search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #thirunavukkarasar #congress #dmk

    சென்னை:

    கமலின் மக்கள் நீதி மய்யம் -காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்திக்க இருப்பதாக அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரசுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக கமலும் தெரிவித்தார்.

    தற்போது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. எனவே தி.மு.க.வை கழட்டி விட்டு காங்கிரஸ் அப்படி ஒரு முடிவை எடுக்குமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

    இதற்கிடையில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க கமல் முயற்சி செய்வதாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நடிகர் கமல் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்ததற்கு மகிழ்ச்சி.


    காங்கிரஸ் கட்சியை ஆதரித்ததோடு கூட்டணிக்குள் வரவிரும்பும் கமலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் வாழ்த்து தெரிவித்து வரவேற்கிறேன். அவரின் நல்லெண்ணத்துக்கு பாராட்டுக்கள். இதனால் தமிழகத்தில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி உடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #congress #dmk

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க கமல்ஹாசன் சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். #dmk #congress #kamalhaasan #vck #rahul

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள தேர்தலுக்காக தமிழகத்தில் இப்போதே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டன.

    ராகுல் தலைமையிலான காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணியை தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது “மக்கள் நீதி மய்யம்” கட்சி பாராளு மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கடந்த வாரம் அறிவித்தார். அந்த கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி உள்பட சில கட்சிகள் இடம் பெறும் என்று தகவல்கள் வெளியானது.


    இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ்- கமல் ஹாசன் அமைக்கும் கூட்டணியில் தி.மு.க. இடம் பெறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க தி.மு.க. திட்ட மிட்டு இருப்பதால் தி.மு.க.விடம் இருந்து விலகி, மற்ற கட்சிகளை அரவணைத்து மெகா கூட்டணியை உருவாக்கவே காங்கிரசும் விரும்புவதாக கூறப்படுகிறது.

    கூட்டணிக்காக கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள முயற்சியை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் கொடுத்த இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு முதன் முதலாக கூட்டணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

    ஆனால் இந்த முயற்சியின் பின்னணியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை உடைக்கும் சதி இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் ரவிக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். 

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது பா.ஜ.க.வின் திட்டமாகும். அதை ஏன் கமல்ஹாசன் ஆதரிக்கிறார்?


    இவ்வாறு ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கு தமிழ்நாட்டில் 30 முதல் 35 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ளது. வரும் தேர்தல்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இதுவரை எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட்டது இல்லை. எனவே மக்கள் மத்தியில் கமல்ஹாசனுக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது.

    தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற சற்று கூடுதல் வாக்குகள் தேவையாகும். அந்த வாக்குகள் காங்கிரசிடம் உள்ளது.

    காங்கிரஸ் வாக்குகள் கிடைக்காதபட்சத்தில் தி.மு. க.வால் அதிக இடங்களில் வெற்றி பெற இயலாது. எனவே நடிகர் கமல்ஹாசன் தற்போது மேற்கொண்டுள்ள முயற்சிகள் தி.மு.க.வை பலவீனப்படுத்தும் வகையிலேயே அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். #dmk #congress #kamalhaasan #vck #rahul

    சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #SC #Sabarimala
    மதுரை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கு வேண்டியவர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் ரூ. 4 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதை விசாரித்த கோர்ட்டு போதிய ஆதாரம் இல்லை என்று காவல்துறை தாக்கல் செய்ததை ஏற்க மறுத்து விட்டது.

    மேலும் ஊழல் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றியது. சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தவுடன் முதல்வர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.


    முதல்வரை எவ்வாறு சி.பி.ஐ. விசாரணை செய்ய முடியும்? எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பதவி விலக வேண்டும்.

    இதற்கு அமைச்சர்கள் அந்த கட்சி அப்படி செய்தது? இப்படி செய்தது? என்று அடுத்த கட்சியை குறை கூறக்கூடாது.

    சபரிமலைக்கு பெண்கள் அனுமதிக்கப்பட்ட விசயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஆனால் சபரிமலை கோவிலுக்கு ஒரு மரபு உள்ளது. அதுவும் காக்கப்பட வேண்டும். நீதிமன்றம் சென்று தேவசம் போர்டு தனது உரிமையை பெற வேண்டும்.

