search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100067"

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
    நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் நீராடி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதத்தை தொடங்கினர். மேலும் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சில பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். மேலும் உடலில் சகதியை பூசி சேத்தாளி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து கோவிலை சுற்றி வலம் வந்த பக்தர்களையும் பார்க்க முடிந்தது.

    இதனையடுத்து கோவில் முன்பு கழுமரம் ஊன்றப்பட்டது. அதன்பின்னர் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் கழுமரத்தில் ஏறினர். சிலர், கழுமரத்தின் உச்சியில் கட்டியிருந்த வேப்பிலையை தொட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதைத்தொடர்ந்து கோவில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறுவர், பெரியவர், பெண்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். இரவில் அம்மன் குளத்தில் கம்பம் விடப்பட்டது.

    நத்தம் மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி அங்குள்ள பெரிய விநாயகர் திடலில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி அன்னதானம் நடந்தது. இதனை வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளர்ச்சிக்குழுத்தலைவர் கண்ணுமுகமது தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவருந்தினர்.

    விழாவில் இளைஞர்கள் கழுமரம் ஏறுவதை படத்தில் காணலாம்.

    இதில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம், வர்த்தகர்கள் சங்கத்தை சேர்ந்த சேக்ஒலி, குத்புதீன், நம்பிராஜன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஆசைஅலங்காரம், அபுதாகீர், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சின்ராஜ் மீரான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அன்னதான கமிட்டி தலைவர் ஏர்வாடி முகமது இஸ்மாயில், துணைத்தலைவர் சிவாஜி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இந்த விழாவில் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தென் மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அதன்பிறகு இரவில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் மாசித்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    நத்தம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்
    திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த லிங்கமநாயக்கர் என்பவர் தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சொந்த ஊரை விட்டு புறப்பட்டு பாண்டியநாடு (மதுரை) செல்ல நினைத்து பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து நடை பயணமாக பல மைல்களை கடந்து வந்தார். வழியில் பச்சை பசுமையான மலைக்காடுகள் சூழ்ந்த வனப்பகுதிகளை பார்த்ததும் லிங்கமநாயக்கர் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. இனி தென்திசையை நோக்கி செல்ல வேண்டாம் என்று அவருடைய மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

    இதனால் லிங்கமநாயக்கர் அந்த காட்டுப்பகுதியிலேயே தங்கினார். தனது அறிவுத்திறமையால் அந்த காட்டுப்பகுதியை ஒரு குட்டி நாடாக மாற்றினார். பின்னர் கோட்டை, கொத்தளங்களை அமைத்தார். மானாவாரி பயிர்களை விளைவித்தார். விளைந்த தானியங்களை ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கினார். தான் வாழும் பகுதிக்கு “இரசை” என்று பெயரிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த திருமலை நாயக்கர், லிங்கமநாயக்கரை அழைத்து விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் “இரசை” நகரின் சிற்றரசராக லிங்கமநாயக்கர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து இரசை நகர்ப்பகுதியை லிங்கமநாயக்கர் நீதியுடனும், நேர்மையுடனும் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வந்தார். அப்போது அரண்மனையின் தேவைக்கு, அங்குள்ள பண்ணையில் இருந்த பசும்பால் போதவில்லை. இதனால் பக்கத்து ஊரில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி தினமும் ஒரு பணியாளர் பால் கறந்து, குடத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஒரு நாள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த பணியாளர் பால்குடத்தை கீழே வைத்துவிட்டு, நிழலுக்காக மரத்தடியில் ஒதுங்கி களைப்பு தீர படுத்துத்தூங்கினார். திடீரென காலில் கட்டெறும்பு கடித்ததும், கண் விழித்த அவர் பால்குடத்தை பார்த்தார். ஆனால் அதில் பால் இல்லாமல் வெற்றுக்குடமாக இருந்தது. இதே போல பல நாட்கள் அந்த மரத்தடி அருகே வரும்போது பால் மாயமாகி வந்தது. இதனால் அரண்மனையில் பசும்பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இது குறித்து மன்னரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே பணியாளரை கூப்பிட்டு மன்னர் விசாரித்த போது, அரசே நீங்களே ஒருமுறை நேரில் வந்து சோதனை செய்து விட்டு, பின்னர் என்னை தண்டியுங்கள், என்று பரிவாக கெஞ்சினார்.

