search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்ஜான்"

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்களின் புனித இரவு சிறப்பு தொழுகை நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. முஸ்லிம்கள் இந்த இரவினை ‘லைலத்துல் கதர்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.
    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையாக விளங்குவது ரம்ஜான். இறைதூதர் முகமது நபிக்கு திருக்குரான் அருளப்பட்டதை நினைவு கூர்ந்து ரம்ஜான் நோன்பின்போது முஸ்லிம்கள் திருக்குரானை தினந்தோறும் ஓதி வருகிறார்கள். அதன்படி 27 நாட்கள் திருக்குரான் ஓதி முடிக்கும் நாளாக வருகிற சனிக்கிழமை (நாளை) உள்ளது. இந்த நாள் முஸ்லிம்களின் புனித இரவாக இருக்கிறது. முஸ்லிம்கள் இந்த இரவினை ‘லைலத்துல் கதர்’ என்ற பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா கூறியதாவது:-

    இறை தூதர் முகமது நபிக்கு ரம்ஜான் மாதத்தில் திருக்குரான் இறக்கப்பட்டது. எனவே ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும்போது திருக்குரானை தினமும் படித்து வசனங்களை புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

    திருக்குரானின் மொத்த வசனங்கள் 6 ஆயிரத்து 666 ஆகும். இதனை 27 பாகங்களாக பிரித்து ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை பள்ளி வாசல்களில் ஓதி, அதற்கு விளக்கங்கள் கூறப்படும். 27-வது நாள் முழுமையாக திருக்குரான் ஓதி முடியும்நாள். இந்த நாள்தான் ‘லைலத்துல் கதர்’ எனப்படும் புனித நாளாகும். இந்த நாளில் சூரியன் மறையும் நேரத்தில் இருந்து அடுத்த நாள் சூரியன் உதிப்பதுவரை ஒரு முழு இரவும் பள்ளிவாசல்களில் திருக்குரான் ஓதப்படும். வசனங்களுக்கு பள்ளிவாசல் தலைவர்கள் விளக்கங்கள் கூறுகிறார்கள். தொடர்ந்து முஸ்லிம்கள் சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். இந்த புனித இரவையொட்டி அனைத்து பள்ளி வாசல்களும் விழாக்கோலம் பூண்டு வருகிறது.

    இவ்வாறு மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா கூறினார்.

    புனித இரவு தொழுகை நாளை (சனிக்கிழமை) இரவு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறும். மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா தலைமையில் ஈரோடு டவுன் பெரிய பள்ளிவாசலில் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 5-ந் தேதி ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் நடக்கிறது.
    அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் பிரமுகர்களுக்கு இப்தார் விருந்தளித்த டொனால்ட் டிரம்ப், அமைதி மற்றும் சகிப்புத்தன்மையை பேணும் ரம்ஜான் மாதம் மிகவும் சிறப்புக்குரியது என குறிப்பிட்டார்.
    வாஷிங்டன்:

    இஸ்லாமியர்களின் நோன்பு காலமான ரம்ஜான் மாதத்தில் வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் பிரமுகர்களுக்கு இப்தார் விருந்து அளிப்பது மரபாக இருந்து வருகிறது.

    அவ்வகையில், தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையாக நேற்றிரவு இப்தார் விருந்தளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய டிரம்ப் கூறியதாவது:-



    அனைத்து வகையான மத நம்பிக்கைகளை கொண்ட மக்களும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழத்தகுந்த இடமாக அமெரிக்கா இருப்பதற்காக கடவுளுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு இந்த ரம்ஜான் மாதம் புனிதமானது. தான,தர்மங்கள் செய்யவும் சக மக்களுக்கு சேவை செய்யவும் அண்டை வீட்டார், சமூகத்தினர் மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கவும் ரம்ஜான் மிகவும் சிறப்புக்குரிய மாதமாக உள்ளது.  

