search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்று அடையாளம் தெரியாதவர்கள் கூறிய கருத்துக்கள் குறித்து மேலிடத்தில் கூறி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #Elangovan
    சென்னை:

    தமிழக காங்கிரசில் நிலவி வரும் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் தலைவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் இடையே கருத்துவேறுபாடு நீடித்து வருகிறது.

    திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்று இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் மேலும் சில தலைவர்களும் டெல்லி மேலிடத்தில் வலியுறுத்தி உள்ளனர். நுங்கம்பாக்கத்தில் சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கோஷ்டி மோதல் வெளிப்படையாகவே தெரிந்தது.

    இதேபோல கடந்த 9-ந்தேதி நடைபெற்ற போராட்டத்திலும் திருநாவுக்கரசருக்கு எதிராக காங்கிரசார் பங்கேற்கவில்லை. அவர்கள் வேறு வேறு மாவட்டங்களில் சென்று பங்கேற்றனர்.

    இந்தநிலையில் நேற்று இளங்கோவன் ஆதரவாளர்கள் திருநாவுக்கரசரை விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டனர்.

    அதில் திருநாவுக்கரசர் ‘‘தன்மானத்தை இழந்த பொம்மை தலைவர்’’ என்றும் இளங்கோவனை தொடர்ந்து விமர்சித்தால் எம்.ஜி.ஆர் இறந்த அன்று நடந்த சம்பவங்களை அம்பலப்படுத்துவோம் என்றும் கூறி இருந்தனர்.

    இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் இன்று திருநாவுக்கரசர் இதுதொடர்பாக பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-


    இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்று அடையாளம் தெரியாத யார் யாரோ சொல்லும் கருத்துக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேலை வெட்டி இல்லாமல் வீட்டுக்குள் இருந்துகொண்டு வெளியிடும் அறிக்கை பற்றி நான் கவலைப்பட போவதில்லை.

    எம்.ஜி.ஆர் இறந்த அன்று என்ன நடந்தது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தால் சொல்ல வேண்டியதுதானே. இதுபற்றி மேலிடத்தில் கூறி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார். #Congress #Thirunavukkarasar #Elangovan
    தமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மை தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு வரலாறு தெரிய வாய்ப்பில்லை என்று இளங்கோவன் ஆதரவாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். #Thirunavukkarasar #Elangovan
    சென்னை:

    தமிழக காங்கிரசில் இளங்கோவன் மற்றும் திருநாவுக்கரசர் கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.

    இளங்கோவன் ஆதரவாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஏ.பி.சி.வி. சண்முகம், ரங்கபாஷ்யம், வி.ஆர். சிவராமன், ஜெரோம் ஆரோக்கியராஜ், குலாம் மொகைதீன், வசந்தராஜ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராகுல் காந்தியின் ஆணையின்படி மோடி அரசின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை நினைவூட்டி கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், இளங்கோவனின் அரசியல் பாரம்பரியம் பற்றி விமர்சனம் செய்தது ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனையும் மிகுந்த மனவேதனை அடையச் செய்துள்ளது.

    சமூக நீதிக்காக புரட்சி செய்த தந்தை பெரியாரையும், சொல்லின் செல்வர் ஈ.வே.கி. சம்பத் குறித்தும் பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு தகுதி இல்லை. பச்சைத் தமிழர் காமராஜர் இன்னும் 10 ஆண்டுகளுக்கு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவர் தந்தை பெரியார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து காங்கிரஸ் பேரியக்கத்தை ஓங்கி நிற்கச் செய்தவர் தந்தை பெரியார்.


    தனது கவுரவம் பாதிக்கப்பட்ட போது, தன்மானம்தான் பெரிது என எண்ணி திராவிட கொள்கைகளை துறந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்த சம்பத் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக - பொதுச் செயலாளராக பணியாற்றி பட்டித் தொட்டியெங்கும் தனது சொல்லாற்றலால் காங்கிரஸ் கொள்கைகளை முழங்கியவர்.

