search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100147"

    பாகிஸ்தான் பள்ளிக்கூடத்தில் பாடம் படிக்காத சிறுவனை புல் தின்ன வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லோத்ரான் நகரில் உள்ள பதேபூர் என்ற இடத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஹமீத் ராசா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது, கஸ்கான் (வயது 7) என்கிற சிறுவனை அழைத்து, சக மாணவர்கள் முன்பு நின்று பாடத்தை படிக்கும்படி கூறினார். ஆனால் சிறுவன் பாடத்தை படிக்காமல் நின்றுகொண்டிருந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே இருந்து புல், பூண்டுகளை எடுத்து வந்து, கட்டாயப்படுத்தி சிறுவனை தின்ன வைத்தார்.

    இது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும், சிறுவனின் பெற்றோர், ஆசிரியர் தங்களது உறவுக்காரர் என்றும், இதை தாங்கள் பெரிதுபடுத்தவில்லை என்றும் கூறிவிட்டனர். ஆனாலும் இந்த விவகாரம் மாவட்ட போலீஸ் அதிகாரியின் கவனத்துக்கு வந்ததும், இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பதேபூர் போலீசார் ஹமீத் ராசா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஷ்மீர் மாநிலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் பசியால் தவித்தபோது மத்திய துணை ராணுவப்படை வீரர் உணவூட்டும் வீடியோ வைரலாகிவரும் வேளையில் அவருக்கு பாராட்டுகளும் குவிகின்றது.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-2-2019 அன்று மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சென்ற வாகன வரிசையின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீரர்களில் ஒருவரான இக்பால் சிங் என்பவர் ஸ்ரீநகரில் உள்ள நவகடால் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவை பிற்பகல் வேளையில் சாப்பிட தொடங்கினார்.

    அப்போது எதிரே உள்ள ஒரு கடை வாசலில் அமர்ந்திருக்கும் சிறுவன் அவரைப் பார்த்து தனக்கும் பசிக்கிறது என்று சைகை காட்டவே மனமிரங்கிய இக்பால் சிங், சிறுவனை நோக்கிச் சென்றார்.

    தனது டிபன் பாக்ஸை அந்த சிறுவனிடம் நீட்டியபோது அதை வாங்கி சாப்பிட முடியாதவாறு கைகள் செயல்படாத நிலையில் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்த இக்பால் சிங், தனது கையால் அவனுக்கு உணவூட்டி, தண்ணீர் குடிக்க வைத்து, வாயை கழுவிவிடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.



    இதை கண்ட காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி உள்ளிட்ட பலர் இக்பால் சிங்கின் மனிதநேயத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

    பிறருக்கு உதவ வேண்டும் என்ற கொள்கை எங்களது பயிற்சிக்காலத்தில் கற்றுத்தரப்பட்டது. அதன்படி அந்த சிறுவனுக்கு நான் உதவி செய்தேன். இந்த சம்பவம் வீடியோவாகி இப்படி பரவும் என்று எதிர்பார்த்து நான் அப்படி செய்யவில்லை என்று கூறும் இக்பால் சிங்குக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் அளித்து கவுரவிக்க மத்திய துணை ராணுவப்படை உயரதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

    மும்பையில் 7 வயது சிறுவன் பீர்பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவனது சித்தப்பாவை போலீசார் கைது செய்தனர். #Mumbai #ManHeld #Murder
    மும்பை:

    மும்பை பைகன்வாடி ரபீக் நகரை சேர்ந்த சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி(வயது7). கடந்த சனிக்கிழமை காலை வீட்டில் இருந்து விளையாட வெளியே சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கலக்கம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தனர். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் சிவாஜி நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர். இந்தநிலையில் தேவ்னார் தியோனர் சொசைட்டி பகுதியில் உள்ள வாகன நிறுத்தத்தில் சிறுவன் முகமது இர்பான் அஸ்காரலி பலத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டான்.

    இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுவனை அவனது சித்தப்பா முகமது நவ்சத் அலாவூதின் அப்பாசி(22) என்பவருடன் பார்த்ததாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், சிறுவனை அவர் தான் கடத்தி கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

    முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது அண்ணன் மற்றும் மனைவி திட்டி வந்துள்ளனர். இதனால் அவர்களை பழிவாங்குவதற்காக முகமது இர்பான் அஸ்காரலியை கடத்தி பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முகமது நவ்செத் அலாவூதின் அப்பாசியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Mumbai #ManHeld #Murder

    மத்திய பிரதேசத்தில் 70 அடி ஆழ்குழாய் கிணற்றுக்குள் சிக்கிய சிறுவன் 12 மணி நேரம் போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டான்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் உள்ள கேர்கர் கிராமத்தில் வசித்து வருபவர் ஆதித்யா பிரதாப். இவரது மகன் தேஜ்பிரதாப்.

    2 வயதான அவன் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள வயல் பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்தான். அன்று இரவு 10.30 மணி அளவில் அவன் மீண்டும் வயல் ஓரத்தில் சென்று தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தான்.

    அந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறுக்காக தோண்டிய இடம் மூடப்படாமல் இருந்தது. அதை கவனிக்காமல் ஓடிய தேஜ்பிரதாப் கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள் விழுந்து விட்டான். அவனது தந்தை ஆதித்ய பிரதாப் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவர் சிங் ராங்கி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து உதவி கோரினார். போலீசார் அந்த வயல் பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    சனிக்கிழமை இரவு 11 மணிக்கு ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறு அருகே குழி தோண்டப்பட்டது. இதற்கிடையே குழாய் மூலம் அந்த சிறுவனுக்கு ஆக்சிசன் செலுத்தப்பட்டது. மேலும் தொலைத் தொடர்பு கருவி மூலம் அந்த சிறுவனுக்கு தைரியம் அளிக்கும் வகையில் உறவினர்கள் பேசிக் கொண்டே இருந்தனர்.

    நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில் அந்த சிறுவன் ஆழ்குழாய் கிணற்றுக்குள் சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 70 அடி ஆழத்துக்கு அருகில் பள்ளம் தோண்டப்பட்டு அந்த குழாய் துண்டிக்கப்பட்டது. 12 மணி நேரம் இந்த மீட்பு பணி நடந்தது.

    நேற்று பகல் 11 மணிக்கு அந்த சிறுவன் சிக்கியிருந்த குழாய் ஓட்டை போடப்பட்டு அதிலிருந்து தேஜ்பிரதாப்பை மீட்டனர். அவன் மயங்கிய நிலையில் இருந்தான்.

    உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் கழித்து அவன் சகஜ நிலைக்கு திரும்பினார். 70 அடி ஆழம் வரை சென்று உயிர் தப்பிய அந்த சிறுவனை மாவட்ட அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    ரஷ்யாவில் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனின் ஆசையை அதிபர் புதின் பூர்த்தி செய்துள்ளார். #Kremlin #Putin
    ரஷ்யாவின் தெற்கே ஸ்டாவ்ரோபோல் பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுவனுக்கு தீவிர நோய் இருந்தது.  இதனால் அவன் விரும்பிய சம்போ என்ற விளையாட்டில் தொடர்ந்து பயிற்சி பெற முடியாமல் அதில் இருந்து விலக வேண்டியிருந்தது.

    அவனுக்கு ரஷ்ய அதிபர் புதினுடன் கைகுலுக்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆவல் இருந்தது.  இந்த ஆசை நிறைவேறியுள்ளது.  சிறுவனை கிரெம்ளின் மாளிகைக்கு புதின் வரவழைத்துள்ளார். அங்கு தனது தாயுடன் சென்ற சிறுவனை புதின் சந்தித்து சிறிது நேரம் பேசினார். அதன்பின் அவனிடம் கைகுலுக்கி அவனது ஆசையை பூர்த்தி செய்து வைத்துள்ளார்.