    நம்பிக்கை, சகிப்புத்தன்மை, அமைதி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இப்தார் விருந்தில் நாம் ஒன்றிணைகிறோம். நியூசிலாந்து நாட்டின் மசூதிகளில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட முஸ்லிம்கள், இலங்கை, கலிபோர்னியா, பிட்ஸ்பர்க் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பலியான கிறிஸ்தவ, யூத மக்களுக்கும் இதர கடவுளின் பிள்ளைகளின் நினைவுகளால் இந்த வேளையில் நமது இதயம் வேதனைப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி:

    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப் பட்டணம், வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை, ஜெகதேவி, மத்தூர், தேன்கனிக் கோட்டை, சூளகிரி, ஓசூர், மத்திகிரி, தளி, அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் ராயக் கோட்டை சாலையில் உள்ள ராஜீவ் நகர், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அதே போல கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மசூதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.

    ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் வீடுகளில் பிரியாணி சமைத்து, அக்கம் பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.

    தேன்கனிக்கோட்டையில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று சிறப்பாக கொண்டாடினார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து தேன்கனிக்கோட்டை அருகே பஜ்ஜேப்பல்லி என்ற இடத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலமாக ஈத்கா மைதானத்தை அடைந்து தொழுகையில் ஈடுபட்டனர். ரம்ஜானை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதி முஸ்லிம்கள் வீடுகளில் பிரியாணி சமைத்து, உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினர்களுக்கும் வழங்கினார்கள். மேலும் இனிப்பு வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். 
    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் டவுன் பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஈத்கா மைதானத்தை வந்தடைந்தனர். அங்கு நகரில் உள்ள அனைத்து முஸ்லிம் பெருமக்களும் ஒன்றுகூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.

    இதில் டவுன் பள்ளிவாசல் பேஸ் இமாம் சல்மான்ஹஜ்ரத், நூர் பள்ளிவாசல் ஹஜரத் முஸ்தபா ரம்ஜான் நோன்பின் மாண்புகள், இஸ்லாம் ஒருங்கிணைப்பிற்கும், வளர்ச்சிக்கும் பெருமகனார் நபி(ஸல்) ஆற்றிய பணிகள், ஈகையின் அவசியம் அன்பு சகோதரத்துவத்தை நிலை நாட்ட வேண்டியதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.



    இதில் டவுன் பள்ளிவாசல் முத்தவல்லி யூசுப், முதன்மை நாட்டாண்மை முனவர் ஷெரீப், உலமாசபை மாவட்டத்தலைவர் முகம்மது முனீர், இப்ராகிம், மதரசா நிர்வாகி காஜாமொய்தீன், மருத்துவ அதிகாரி டாக்டர் ஹூசைன், மதரசா சத்தார், சாகுல்அமீது, வக்கீல் முகமது இல்யாஸ், அப்துல்லா உள்பட திரளாக முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சிறுவர்-சிறுமியர்கள் திரளாக கலந்து கொண்டு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதனை தொடர்ந்து முஸ்லிம்கள் டவுன் பள்ளிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு வழிபாடு (தூ-ஆ) நடத்தியபின்பு தங்களது வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ஜன்னத்துல் பிர்தவுஸ் பள்ளி வாசல், ஆகியவற்றில் ஈத் பெருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.

    இதேபோல் ரம்ஜான் பண்டிகையையொட்டி பெரம்பலூர் அருகே உள்ள துறைமங்கலம் ஜே.கே.மகால் வளாகத்தில் நடந்த சிறப்பு தொழுகை ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதில் முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு தொழுகை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர் மாவட்டத்தில், லெப்பைக்குடிக்காடு கிழக்கு மற்றும் மேற்கு மஹல்லம் மசூதிகள், அரும்பாவூர், பூலாம்பாடி, மேலக்குணங்குடி, பெரியம்மாபாளையம், தொண்டமாந்துறை, விசுவக்குடி, முகம்மதுபட்டினம், வி.களத்தூர், தேவையூர், பாடாலூர், து.களத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணியை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன்  - 1 கிலோ
    அரிசி  - 1 கிலோ
    எண்ணெய்  - 100 கிராம்
    நெய் - 150 கிராம்
    பட்டை  - 2 துண்டு
    கிராம்பு  -  ஐந்து
    ஏலக்காய் - முன்று
    வெங்காயம்  - 1/2 கிலோ
    தக்காளி  - 1/2 கிலோ
    இஞ்சி, பூண்டு விழுது
    கொ. மல்லி  - 1 கட்டு
    புதினா  - 1 கட்டு
    மிளகாய்  - 8
    தயிர்  - 225 கிராம்
    சிகப்பு மிளகாய் தூள்  - 3 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1 சிறிதளவு
    எலுமிச்சை பழம்  - 1