    சுதந்திர போராட்ட தியாகியின் குடும்பத்தில் பிறந்து மறைந்த பல தியாகிகளை உலகம் உள்ளவரை அனைவரும் போற்றும் வண்ணம் தனது நடிப்பால் உயிரோட்டம் கொள்ளச் செய்தவர் சிவாஜிகணேசன், காங்கிரஸ் பேரியக்கமே தனது உயிர் மூச்சு என வாழ்ந்தவர். அவரைக் கொச்சைப்படுத்தி பேசுவதை உண்மையான எந்த காங்கிரஸ் தொண்டனும் ஏற்கமாட்டான்.

    ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்கை பிடிப்போடு வெவ்வேறு கட்சிகளில் இருப்பது தவறில்லை. ஒரே நபர் பதவி சுகத்துக்காக, விசுவாசமும், நன்றியும் இல்லாமல் பல கட்சிகளுக்கு போவதுதான் கேவலமான செயல்.

    பதவிக்காக தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மை தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு அவர்களது வரலாறு தெரிய வாய்ப்பில்லை. பதவி சுகத்திற்காக பல கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து, இருந்த இடத்திற்கு விசுவாசமும், நன்றியும் இல்லாதவர் திருநாவுக்கரசர். இளங்கோவன் மீது இனி மேலும் இது போன்ற தரமற்ற விமர்சனங்களை செய்தால் இவர் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த போது மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்த இரவில் என்னென்ன காரியங்கள் செய்தார் என்ற விபரங்களை எல்லாம் வெளியிட நேரிடும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்கள். #Thirunavukkarasar #Elangovan #Congress
    மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக அறிவித்து திருநாவுக்கரசர் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர். #demonetisation #thirunavukkarasar #congress

    சென்னை:

    மத்திய அரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கையை கருப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. மூன்றாம் ஆண்டான இந்த வருடமும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், ஸ்ரீவல்லிபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோடி கோடியாக பணம் வரும் என்று சொல்லி பணம் மதிப்பிழப்பின் மூலம் மக்களை தெரு கோடிக்கு கொண்டு வந்து விட்டது மோடி அரசு. மோடி பதவியேற்ற பிறகு நாடு முழுவதும் எதிர்ப்பையே சம்பாதித்து வருகிறார்.

    தற்போது எதிர்ப்பு அலை தான் வேகமாக வீசுகிறது. வருகிற தேர்தலில் மோடி ஆட்சியை காங்கிரஸ் வீழ்த்துவது உறுதி. இதற்காக மத சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருவது கூடுதல் பலம் சேர்க்கும்.

    எங்களை பொறுத்தவரை ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். மோடி தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை. சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயம் நலிவடைந்துள்ளது. இந்த அரசு அகற்றப்பட்டால் தான் நாடு முன்னேறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் குமரி அனந்தன், டாக்டர் செல்லக்குமார், விஜயதரணி எம்.எல்.ஏ. தணிகாசலம், கஜநாதன், தாமோதரன், அசன் ஆரோன், சொர்ணா சேதுராமன், மாவட்ட தலைவர்க் சிவராஜசேகர், வீரபாண்டியன், எம்.எஸ்.திரவியம் மற்றும் நிர்வாகிகள் தி.நகர் ஸ்ரீராம், பி.வி.தமிழ்செல்வன், தணிகைவேல், பிரகாஷ், துரைசிங், ஜெகன், நாச்சிகுளம் சரவணன், தி.நகர் விக்னேஷ்வரன், சாம்டெனிசன், வில்லிவாக்கம் சுரேஷ், தாஸ்பாண்டியன், இல.பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். #demonetisation #thirunavukkarasar #congress

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3ம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு மோடி அரசை கண்டித்து 9ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress #Demonetization
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 8.11.2016 அன்று நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற வகையில் பயன்பாட்டில் இருந்த ரூபாய் 500, 1000 நோட்டுகள் அனைத்தையும் செல்லாது என சர்வாதிகாரிபோல் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

    இதனால் கடந்த 2 ஆண்டு காலமாக மிகப் பெரிய பொருளாதார பேரழிவை நாடு சந்தித்து வருகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், சிறு வணிகர்கள், சிறு, குறு தொழில் முனைவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.



