்ந்த ஷேக் ஜமாலுதீன் என்பவரது மகன் சையது இப்ராகிம்ஷா என்கிற ஜம்பு(22), லிங்காபுரம் காலனி அய்யாத்துரை என்பவரது மகன் கவுதம்(15) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

    இதுகுறித்து சக்திவேல் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்த நிலையில் கணேசனுடன் சேர்ந்து மது குடித்த முத்தாட்சிமடத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் அய்யப்பன்(22), காமராஜபுரம் காலனியை சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் ஜனார்த்தனன்(14), லிங்காபுரம் காலனியை சேர்ந்த முருகன் மகன் சரவணகுமார்(23), சிவஞானபுரம் காலனியைச் சேர்ந்த முருகன் மகன் அரிகரன் என்கிற அந்தோணி(22) ஆகியோரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களை உறவினர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    உடல்நலம் பாதிக்கப்பட்டோரில் அந்தோணி மட்டும் சிவகாசி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மற்ற மூவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    3 பேர் உயிரிழந்த நிலையில் அந்தப்பகுதி முழுவதுமே பரபரப்பும் பதற்றமும் உருவானது. எத்தனை பேர் மது குடிக்க சென்றனர், எத்தனைபேர் பாதிக்கப்பட்டனர் என தெரியாத நிலையில் சிகிச்சை பெற்று வரும் அய்யப்பனின் அண்ணன் முருகன்(27) தனது வீட்டில் சுருண்டு விழுந்து இறந்து கிடந்தார். இதனால் அவரும் நண்பர்களுடன் சென்று மது அருந்தியிருப்பது தெரிய வந்தது. இதனால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

    இந்த நிலையில் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த ராஜாமுகமது(60), கருப்பையா(62), ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த சண்முகராஜ் மகன் சிவகுமார்(28), விசுவநத்தம் கணேசன் காம்பவுண்டு பகுதியை சேர்ந்த ராசையா மகன் கருப்பசாமி(33) ஆகியோரும் மது குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இவர்களில் கருப்பசாமியை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்ற மூவருக்கும் சிவகாசியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இவர்கள் 4 பேரும் சிவகாசி பராசக்தி காலனியில் உள்ள டாஸ்மாக் கடையில்(எண்-11848) மது வாங்கி குடித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. சிவகாசியில் 2 கடைகளில் மது வாங்கி குடித்திருப்போர் பாதிக்கப்பட்டிருப்பதால் காலாவதியான மது அங்கு விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. அந்த இரு கடைகளும் உடனடியாக மூடப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் ஆகியோர் சிவகாசிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.  #tamilnews
    ×