    செய்முறை:

    * முதலில் சட்டி காய்ந்ததும் எண்ணெயும் நெய்யையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை , கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெட்டிய வெங்காயம் அனைத்தும் போட்டு நன்றாக கிளறி மூடி விடவும்.

    * பொன் முறுவல் ஆனதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக கிளறி விடவும். ஒவ்வொரு தடவை கிளறும் போதும் மூடி போட்டு மூடியே தான் வைக்க வேண்டும். அடுப்பை சிம்மில் வைக்கவேண்டும்.

    * பிறகு கொத்தமல்லி புதினாவை போட்டு கிளறவும்

    * பின்னர் தக்காளி, ப.மிளகாய் போடவும். இரண்டு நிமிடம் கழித்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு தேவையான அளவு போட்டு வேக விடவும். எண்ணெயில் எல்லா பொருட்களும் நன்கு வதங்கியவுடன் மட்டனை போடவும்.

    * மட்டனை போட்டு தீயை அதிகபடுத்தி நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.

    * பிறகு தயிரை நன்கு ஸ்பூனால் அடித்து ஊற்றவும். அப்படியே சிம்மில் வைத்து 20 நிமிடம் வேகவிடவும். வெந்ததற்கு அடையாளம் எண்ணை மேலே மிதக்கும். தீயின் அள‌வை குறைத்து வைக்கவும்.

    *  அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து விடவும் ஊறவைத்த அரிசியை வடிக்கவும். உலை கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணையும், எலுமிச்சை பழமும் பிழியவும்.

    * வெந்ததும் நல்ல பதமாக பார்த்து ஒவ்வொன்றாக முக்கால் பதத்தில் வடிக்க வேண்டும். உடனே தீயை குறைத்து கிரேவியில் கொட்டவும்.

    * கிரேவியையும் அரிசியும் நன்கு சேருமாறு கிளறி சமப்படுத்தி மூடி தம் போடவும்.



    * ஐந்து நிமிடம் கழித்து நல்ல ஒரு முறை கிளறி மூடி வைக்கவும். விரும்புபவர்கள் கலரை தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

    * அதன் பிறகு இரண்டு டீஸ்பூன் நெய் விட்டு மறுபடியும் 15 நிமிடம் தம்மில் விடவும். சுவையான ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

    பெங்களூருவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் விளையாடி வரும் நிலையில், இன்று ஆப்கன் வீரர்கள் பாரம்பரிய முறையில் ரம்ஜான் கொண்டாடினர். #INDvAFG #EidMubarak
    பெங்களூரு:

    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் பெங்களூருவில் நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வரலாற்று சிறப்புமிக்க அறிமுக டெஸ்டில் ஆப்கானிஸ்தான் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் மற்றும் முகமது நபி ஆகியோருடன் களம் இறங்கியது. முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


    இந்நிலையில், ரம்ஜான் தினமான இன்று காலை போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், முகமது நபி உட்பட அனைத்து வீரர்களும் பாரம்பரிய முறையில் ஆடை அணிந்து ரம்ஜானை கொண்டாடினர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்த புகைப்படங்களை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


    ரம்ஜான் கொண்டாட்டத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வீரர்கள் விளையாட தயாராகினர். ஆப்கன் வீரர்கள் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. #INDvAFG  #EidMubarak

    உலகம் முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த பண்டிகையின் சிறப்புகளைப் பார்ப்போம்.
    ஒரே பண்டிகையை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு விதமாகக் கொண்டாடுவார்களென்றால் அது ஈகைத் திருநாளாகத்தான் இருக்கமுடியும்.