    அவனது போட்டிக்கான ஆடையிலும் புதின் கையெழுத்து இட்டு உள்ளார். நோயை விரட்டிய பின் முதல் போட்டியில் கலந்து கொள்ளும்பொழுது இந்த ஆடையை அணிந்து கொள்ளலாம் என சிறுவனின் தாய் அவனிடம் உறுதி கூறியுள்ளார்.

    ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையில் சுற்றி பார்த்த அந்த சிறுவன் அங்குள்ள பல அறைகளுக்கும் சென்றுள்ளான்.  ஆண்டிரீவ்ஸ்கை என்ற அறைக்கும் அவன் சென்றுள்ளான். இங்கு முக்கிய தலைவர்கள் பதவி ஏற்று கொள்வது வழக்கம்.

    இதுபற்றி சிறுவன் கூறும்பொழுது, நான் மாஸ்கோ நகருக்கு முதன்முறையாக வந்துள்ளேன்.  இதில் நான் ஆர்வமுடன் இருந்தேன். அதிபர் புதின் எனது கைகளை வலிமையுடன் குலுக்கினார் என கூறியுள்ளான்.#Kremlin #Putin
    உக்ரைனில் தானே தயாரித்த பாராசூட்டை பரிசோதிக்க 14-வது மாடியில் இருந்து குதித்த சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Jump #Stunt #Homemade #Ukraine #Parachute
    கீவ்:

    உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கீவ்கா நகரை சேர்ந்த 15 வயது சிறுவன் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் வகையில் வித்தியாசமான சாகசத்தில் ஈடுபட முடிவு செய்தான்.

    இதற்காக அவன் வீட்டிலேயே பாராசூட் ஒன்றை தயார் செய்தான். பின்னர் அந்த பாராசூட்டை பரிசோதித்து பார்க்க முடிவு செய்த சிறுவன் வீட்டின் அருகே உள்ள 14 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் உச்சிக்கு சென்றான்.

    சிறுவனின் சாகசத்தை பார்க்க அவனது தாய், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்தனர். அவர்கள் அனைவரும் சிறுவனை உற்சாகப்படுத்தியதோடு, பலர் அங்கு நடப்பதை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அந்த சிறுவன் தனது இரு கைகளையும் உயர்த்தி காட்டியபடி, மாடியில் இருந்து கீழே குதித்தான்.

    பின்னர் அவன் தனது பாராசூட்டை இயக்கினான். அந்த பாராசூட் சரியான நேரத்தில் விரிந்த போதிலும், முறையாக இயங்கவில்லை. இதனால் சிறுவன் தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான். தன் கண் முன்னே மகன் கீழே விழுந்து உயிர் இழந்ததை கண்டு அவனது தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.

    சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர், “அங்கு ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் சிறுவனின் விபரீத முயற்சியை தடுக்கவில்லை. மாறாக அவர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.

    சிறுவன் பாராசூட்டை முறையாக தயார் செய்யாததால் இந்த விபரீதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதே சமயம் முறையாக தயார் செய்யப்பட்ட பாராசூட்டை பயன்படுத்தி இருந்தாலும் கூட சிறுவன் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  #Jump #Stunt #Homemade #Ukraine #Parachute
    அபிராமபுரத்தில் சிறுவனை மிரட்டி பணம், செல்போன் பறித்த கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை அபிராமபுரத்தில் இட்லி மாவு கடையில் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக் வேலை செய்து வந்தான்.

    இவன் கடை உரிமையாளருக்கு உணவு வாங்குவதற்கு மோட்டார்சைக்கிளில் சென்றான். அப்போது 2 வாலிபர்கள் சிறுவனை வழி மறித்தனர்.