    பணியாளரின் அந்த கோரிக்கையை பரிசீலித்த மன்னர், மீண்டும் அவரிடமே பால் நிரம்பிய குடத்தை கொடுத்து அதே மரத்தடியில் வைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவத்தை மன்னர், அரண்மனை பணியாளர்கள் மற்றும் சிப்பாய்கள் ஒரு மறைவான இடத்தில் நின்று பார்த்தனர். சிறிது நேரம் கழித்து மன்னரும், மற்றவர்களும் போய் அந்த பால் குடத்தை கவனித்தனர். அப்போது அனைவரும் வியப்படையும் வகையில் பால்குடம், வெறும் குடமாக காட்சி அளித்தது. இதனால் அனைவரும் திகைத்தனர். உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்க்க லிங்கமநாயக்கர் உத்தரவிட்டார்.

    அதன்படி அந்த பகுதியை பணியாளர்கள் தோண்டும் போது திடீரென ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வானில் கருடன்கள் வட்டமிட்டன. கடப்பாரையால் ஓங்கி குத்தியபோது பூமிக்கு அடியில் இருந்து ரத்தம் பீறிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்தது. தொடர்ந்து மண்ணை அகழ்ந்து பார்த்தபோது கையில் உடுக்கை, சூலாயுதத்துடன் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை இருந்ததை கண்டு லிங்கமநாயக்கர் ஆச்சரியம் அடைந்தார். அம்மனின் தோளில் கடப்பாரை பட்டதால் ரத்தம் வந்த அதிசயம் நிகழ்ந்ததும் தெரியவந்தது.

    சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நிற்கவே, அதே இடத்தில் அம்மன் சிலைக்கு மஞ்சள் நீராட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது மேகம் திரண்டு பலத்த மழை (மாரி) பெய்தது. இதனால் ‘மாரி’ அம்மன் என்று அழைக்கப்பட்டு மன்னரும், மக்களும் வணங்கத்தொடங்கினார்கள். சிற்றரசன் லிங்கமநாயக்கர், மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மனின் அம்சமான மாரியம்மனுக்கு கும்பம் இல்லாமல் விமான அமைப்பில் கோவில் கட்டினான். ‘ரத்தம் பீறிட்ட அம்மன், ரத்தம் காட்டிய அம்மன்’ என்று அழைக்கப்பட்டது நாளடைவில் மருவி ‘நத்தம் மாரியம்மன்’ என்று அழைக்கப்பட்டது. பக்தர்கள் நினைத்ததை நிறைவேற்றுவதுடன், நித்தம் அருள் தரும் நத்தம் மாரியம்மனுக்கு பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் உள்ளனர்.

    அம்மனை போற்றும் படியாக மிகச்சிறப்பாக நடைபெறும் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    நோய்களை தீர்க்கும் அபிஷேக தீர்த்தம்

    ந த்தம் மாரியம்மன் கோவில் வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.

    பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மன்

    தெ ன் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நத்தம் மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழா காலத்தில், பக்தர்கள் காப்பு கட்டுதல், 15 நாட்கள் விரதமிருத்தல், அக்னிசட்டி எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் மற்றும் கழுமரம் ஏறுதல், பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுத்தல் என்று பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகிறார்கள். பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மனாக மாரியம்மன் திகழ்வதால் ஆண்டுதோறும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கோவில் நடை திறப்பு

    நத்தம் மாரியம்மன் கோவிலில் தினந்தோறும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அடைக்கப் படும்.

    பஸ் வசதி

    நத்தம் மாரியம்மன் கோவில் மதுரையில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல் லில் இருந்து 36 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த 2 நகரங்களில் இருந்தும் கோவில் திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் வசதிக்காக அதிக எண்ணிக்கையில் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    நத்தம் மாரியம்மனின் அருளை பெற எந்த பொருளை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    நத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

    * மஞ்சள்பொடி - ராஜா போன்ற நிலை

    * நெய்-மோட்சம் கிடைக்கும்

    * புஷ்பகவ்யம் - புனித தத்துவங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமையும்