    ஈகைத் திருநாளை இல்லாதவர்களுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டாடுவர். தங்களது புலன்களின் கட்டுப்பாட்டை  முழுமைப்படுத்திவிட்ட மகிழ்ச்சியில் கொண்டாடுவர். தங்களால் நோன்பு ஏற்க முடிந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டாடுவர். பல நாட்கள் மனஸ்தாபங்களை மகிழ்ச்சியான தினத்தில் மறந்துவிட வேண்டுமென்று நட்பு பாராட்டும், உறவை மேம்படுத்தும் தினமாகக் கொண்டாடுவர். தனது மகிழ்ச்சியில் மற்றவர்களைப் பங்கேற்க அழைத்துச் சகோதர சமுதாய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து அகம் மகிழ்ந்து விருந்து படைத்துக் கொண்டாடுவர். அக்கம் பக்கத்து வீட்டு நண்பர்களைத் தமது சந்தோஷத்தில் இணைத்துக் கொண்டு கொண்டாடுவர்.

    மனம் மற்றும் உடல் கட்டுப்பாட்டுக்கான முப்பது நாள் நோன்பு பயிற்சி முடிந்து தொழுகைக்கு முன்பு கட்டாயமாக ஃபித்ராவை அதாவது தான் சாப்பிடும் ஒருநாளுக்குத் தேவையான அளவு (சராசரியாக இரண்டரை கிலோ) அரிசியையோ, கோதுமையையோ தானமாகத் தந்த பிறகே ஈகைத் திருநாளுக்கான தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பெருநாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இந்த வகையான தானத்தை ஆரம்பிக்கலாம். இது ஒவ்வொருவருக்கும் கடமை. ஆதலால் ஒரு குடும்பத்தில் நான்கு நபர்கள் இருந்தால் ஃபித்ரா அரிசியையும் நான்கு மடங்காகவே தர வேண்டும். அதாவது ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியமாகும். இவ்வகைத் தர்மம் ஏழைகளுக்கு உணவாகும், நோன்பாளிகளைத் தூய்மைப்படுத்தவும், நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமையும். நோன்பு நோற்க முடியாதவர்கள் சார்பில் கொடுக்கப்படும் ஃபித்ரா ஏழைகளுக்கு உணவளித்த நன்மை கிடைக்கும்.

    இந்தத் தானத்தை மிகவும் வசதிப் படைத்தவர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. தனக்கு ஒருவேளை உணவு இருந்தால் அதில் பங்கு வைத்துத் தானம் செய்ய இயன்றாலும் செய்யலாம். கடன் இல்லாதவர்கள் இவ்வகையான தானம் செய்வது சிறப்பானது. ‘தனியொருவனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்றார் பாரதி, அதையே பல்லாண்டுகளுக்கு முன்பாக வலியுறுத்தும் விதமாக, இருப்பதைப் பகிர்ந்து உண்ணுதலை வலியுறுத்தி ஏற்படுத்தப்பட்டதுதான் ஸகாத்தும், ஹதியாவும், ஃபித்ராவும்.

    ஸகாத் என்பது எல்லா முஸ்லிம்களுக்கும் கடமையான தர்மமாகும். இஸ்லாத்தில் மூன்றாவது தூணாக ஸகாத் கருதப்படுகிறது. ஸகாத் என்றால் தூய்மையடைதல் என்ற பொருளையும் தருகிறது. இது உளத்தூய்மையைக் குறிக்கிறது. பொருளீட்டும் நபருக்கு அந்தப் பொருளின் மீதான காதலை முறியடித்து, தன் சம்பாத்தியத்திலிருந்து ஒரு பங்கை தானமாகக் கொடுத்து அதில் கிடைக்கும் மனநிறைவை ஏற்படுத்துவதே ஸகாத்தின் நோக்கமாகும்.


    “அல்லாஹ் வட்டியை (அதில் எந்தப் பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; தன் கட்டளையை நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை” என்ற திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் 276-வது வசனம் வட்டியால் அழிவும், தர்மத்தால் நன்மையும் ஏற்படும் என்று நமக்குத் தெளிவுப்படுத்துகிறது.