    அவனை மிரட்டி செல்போனை பறித்த கொள்ளையர்கள் ரூ.300 பணத்தையும் பறித்தனர். அதோடு நிற்காமல் சிறுவன் அணிந்திருந்த சட்டையையும் கொள்ளையர்கள் கழற்ற சொன்னார்கள். பின்னர் அதனையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    இதுபற்றி சிறுவன் கார்த்திக் அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தான். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செல்போன்-பணத்துடன் தப்பிய ஓடிய கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள 6 வயது சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியுடன் இணைந்து பயிற்சி செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. #AUSvIND #Australia #ViratKohli
    முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையொட்டி ஆஸ்திரேலிய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய சீருடையுடன் 6 வயது சிறுவனும் துருதுருவென வலம் வருவதை பார்க்க முடிகிறது. யார் அந்த சிறுவன் என்று விசாரித்தபோது, அந்த சிறுவனின் பெயர் ஆர்ச்சி ஷில்லர் என்பதும், இதய பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள அவனுக்கு இதுவரை 13 முறை ஆபரேஷன் நடந்திருக்கும் அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

    ‘லெக்-ஸ்பின்னர்’ ஆக வேண்டும் என்பது அவனது விருப்பம். அவனது உடல்நிலையையும், கிரிக்கெட் ஆவலையும் தனியார் அமைப்பு மூலம் அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அவனை தங்கள் அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது.

    மெல்போர்னில் நடக்கும் 3-வது டெஸ்ட் போட்டி வரை ஆஸ்திரேலிய வீரர்களுடன் தங்கியிருந்து பயிற்சி உள்ளிட்ட விஷயங்களில் ஜாலியாக நேரத்தை செலவிடுவான். தனது சுழற்பந்து வீச்சால் விராட் கோலியை அவுட் ஆக்க வேண்டும் என்பதே இந்த சிறுவனின் மிகப்பெரிய ஆசையாகும்.  #AUSvIND #Australia #ViratKohli
    மகளிர் சுய உதவிக்குழு தவணை செலுத்தாததால் சிறுவனை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    போடி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்த ராஜூ மனைவி சுலோச்சனா (வயது48). இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த குழுவில் குலாளர்பாளையத்தை சேர்ந்த வீரணன் மனைவி ராணி (29). உறுப்பினராக உள்ளார்.

    இவர் ரூ.25 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். அதற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை தவணை செலுத்தி வந்தார். கடந்த 2 மாதமாக ராணி தான் வாங்கிய கடனுக்கு தவணை கட்டாமல் இருந்துள்ளார்.

    ஆத்திரம் அடைந்த சுலோச்சனா, ராணியின் வீட்டில் வந்து சத்தம்போட்டு சென்றார். நேற்று மாலையில் ராணியின் மகன் செல்வகணபதி (11) என்பவனை சுலோச்சனா பள்ளி முடிந்து வரும்போது வழியிலேயே மடக்கி கடத்தி சென்று விட்டார். தன் மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததை அறிந்த ராணி பள்ளியில் தேடி பார்த்தார். அங்கு தனது மகன் இல்லை. அவனது நண்பர்களிடம் கேட்டபோது சுலோச்சனா அழைத்து சென்றதாக கூறினர்.

    அப்போது ராணியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய சுலோச்சனா நீ கட்ட வேண்டிய தவணை தொகையை செலுத்தி விட்டு உன் மகனை அழைத்து செல் என கூறினார். இதை கேட்டதும் பதறி போன ராணி போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சுலோச்சனா வீட்டிற்கு சென்று அங்கிருந்த சிறுவன் செல்வகணபதியை மீட்டனர். மேலும் பணத்திற்காக சிறுவனை கடத்தி சென்ற சுலோச்சனாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    ஆன்லைன் மூலம் நட்பாக கிடைத்த தோழி தன்னை காதலிக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சிறுவன் சுமார் 6 ஆயிரம் கி.மீட்டருக்கு அப்பால் உள்ள காதலியை தேடிப்பிடித்து கொலைசெய்துள்ளான். #Russia #SocialMediaKills
    மாஸ்கோ:

    பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் இளைஞர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சமூக வலைதளங்கள் மூலம் பல சாதகமான விஷயங்கள் நடந்தாலும், உயிருக்கு பாதகமான நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

    ரஷ்யாவைச் சேர்ந்த கிரில் வொல்ஸ்கி என்ற 16 வயது சிறுவன், ஆன்லைன் மூலம் மாஸ்கோவில் உள்ள கிறிஸ்டினா என்ற சிறுமியுடன் நட்புடன் பழகிவந்துள்ளான். நாளடைவில் இவனுக்கு கிறிஸ்டினா மீது காதல் வர, இவனது காதலை கிறிஸ்டினா ஏற்க மறுத்துள்ளார்.