    பணமதிப்பு நீக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவையும், மக்கள் பாதிப்பையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தலின்பேரில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்த 3-ம் ஆண்டின் துவக்க நாளை முன்னிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற வேண்டும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.

    ஆகவே மாவட்டத் தலைவர்கள் வருகிற 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தங்கள் கட்சி அமைப்பு மாவட்டங்களில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை மிக சிறப்பாக நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பில், எனது தலைமையில் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வருகிற 9.11.2018 காலை 11 மணியளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சஞ்சய்தத், டாக்டர் சிரிவல்ல பிரசாத் மற்றும் முன்னணி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress  #Demonetization
    20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார். #Congress #Thirunavukkarasar #DMK
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 34-வது நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

    இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் குமரி அனந்தன் உள்பட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் நடந்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த தேர்தல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

    இதில் காங்கிரஸ் எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்பது தி.மு.க.வுடன் ஆலோசனை நடத்திய பிறகுதான் முடிவு செய்யப்படும். தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராகவே உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #DMK
    தேர்தல் பயம் இல்லை என்று காட்டுவதற்காக 20 தொகுதியில் பொறுப்பாளரை அதிமுகவில் நியமித்து உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #ADMK #Congress #thirunavukkarasar
    அவனியாபுரம்:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    உச்சநீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்பந்தமான நெடுஞ்சாலை, ஒப்பந்த முறைகேட்டில் நடந்த ஊழல் குறித்த தமிழக காவல்துறையினர் கொடுத்த அறிக்கையை தொடர்ந்து சி.பி.ஐ விசாரணை செய்ய எடுத்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யக் கூடாது என தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ரத்து செய்து இருக்க வேண்டும்.

    வழக்கு சம்பந்தமான முதல்வர் மீதான குற்றச்சாட்டிற்கு அறிக்கை கேட்டு உள்ளது. இது தற்காலிக நிவாரணம் தான். முதல்வர் தற்போது ஆறுதல் பெற்று இருக்கலாம்.

    சட்டமன்றத்தில் வாக்கெடுப்பில் முதல்வருக்கு வாக்களிக்க கொறடா சொல்லியும் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் எதிராக வாக்கு அளித்தனர்.

    அவ்வாறு செய்ததால் அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்.ஆனால் அ.தி.மு.க.வினர் அவர்களுக்குள் சமரசம் செய்து கொண்டனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல் முறையீடு செய்தால் இன்னும் கால தாமதம் ஆகும். இந்த தொகுதிகளில் மக்களே தேர்தல் நடத்த விரும்புகின்றனர்.

    தமிழகத்தில் பெய்யாத மழையையும், வராத புயலையும் காண்பித்து தோல்வி பயத்தால் திருப்பரங்குன்றம், திருவாரூர் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.

    தீர்ப்பு வந்து 30 நாட்களுக்குள் மேல் மூறையீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் 18 தொகுதிகளில் தேர்தல் அறிவிக்க வேண்டும்.