    ஸகாத்தைப் பொறுத்தவரையில் ஒரு வருடம் பூர்த்தியானால் வழங்க வேண்டும். பெரும்பாலும் ஈகைத் திருநாளின் போதே அந்த வருடத்திற்கான ஸகாத்தை செலுத்திவிடுவதே வழக்கத்தில் உள்ளது. நூற்றுக்கு இரண்டரை சதவீதம் என ஸகாத் கணக்குப் பார்த்து வழங்கப்பட வேண்டும். ஃபித்ராவும் ஹதியாவும் கையேந்துபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் ஸகாத் என்பது சுய கௌரவமுள்ள, அதே வேளை ஸகாத்தைப் பெற தகுதியுள்ள, அடுத்தவனிடம் கையேந்தக் கூடாது என்று தன்மானத்துடன் வாழ்பவர்கள் வறுமையில் தொடர்ந்து வாழும் நிலை அல்லது தமது நிலையிலிருந்து மேலும் தாழ்ந்து செல்லும் துர்பாக்கியம் நிகழ்வதைக் காக்கும் கவசமாகிறது ஸகாத்.

    ஈகைத்திருநாள் கொண்டாட்டம் என்பது கொடுப்பதும் குதூகலிப்பதும்.
    ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    தங்களுடைய மெய்வருத்தி நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை தமது செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரமலான் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆட்சியிலிருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் போதும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக எப்போதும் அயராது பாடுபடும் இயக்கத்தின் சார்பில் ஆற்றிய சாதனைகள் எண்ணிலடங்காதவை.

    இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் அனைத்து வகையிலும் மென்மேலும் உயர்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்குடனும் செயல்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மையின மக்களின் சமூக, கல்விபொருளாதார முன்னேற்றத்திற்காக என்றைக்கும் உற்ற துணையாக விளங்கிடும் என்று உறுதியளிக்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    நபிகள் நாயகம் வழியில் ஜக்காத் என்னும் ஏழை வரியை பொது நிதியங்களில் செலுத்தி, ஏழை, முதியவர், விதவைகளுக்கு மாத உதவி, மருத்துவ, கல்வி, திருமண, உணவு மற்றும் தொழில் துவங்கும் உதவி என அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இம்மாதம் உதவுகிறது.

    நோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தே.மு.திக. தலைவர் விஜயகாந்த்:-

    பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும், உடல்நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்புகள். புனித நோன்பினை முடித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன் னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    புரட்சி தலைவி அம்மா இஸ்லாமியர்களின் அரணாகத் திகழ்ந்து. அவர்களின் நன்மைக்காக முன்னெடுத்து நடைமுறைப்படுத்திய திட்டங்கள் அனைத்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தவை. தமிழகத்தில் தழைத்தோங்கிவரும் இந்த சகோதரத்துவம் என்றும் நிலைத்திட செய்யவும், இந்திய நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையை பாதுகாத்திடும் அரணாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் திகழ்ந்திடும்.

    இந்நன்னாளில் இறைத் தூதர் நபிகள் நாயகம் போதனைகளை தொடர்ந்து கடைபிடிப்போம். போற்றிடுவோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    பண்பாட்டு ரீதியாக இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் ஒற்றுமையாக அணி திரள்வதற்கு ரமலான் நோன்பு ஏதுவாக அமைவதை காணமுடிகிறது. மானுடத்தின் மேன்மையை வலுப்படுத்தும் மனிதநேயம் என்னும் மாண்பினை இது செழுமைப்படுத்துகிறது. சாதி, மத வரம்புகளைத் தாண்டி ஏழை எளியோருக்கு கொடையளிக்கும் கருணையையும் இந்த நோன்பு மேம்படுத்துவதை உணரமுடிகிறது.