    * தண்ணீர் - மனஅமைதி தரும்

    * தீர்த்தம் - மன அமைதி தரும்

    * அரிசிமாவு - கடன் நீங்கும்

    * மாதுளைச்சாறு-லாபம் கிடைக்கும்

    * சந்தனம்- பக்தி, ஞானம் பெருகும்

    * வாசனைத் திரவியங்களும், எண்ணெய்காப்பும்- குடும்பத்தினரின் நலன் அதிகரிக்கும்

    * பால் - ஆயுள் விருத்தி

    * கரும்புச்சாறு - உடல்நலம், ஆயுள்பலம்

    * எலுமிச்சைச்சாறு - ஞானம்

    * புஷ்பங்கள் - செல்வம் குவியும்

    * பன்னீர் - திருப்தியான மனநிலை
    நத்தம் மாரியம்மன் கோவில் கருவறையில் மூலவரான மாரியம்மன், திருப்பாதத்தில் அசுரனை மிதித்த நிலையில் அன்னத்தின் மீது வீற்றிருக்கிறார்.
    நத்தம் மாரியம்மன் கோவில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சிறிய அளவிலான இடத்தில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கோவிலில் ராஜகோபுரங்களோ, தங்க விமானங்களோ கிடையாது. கருவறையின் முன்பாக சிறிய அளவில் ஒரு மண்டபம் மட்டும் உள்ளது.

    இந்த மண்டபமும் ஓடுகளால் வேயப்பட்டது ஆகும். கருவறையில் மூலவரான மாரியம்மன், திருப்பாதத்தில் அசுரனை மிதித்த நிலையில் அன்னத்தின் மீது வீற்றிருக்கிறார். உற்சவரான அம்பாள் நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    அம்மன் கோவில் என்பதால் கருவறைக்கு கிழக்கு பகுதியில் விநாயகருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இடது புறத்தில் நவக்கிரக நாயகர்களுக்கான சன்னதியும் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நித்தமும் அருள்புரியும் அம்மனாக நத்தம் மாரியம்மன் கோவில் விளங்குகிறது.
    சமயபுரம் அருகே, இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலின் திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சமயபுரம் அருகே, இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 6 மணிக்கு மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    இரவு 7 மணிக்கு உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், யானை, ரிஷபம், அன்னம், குதிரை போன்ற வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் மாதம் 3-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள பழனி கிழக்கு ரதவீதி மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 1-ந்தேதி முகூர்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்றிரவு 8.30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மாங்கல்யத்தை அணிவித்தார். ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற தீர்த்தக்குடம் எடுத்தும், மாவிளக்கு எடுத்தும், தீச்சட்டி எடுத்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கோவில் மேலாளர் உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(புதன்கிழமை) மாலை 4.30 மணிக்கும், நாளை இரவு 10 மணிக்கு கொடி இறக்குதலும் நடைபெறுகிறது. 
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில், அனந்தசயன கோலத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக, திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த மாதம் 31-ந்தேதி பூத்தமலர் அலங்காரத்துடன் தொடங்கி, கொடியேற்றம், பூக்குழி இறங்குதல், தசாவதாரம், கொடியிறக்கம் உள்பட பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற்று நேற்று முன்தினம் அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    அதனைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக அம்மனின் தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 10.30 மணியளவில் அம்மனுக்கு பால், சந்தனம், வாசனை திரவியங்கள் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணியளவில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் மாலை 6 மணியளவில் கோவிலில் தெப்ப உற்சவம் நடந்தது. இதையொட்டி கோவில் கருவறை முன்பு 8 அடி நீளம், 8 அடி அகலம், 1½ ஆடி ஆழத்தில் புதிய தெப்பம் ஒன்று அமைக்கப்பட்டது. அந்த தெப்பத்தில் மரிக்கொழுந்து, தாமரை, மல்லிகை போன்ற மலர்கள் மிதக்க அதில் அனந்தசயன கோலத்தில் கோட்டை மாரியம்மன் இருப்பதை போன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனின் அனந்தசயன கோலம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

    மாசித்திருவிழாவின் நிறைவுநாள் என்பதால் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சண்முக முத்தரசப்பன் தலைமையில் கோவில் நிர்வாகிகள், மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர்.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சையை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படும்.