    எங்களுக்கு தேர்தல் பயம் இல்லை என்று காட்டுவதற்காக 20 தொகுதியில் பொறுப்பாளரை அ.தி.மு.க.வில் நியமித்து உள்ளனர். டெங்கு, பன்றி காய்ச்சல் 3 நாட்களுக்கு பின் தான் நம்மால் உணர முடியும். இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் விரைவாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Congress #thirunavukkarasar
    என்னை சந்திக்க வரும்போது பொன்னாடைகள், பூங்கொத்துகள் தருவதை தவிர்த்து அதற்கு பதிலாக கட்சிக்கு தேர்தல் நிதி வழங்குங்கள் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #congress #election

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் பிற்பட்டோர் பிரிவு மாநில தலைவராக டி.ஏ.நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பதவி ஏற்பு விழா சத்தியமூர்த்திபவன் மைதானத்தில் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பிற்பட் டோர் பிரிவின் மேலிட பொறுப்பாளர் ரோட்டாய் போசையா ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    பின்னர் திருநாவுக்கரசர் கூறும்போது, “ஒவ்வொரு பிரிவினரும் கட்சியை வலுப்படுத்தவும், வருகிற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமராக்க அனைவரும் முழு மூச்சுடன் பணியாற்ற வேண்டும். மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சியை அகற்ற எல்லோரும் தயாராகி விட்டனர். மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் காங்கிரசார் கொண்டு சேர்க்க வேண்டும்.

    தேர்தலுக்கு கட்சி தயாராகி வருகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளிலும், என்னை சந்திக்க வரும்போது பொன்னாடைகள், பூங்கொத்துகள் தருவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக கட்சிக்கு தேர்தல் நிதி வழங்குங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குமரி அனந்தன், சிரஞ்சீவி, ஊர்வசி அமிர்தராஜ், கஜநாதன், எம்.எஸ்.திரவியம், பி.வி. தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar  #congress #election

    இடைத் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #admk #byelection

    பீளமேடு:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    18 எம். எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்த காலதாமதமாகும்.

    எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் , உள்ளாட்சி தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டும். பல்வேறு காரணங்களை சொல்லி தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளார், இதன் மூலம் இடை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க.விற்கு பயம் உள்ளது என்பது தெளிவாகிறது.

    மு.க.ஸ்டாலின் , துரைமுருகன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் திருவள்ளூரில் நடந்த கூட்டத்தில் பேசியிருப்பதை கண்டிக்கிறேன்.


    இது போன்ற தரம் தாழ்ந்த தரக்குறைவான விமர்சனங்களை அமைச்சர்கள் தவிர்ப்பது நல்லது.

    எதிர்கட்சி தலைவரை இவ்வாறு அநாகரீகமாக பேசுவது தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #admk #byelection

    பதவி ஆசையில் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ரஜினிகாந்தின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress #Rajinikanth
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பதாக கூறி, அதை பெரிதுபடுத்துகிறார்கள். ஆனால் எங்களுக்குள் எந்த கோஷ்டி மோதலும் இல்லை.

    நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒரே ரோட்டில் தலைவர்கள் ஆங்காங்கே நின்று கொண்டிருந்ததை வைத்து கோஷ்டி பூசல் என்கிறார்கள். ஆனால் எல்லோரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.



    எங்கள் கட்சியில் இருக்கும் கோஷ்டிபூசலை சரிசெய்யும்படி, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார். முதலில் உங்கள் கட்சிக்குள் சுப்பிரமணியசாமி, ஜஸ்வந்த் சிங் போன்ற தலைவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோசியுங்கள்.

    மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்பக் கூடாது. முதலில் உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கை துடையுங்கள்.

    ரசிகர்கள் பண ஆசையுடனும், பதவி ஆசையுடனும் அரசியலுக்கு வரக்கூடாது என்று ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். இது எல்லா கட்சியினரும் சொல்லும் பொதுவான கருத்து தான். இது வரவேற்கத்தக்கது.