    இத்தகைய சிறப்புக்குரிய நோன்பை நிறைவுசெய்யும் திருநாளான ரமலான் பெருநாளில் இஸ்லாமியர் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர- சகோதரிகளுக்கும் அனைவருக்கும் இந்நன்னாளில் எல்லா வளங்கள் மற்றும் நலங்களும் பெற்று எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடவும் அன்பான ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:- நோன்பு காலத்தில் வறுமையில் உள்ள ஏழை எளியோருக்கு உதவி செய்வதை குர்ஆன் வலியுறுத்துகின்றது. இந்த நோன்பு ஏழை, பணக்காரன் என்கின்ற பேதம் கிடையாது. இறைவன் முன் எல்லோரும் சமம் என்பதை இந்த புனித மாதம் தெள்ளத்தெளிவாக்குகின்றது. இந்த இனிய நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் தின வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி:-

    அறுசுவையான உணவுகளை உட்கொண்டு புத்தாடை அணிந்து உறவினர்களுடன் இந்த நன்நாளில் இன்பமுற்று இருப்பது போல வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ஏழைகளின் கண்ணீரை துடைத்திடுவோம், வறியவர்களுக்கு உதவிடுவோம். மத நல்லிணக்கத்தை காத்திடுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி:-

    ரம்ஜான் பண்டிகையின் மகிழ்ச்சியே இல்லாதவர்களுக்கு செல்வங்களை கொடுத்து மகிழ்வதுதான். சகோதரத்துவத்தை வளர்த்தல், அன்பை பகிர்தல் என ரமலான் பண்டிகை மனித நேயத்தையும் உணர்த்துகிறது. இதுவே அதன் சிறப்பாகும். இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், இந்திய ஹஜ் அஷோசி யே‌ஷன் தலைவர் ஏ.அபுபக் கர் ஆகியோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Ramadan
    ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்புறக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNCM #EdappadiPalanisamy #Ramadan
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை இன்புறக் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இஸ்லாமியப் பெருமக்கள் இந்த புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடமும் அன்பு பாராட்டி, ஏழை எளியவர்களுக்கு உணவு அளித்து, இறை சிந்தனையை மனதில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், இறைவனை தொழுது, ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள்.

    புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 3000-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு 5,145 மெட்ரிக் டன் அரிசி வழங்கியது, 2600 உலமாக்கள் பயன்பெறும் வகையில் அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கியது, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிருவாக மானியம் 1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தியது.

    பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களில் பழுது பார்ப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் தொகுப்பு நிதி உருவாக்கியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டுதோறும் வழங்குவது, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினருக்கு நேரடி நியமன முறையில் நிரம்பாத பணியிடங்களுக்கு முன்கொணர்வு முறை நீட்டிக்க அரசாணை வெளியிட்டது.

    மாவட்ட காஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றிவரும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு 1.3.2016 முதல் மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டம், போன்ற பல்வேறு நலத்திட்டங்களை இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு மேன்மையுற சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

    இந்த ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், இன்பம் பெருகட்டும், அன்பும் சகோதரத்துவமும் தழைக்கட்டும் என்று வாழ்த்தி, என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy #Ramadan
    ரம்ஜான் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #ramadan
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    உலகமெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியப் பெருமக்கள், மாதங்களில் உன்னதமான ரமலான் மாதத்தில் 30 நாள்களும் உண்ணாமல் அருந்தாமல் பசி தாகம் பொறுத்து, புலன்களை இச்சைகளை கட்டுப்படுத்தி மேற்கொள்கின்ற தவத்தின் நிறைவு நாள்தான் விண்ணில் பிறை தோன்றும் ஈகைத் திருநாளாம் ரமலான் ஈது பெருநாள் ஆகும்.

    அனைத்து சமயத்தினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாக பரிவுடன் சகோதரத்துவத்தை வளர்ப்பதுதான் இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் அரண் ஆக அமையும். சமய நல்லிணக்கத்தைக் கட்டிக் காக்க அனைவரும் உறுதி கொள்வோம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு ஆகிய வாழ்வு வழிமுறைகளை பின்பற்றி இன்று போல் என்றும் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

    நோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    இஸ்லாத்தின் புனிதமான 5 கடமைகளில் முக்கியமானது ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயம் முதல் மறைவு வரை மேற்கொள்ளப்படும் நோன்பு ஆகும். இதே போல் நோன்பிருக்கும் போது கடைபிடிக்கப்படும் மற்ற வழக்கங்களும் மனிதர்களை மேன்மை படைத்தவர்களாக மாற்றுகின்றன.