    இதனால் ஆத்திரமடைந்த கிரில் தனது சேமிப்பில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பெற்றோருக்கு தெரியாமல் மாஸ்கோ பயணித்துள்ளான். 6 ஆயிரத்து 276 கிலோ மீட்டர் தூரம் பயணித்த கிரில், சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளான். மேலும், யாரும் கண்டுபிடித்துவிட கூடாது என்பதற்காக கழிவுநீர் தொட்டியில் சிறுமியின் உடலை மூழ்கச்செய்துள்ளான்.

    சிறுமி காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஆப் மூலம் ஏற்பட்ட நட்பு இரண்டு சிறுவர்களின் வாழ்வை சூறையாடியிருப்பது சற்றே சிந்திக்க வைக்கிறது. #Russia #SocialMediaKills
    செல்போனால் ஏற்பட்ட தகராறில் சிறுவன் ஒருவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள துவாரகா பகுதியின் பிந்தாபூர் என்னும் இடத்தில் வசிப்பவர் ரன்பீர் சிங். இவரது மகன் குல்‌ஷன் (17).

    நேற்று முன்தினம் இரவு செல்போன் பிரச்சினை தொடர்பாக குல்ஷன் தனது சகோதரியுடன் தகராறில் ஈடுபட்டான். பிறகு சகோதரியின் செல்போனை அடித்து நொறுக்கி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான்.

    இத்ற்கிடையே, நேற்று காலை 6.15 மணி அளவில் குல்ஷன் வீடு திரும்பினான். சிறிது நேரம் கழித்து வீட்டின் முன்பாக கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.

    இதைக் கண்ட அவனது குடும்பத்தினர் உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் வழியிலேயே அவன் பரிதாபமாக உயிர் இழந்தான்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் குல்‌ஷன் கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சிறுவன் தனது கழுத்தின் மீது துப்பாக்கியை அழுத்தி வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். அவன் பயன்படுத்திய நாட்டு கைத்துப்பாக்கியும், பயன்படுத்தப்படாத 4 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன என தெரிவித்தனர்.

    செல்போன் தொடர்பாக சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் சிறுவன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    விபத்தில் பாதிக்கப்பட்டு சுயநினைவின்றி கோமா நிலையில் இருக்கும் சிறுவனுக்கு உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 295 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். இதை பெற்றுக்கொண்ட கலெக்டர் பிரபாகர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் பொதுமக்கள் வழங்கக்கூடிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மனுவின் தன்மை குறித்து கள ஆய்வு மேற்கொண்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். அதே போல முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட மனுக்கள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேன்கனிக்கோட்டை நவுரோஜ் தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் ஹரி(வயது 10) விபத்தில் பாதிக்கப்பட்டு சுய நினைவின்றி கோமா நிலையில் உள்ளான். அந்த சிறுவனின் பராமரிப்புக்காக மாதம்தோறும் ரூ.1,500 பெறுவதற்கான ஆணை மற்றும் கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து மருத்துவ செலவிற்காக ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை ஆகியவற்றை கலெக்டர் பிரபாகர் வழங்கினார்.

    ஊடேதுர்க்கம் அருகே உள்ள யு.குருபரப்பள்ளியைச் சேர்ந்த சென்னம்மா (62) என்ற மூதாட்டி நேற்று முதியோர் உதவித்தொகை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார். இந்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்து சென்னம்மாவுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். மனு கொடுத்த சில மணி நேரங்களில் உதவித்தொகைக்கான ஆணை கிடைத்த மகிழ்ச்சியில் மூதாட்டி சென்னம்மா, கலெக்டர் பிரபாகருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் அய்யப்பன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    ×