search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறுப்பேற்பு"

    டெல்லியில் நடைபெற்ற விழாவில் புதிய கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
    புதுடெல்லி:

    கடற்படை தளபதியாக இருந்த சுனில் லம்பா ஓய்வு பெற்றார். இதையடுத்து, இந்திய கடற்படைக்கு புதிய தளபதியாக கரம்பீர் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட கரம்பீர் சிங் டெல்லியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



    டெல்லியில் நடந்த விழாவில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் புதிய தளபதியாக பொறுப்பேற்றார்.

    அப்போது அவர் கூறுகையில், எனது முன்னோர்கள் இந்திய கடற்படைக்கு திடமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். புதிய உயரங்களை எட்டியுள்ளனர். அவர்களது வழியில் எந்த சவால்களையும் சந்திக்கும் விதமாக கடற்படையை வலுப்படுத்தும் விதத்தில் செயல்படுவேன் என தெரிவித்தார். 
    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 10 இந்தியர்கள் உள்பட 321 பேர் உயிரிழந்துள்ளனர். 

    இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட் சர்ச் நகரத்திலுள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு பழிவாங்கவே இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக இலங்கை ராணுவ மந்திரி இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 



    இந்நிலையில், ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் இன்று பொறுப்பேற்றது. அவ்வியக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ‘அமாக்’ இணையத்தளத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. #Islamicstate #Islamicstate #EasterAttack #Srilankablast
    டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநிலம் (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #Congress #PriyankaGandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.
     
    வாக்காளர்களை சந்தித்து ஆதரவும் திரட்டினார். ஆனால் கட்சியில் நேரடியாக எந்த பொறுப்பும் வகிக்காமல் இருந்தார். கட்சிப் பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார்.

    முதல்முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல் காந்தி நியமித்தார். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் கட்சி பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என தெரிவித்தார்.



    இதேபோல், உத்தரப்பிரதேசம் (மேற்கு) மாநில பொதுச்செயலாளராக ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலத்தின் பொதுச்செயலாளராக மாநிலங்களவை உறுப்பினர் குலாம்நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

    பிரியங்கா காந்திக்கு கட்சியில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது தொண்டர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் உ.பி. மாநில (கிழக்கு) பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #Congress #PriyankaGandhi
    ஆப்கானிஸ்தானில் சீக்கியர், இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், நேற்று ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. #Afghanistan #SikhsHindus
    காபூல்:

    முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானில் சீக்கியர் மற்றும் இந்துக்களும் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து அங்கு அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினமும் இவர்கள் மிகப்பெரும் தாக்குதலுக்கு இலக்காகினர்.

    ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியை சந்திப்பதற்காக ஜலாலாபாத்தில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.



    இதில் 19 பேர் உடல் சிதறி பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானோர் சீக்கியர் மற்றும் இந்துக்கள் ஆவர். அங்கு சீக்கிய குழுக்களின் தலைவராக நீண்ட காலமாக பதவி வகித்து வந்த அவதார் சிங் கல்சாவும் இதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்துக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்காத நிலையில், நேற்று ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. இது தொடர்பாக அந்த இயக்கம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டு இருந்தது.  #Afghanistan #SikhsHindus #Tamilnews 
    நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக மகேந்தர் குமார் ரத்தோட் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    நெல்லை:

    நெல்லை மாநகர புதிய போலீஸ் கமிஷனராக மகேந்தர் குமார் ரத்தோட் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர், “வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று கூறினார்.

    நெல்லை மாநரக போலீஸ் கமிஷனராக பணியாற்றிய திருஞானம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி ஓய்வு பெற்றார். அதன்பிறகு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டி.ஐ.ஜி. மகேந்தர் குமார் ரத்தோட் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    அவர் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அவருக்கு துணை கமிஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ் கான் அப்துல்லா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து அவரிடம் நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

    புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேந்தர் குமார் ரத்தோட் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நெல்லை மாநகர பகுதியில் சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்படும். நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்துக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மணல் கொள்ளையை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசி நெல்லை மாநகரத்துக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதிய போலீஸ் கமிஷனர் மகேந்தர் குமார் ரத்தோட் சொந்த ஊர் ஐதராபாத் ஆகும். இவர், 2001-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். சென்னை மடிப்பாக்கத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார்.

    பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, ராமநாதபுரத்தில் பணியாற்றினார். தொடர்ந்து சென்னை அடையாறு துணை கமிஷனராகவும், மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை தலைமையிடத்து துணை கமிஷனராகவும் பணியாற்றினார். பின்னர் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை தொழில்நுட்ப சேவை டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றினார். தற்போது அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். 
    ×