    ரஜினியை தி.மு.க. விமர்சித்து இருப்பது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

    தகுதிநீக்க விவகாரத்தில் அவர்கள் அப்பீலுக்கு சென்றால் இடைத்தேர்தல் நடைபெறுவது காலதாமதம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக முன்னாள் மத்திய மந்திரி வாழப்பாடி ராமமூர்த்தியின் 16-வது நினைவுநாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்துக்கு திருநாவுக்கரசர் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் எம்.பி.க்கள் விஸ்வநாதன், ராணி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், நிர்வாகிகள் திருவான்மியூர் மனோகரன், கராத்தே ரவி, ஓட்டேரி தமிழ்செல்வன், தணிகாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Thirunavukkarasar #Congress #Rajinikanth

    சபாநாயகரின் தீர்ப்பு, கோர்ட்டு தீர்ப்பு பற்றி மக்களின் கருத்தை அறிய 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #18MLAsCaseVerdict
    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று ஐகோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு வந்திருப்பதால் அவர்கள் எம்.எல்.ஏ. பதவி ரத்தாகி இருக்கிறது.

    ஏற்கனவே 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. அதாவது வாக்களித்த 50 லட்சம் வாக்காளர்களுக்கும் பிரதிநிதிகள் இல்லை.

    எம்.எல்.ஏ.க்களின் தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டப்படி மேல்முறையீடு செய்ய வழி இருந்தாலும் மேல் முறையீடு செய்வதா? வேண்டாமா? என்பது அவர்களின் விருப்பம். அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

    என்னை பொறுத்தவரை சபாநாயகரின் தீர்ப்பு, கோர்ட்டு தீர்ப்பு பற்றி மக்களின் கருத்தை அறிய 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #18MLAsCaseVerdict
    தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த அரசு நடத்துமா? என்பது சந்தேகம் தான் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #ADMK
    தென்காசி :

    நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர்கள் பட்டியல் சரிபார்த்தல் உள்ளிட்ட கட்சி பணிகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறோம்.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு தற்போது பிற மாநிலங்களில் நடைபெறும் தேர்தலையொட்டி தேர்தல் நடத்திருக்க வேண்டும். இந்த 2 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. பயப்படுகிறது. அதனால் வராத மழையையும், புயலையும் காரணம் காட்டி தேர்தலை ஒத்தி வைத்துள்ளது. 2 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.



    உள்ளாட்சி தேர்தலை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த அரசு நடத்துமா? என்பது சந்தேகம் தான். கோர்ட்டு வலியுறுத்தியும் கூட தேர்தலை தள்ளிவைத்து கொண்டே இருக்கிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு வாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு விரைவில் வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த தீர்ப்பு வந்த பிறகு தமிழகத்தில் அரசியல் ரீதியான மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. கமல்ஹாசன் மற்றும் அவருடைய கட்சி குறித்து நான் சொல்லாத கருத்துக்களை வைத்து சில ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகிறது, அது தவறு. தி.மு.க.வில் இருந்து காங்கிரஸ் விலக வேண்டும் என்பது கமலின் கருத்து ஆகும்.

    சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனை பின்பற்ற வேண்டும் என்ற முறையில் அங்குள்ள அரசு நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது. இந்த தீர்ப்பால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்தால் கோவில் நிர்வாகம், ஆன்மிகவாதிகள் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்து பரிகாரம் தேட வேண்டும். அதைவிட்டு தீர்ப்பு வழங்கிய பிறகு பாரதீய ஜனதா மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. சட்டத்திற்கு புறம்பாக யாரும் செயல்பட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #ADMK
    கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பா.ஜனதா அரசு மக்களை ஏமாற்றி விட்டது என திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar #bjp

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

    கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி ப.சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, மலேசியா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மக்களிடம் அதிகளவில் வாக்குறுதிகளை கொடுத்து அதை செயல்படுத்தாமல் உள்ளது. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவோம், அனைத்து வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும், விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர்.

    ஆனால் இதனை எல்லாம் நிறைவேற்றாமல் மோடி அரசு மக்களை ஏமாற்றி விட்டது. விலைவாசியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என நினைத்து அதிக வாக்குறுதியை அளித்தோம் என மத்திய மந்திரி நிதின் கட்கரியே கூறியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க லட்சியத்தோடு பணி புரிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ப.சிதம்பரம் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டார். #thirunavukkarasar #bjp

    ×