    உலகில் அமைதி, வளம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பெருக் கவும், தீமைகளை ஒழித்து, நன்மைகளை பெருக்கச் செய்யவும் பாடுபட இந்நன்னாளில் அனைத்து மக்களும் உறுதியேற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ்:-

    ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ரமலான் மாதத்தில் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருப்பதன் மூலம் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப் பாடு, சமூக நலம் பேணு தல் போன்ற நல்ல விளைவு கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு திருநாளும் என்ன நோக்கத் திற்காக கொண்டாடப் படுகின்றனவோ, அதை உணர்ந்து அந்த நோக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வது தான் நமது கடமையாக இருக்க வேண்டும்.

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்பட பலர் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #ramadan

    ரம்ஜானை முன்னிட்டு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியின் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாக தலிபான் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. #AshrafGhani #Taliban
    காபூல் :

    ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் இஸ்லாம் மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நோன்பு இருந்து இறைவனை வழிபடுவர்.

    இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு, அதற்கு முந்திய 5 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு ஒன்றை ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி சமீபத்தில் அறிவித்தார்.



    இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரம்ஜான் கொண்டாடப்படும் தினத்துக்கு முன்னதாக 5 நாட்கள் தலிபான்களுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் நிறுத்தப்படுவதாகவும், இதர வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் போன்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், 3 நாள் போர் நிறுத்தத்துக்கு சம்மதிப்பதாக இன்று தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பு அறிவித்துள்ள போர் நிறுத்தம் எந்த நாளில் துவங்கும் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. #AshrafGhani #Taliban
    தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை:

    தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அக்கட்சியின் தலைவர் திருப்பூர் அல்தாப் தலைமையில் சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    நாளை(இன்று) சட்டமன்றம் கூட இருக்கிறது. சட்டமன்றத்தில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் நாளை வெடிக்க இருக்கிறது என்பது பற்றியும், எதிர்க்கட்சி என்றமுறையில் என்னவிதமான உணர்வுகளை அங்கு வெளிப்படுத்தி, கேள்விகளை எழுப்பவிருக்கிறோம் என்பதையும் நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

    கடந்த ஒரு வார காலத்தில் தமிழகத்தில் நடந்துள்ள அக்கிரமங்கள், அநியாயங்கள், தூத்துக்குடியில் 13 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியான கோர சம்பவம், அதற்கெல்லாம் காரணமானவர்கள் யார்? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? துப்பாக்கிசூடு நடத்தும் ஆணையை வழங்கியது யார்? அந்த உத்திரவு எங்கிருந்து வந்திருக்கிறது? என்பதெல்லாம் இன்றைக்கு கேள்விக்குறியாக இருந்தாலும், இதற்கெல்லாம் முழு காரணமாக இருந்தவர்கள், ஆட்சியில் இருப்பவர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை. அதில் எந்தவித மாற்றமும் கிடையாது.

    தமிழ்நாட்டில் 13 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இருக்கின்றனர், ஆனால், ஒரு அனுதாப செய்தியாவது இதுவரை பிரதமரிடம் இருந்து வந்திருக்கிறதா என்றால் இல்லை. ஒருவேளை, குஜராத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பிரதமர் மோடி வாய் திறக்காமல் இருந்திருப்பாரா?

    ஆனால், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்காவிட்டாலும், படுகொலைக்கு ஆளானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் நிலையில் கூட இன்றைக்கு பிரதமர் இல்லை என்பதை எண்ணி பார்க்கின்றபோது, எப்படிப்பட்ட பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம் என்று வேதனைப்படுவதை தவிர வேறு வழியில்லை.

    இதற்கெல்லாம் முடிவுகட்டக்கூடிய வகையில், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நாம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் ஏற்படுத்த தயாராக வேண்டும் என்பதற்கான உறுதியை எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×