    அதன்படி தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு சார்பில் ஆண்டுதோறும் பால் குட ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அதன்படி மாசிமக திருநாளையொட்டி 13-ம் ஆண்டு 1,008 பால்குடம் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

    பால்குட ஊர்வலத்துக்கு முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே முன்னிலை வகித்தார். இதில் தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், துணை பொருளாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஆலோசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புன்னைநல்லூரில் கைலாசநாதர்கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு 4 ராஜவீதிகள் வழியாக சென்று மாரியம்மன்சன்னதியை அடைந்தது. அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானமும் வழங்கப் பட்டது. மாலையில் விஷ்ணுதுர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், உற்சவஅம்மனுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.
    சர்வசக்தி படைத்த தேவியின் அம்சங்களில், ரேணுகாதேவி என்ற சக்தியே ‘மாரியம்மன்’ என்று கூறப்படுகிறது. ஜமதக்னி மாபெரும் தெய்வசக்தி படைத்த மகாமுனிவர். இவருடைய பத்தினியே ரேணுகாதேவி. கார்த்திவீரியன் என்னும் பேரரசன், ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் இருந்த காமதேனுவை அடைய விரும்பினான். அதற்கு ஜமதக்னி முனிவர் மறுக்கவே, கார்த்திவீரியன் மூர்க்கத்தனமாக போர் செய்தான். ஜமதக்னி முனிவரின் மகனான பரசுராமர், கார்த்திவீரியனிடம் போரிட்டு அவனது தலையை வெட்டிக் கொன்றார்.

    இந்த பாவம் தீர பரசுராமர் மகேந்திர மலையில் தவம் செய்யும் போது, கார்த்திவீரியனின் புத்திரர்கள் ஜமதக்னி முனிவரை கொன்றனர். கணவன் இறந்ததால், ஜமதக்னி முனிவரின் சிதையில் ரேணுகாதேவியும் உடன் கட்டை ஏறினாள். உடனே இந்திரன், சக்தியின் அம்சமான ரேணுகாதேவியை காக்க மழை பொழியச் செய்து அவளது உடலை தீயில் வேகாமல் செய்தான். இருப்பினும் ஆடைகள் முழுவதும் தீயில் எரிந்தன. தீ பட்டதால் உடலில் கொப்பளங்கள் தோன்றின. உடனே ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்ப மரத்தின் இலைகளை பறித்து கயிறு போல் திரித்து ஆடையாக அணிந்து கொண்டாள்.

    அப்போது வானில் தோன்றிய சிவபெருமான், ‘மானிட பெண்களில் நீயும் ஒருத்தி என்று நினைத்து துயர் கொள்ளாதே. நீ என் தேவியாகிய பராசக்தியின் சகல அம்சங்களில் ஓர் அம்சம் ஆவாய். உன் மகிமையை இந்த உலகத்தினர் அறியும் பொருட்டு நடந்த சக்தி தேவியின் விளையாட்டே இது. எனவே, நீ இந்த மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக ‘மாரியம்மன்’ எனும் பெயர் கொண்டு மக்களுக்கு அருள் செய்து வா’ என்று அருளினார். இதுவே ‘மாரியம்மன்’ தோன்றிய வரலாறு ஆகும். அந்த வகையில் உலகெங்கும் மாரியம்மனாக இருந்து அருள்பாலித்து வரும் இந்த கிராம தேவதை, திண்டுக்கல்லில் ‘கோட்டை மாரியம்மனாக’ வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறாள்.

    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் தல புராணத்திற்கும், திண்டுக்கல் மலைக்கோட்டைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கி.பி.1788- 1790-ம் ஆண்டுகளில் இந்த மலைக்கோட்டையில் இருந்து மன்னர் திப்புசுல்தான் ஆண்டு வந்தார். அப்போது திப்புசுல்தானின் படை வீரர்கள் மலைக்கோட்டையின் கிழக்கு பக்கத்தில் இருந்த கவாத்து (போர் பயிற்சி) செய்யும் மைதானத்தில் மாரியம்மனுக்கு ஒரு சிறு பலிபீடமும், மூலஸ்தான விக்ரகமும் அமைத்து வழிபட்டனர்.

    அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாக இருந்துள்ளது. அவ்வாறு காவல் தெய்வமாக இருந்து அருள்பாலிக்க தொடங்கிய மாரியம்மன், இன்று வரை பக்தர்களுக்கு கேட்ட வரங்களை அருளி வருவதாலும், மலைக்கோட்டைக்கு அருகில் கோவில் அமையப்பெற்றதாலும் இந்த அம்மன் ‘கோட்டை மாரியம்மன்’ என்று அழைக்கப்படுகிறாள்.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி, பால்குடம் ஆகியவை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு காணிக்கை செலுத்தப்பட்டது.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 31-ந்தேதி, பூத்தமலர் பூ அலங்காரத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவில் நேற்று பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. அதையொட்டி காலையில் அம்மனுக்கு திருமஞ்சனம், பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    மேலும் முளைப்பாரி, பால்குடம் ஆகியவை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு காணிக்கை செலுத்தப்பட்டது. அதேபோல் அம்மன் கரகத்துடன் எழுந்தருளி மெயின்ரோடு, கிழக்குரதவீதி உள்பட முக்கிய பகுதிகள் வழியாக வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பொடிக்கார வெள்ளாளர் மண்டகப்படியில் அம்மன் இறங்கினார். அங்கு அம்மனுக்கு பூஜைகள், நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றன.

    இதைத் தொடர்ந்து இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மின்அலங்கார தேர் மேற்குரதவீதி, கலைக்கோட்டு விநாயகர் கோவில், பென்சனர்தெரு, கோபாலசமுத்திரம், கிழக்குரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது. 
    பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் உள்ளது. பழனி கிழக்கு ரத வீதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் லிங்க வடிவில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த கோவிலின் மாசித்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

    11-ம் நாளான நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, பலி பூஜை ஆகியவை நடைபெற்றது. 12-ம் நாளான நேற்று இரவு மாரியம்மன் சன்னதியில் 5 கலசங்கள் வைத்து புண்ணியாவாஜனம், விநாயகர் பூஜை, சிறப்பு யாகம் நடைபெற்றது. இதனையடுத்து காப்பு கட்டப்பட்டது. பின்னர் கொடிபூஜை நடந்தது.

    கொடிப் படம் கோவிலில் வலம் வந்து கொடிமரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கொடிமரத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியை காண சிறப்பு அலங்காரத்தில் கொடி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார்.



    பின்னர் மாரியம்மன் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்து வந்து திருக்கம்பத்தில் வைத்தலும், தீபாராதனையும், மாரியம்மன் பெரிய தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திரு உலா காட்சியும் நடைபெற்றது. 21 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் இன்று(புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    அதன்பிறகு இரவில் சிம்ம வாகனத்தில் சாமி புறப்பாடு நடக்கிறது. வருகிற 19-ந்தேதி இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கன்னியா லக்னத்தில் திருக்கல்யாணமும், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 20-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டமும், 21-ந்தேதி இரவு 10 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சந்திரமவுலி, சுந்திர மூர்த்தி சிவம் மற்றும் கோவில் பண்டாரங்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவின் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலாக மாரியம்மன் கோவில் திகழ்கிறது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் அம்மன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருவிழா கடந்த 1-ந் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. சாமி உத்தரவின்பேரில் கொடைக்கானல் சாலையில் உள்ள ஒரு தோப்பில் இருந்து கம்பம் வெட்டி எடுத்து வரப்பட்டது.

    பின்னர் வையாபுரிகுளத்துக்கு கம்பம் கொண்டுவரப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நான்கு ரதவீதிகளில் கம்பம் சுற்றி வரப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்பு காலை 7 மணிக்கு கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கம்பத்திற்கு தீபாராதனை நடந்தது. மேலும் பக்தர்கள் பால், மஞ்சள்நீரை ஊற்றி வழிபாடு செய்தனர்.

    விழாவில் வருகிற 12-ந் தேதி கொடியேற்றமும், பூவோடு வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. 19-ந் தேதி இரவு 8 மணிக்கு மேல் திருக்கல்யாணம், மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 20-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. 21-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் கொடியிறக்குதலுடன் திருவிழா முடிவடைகிறது.

    திருவிழா நாட்களில் தினமும் இரவு வெள்ளி யானை, வெள்ளி காமதேனு, தங்ககுதிரை, வெள்ளி ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    ×