    இதற்கிடையே சபரிமலைக்கு செல்லும் பெண்களை தாக்குவது போன்ற செயலில் ஈடுபடுவதை பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகள் நிறுத்த வேண்டும்.

    கமலை பற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சப்பாணி என்று கூறியது தவறு. அரசியலில் நாகரீகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.

    தினகரன்-காங்கிரஸ் கூட்டணி பற்றி கட்சிகள் எந்த ஒரு அறிவிப்பும் தரவில்லை. நாங்கள் தற்போது ஒரு கூட்டணியில் இருக்கும் போது, வேறு கூட்டணி எப்படி வைக்க முடியும்? கமல்ஹாசன், ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரசுடன் இணைவதாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #Sabarimala #SupremeCourt
    சபரிமலை செல்லும் பெண் பக்தர்களை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SabarimalaProtests #SabarimalaVerdict #Thirunavukkarasar

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆற்றுப்படுகையில் மணல் திருட்டு நடந்து வருகிறது. ஆளுங்கட்சியை பயன்படுத்தி ஒருசிலர் இரவில் டிராக்டர் மூலமாக மணல் கடத்துகிறார்கள்.

    இதை மாவட்ட கலெக்டர், தாசில்தார் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை அடிக்கடி அடித்து துரத்தி விட்டு அவர்களின் படகுகளை எடுத்து சென்று விடுகின்றனர். மீனவர்களையும் கைது செய்கின்றனர். பா.ஜனதா ஆட்சியில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    மீனவர்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது பா.ஜனதா. ஆனால் காங்கிரஸ் ஆட்சியின்போது மீனவர்களையும், படகுகளையும் பிடித்து செல்வார்கள். ஆனால் ஒரு சில நாட்களிலேயே அவர்களை விடுதலை செய்வார்கள்.

     


    ஆனால் பா.ஜனதா ஆட்சியில் பிடிக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட படகுகள் பயனற்று போய்விட்டது. மேலும் ஒருசில படகுகளை மீட்டு கொண்டு வந்தாலும் அதை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்காக மீனவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மீனவர்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய-மாநில அரசுகள் இதை கவனத்தில் கொண்டு மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    காங்கிரஸ் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது. மத்திய- மாநில அரசுகளின் ஊழல்கள் பொய்களை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் இந்தமாத இறுதியில் நடத்த இருக்கிறோம்.

    சபரிமலையில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆண், பெண் இருவரும் சமம் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வருகிற பெண்களை தாக்குவது, கார் கண்ணாடியை உடைப்பது என்று வன்முறையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    எடப்பாடி பழனிசாமி மீது நீதிமன்றம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து அதை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஒரு முதல்-அமைச்சர் மீதே சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    மேலும் பல அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் முன்பிருந்த ஆட்சியாளர்களை குற்றம் சொல்லி எதிர்க்கட்சிகளை பயமுறுத்துவதுபோல் பேசுவது சரியானதல்ல. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். தப்பிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaProtests #SabarimalaVerdict #Thirunavukkarasar

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்தார். #Thirunavukkarasar #Congress
    திருச்சி:

    தமிழக காங்கிரஸ் கட்சியில் உருவான கோஷ்டி பூசல் கடந்த மாதம் உச்சகட்டத்தை எட்டியது. மாநில தலைவர் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என எதிர் தரப்பில் உள்ள மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். பாஜகவில் இருந்து வந்த திருநாவுக்கரசர், கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டை மேலிடத்தில் வைத்தனர். இதனால் நிச்சயம் மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    இந்நிலையில், திருச்சியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் கலந்துகொண்டு பேசும்போது, திருநாவுக்கரசரை மாற்றும் எண்ணம் இல்லை என தெரிவித்தார்.


    காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், எல்லா தலைவர்களையும் ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறினார்.

    ‘திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறோம்’ என்றும் சஞ்சய் தத் குறிப்பிட்டார். #Thirunavukkarasar #Congress
    ஸ்ரீபெரும்புதூர் இளைஞர் மேம்பாட்டு மையத்தில் ராஜீவ்காந்தி புகழை மறைக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது திருநாவுக்கரசர் குற்றச்சாட்டியுள்ளார். #Congress #Thirunavukkarasar #RajivGandhi
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் பயங்கரவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு அங்கே நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டிருக்கிறது.

    அதற்கு அருகாமையில் அவரது நினைவைப் போற்றுகிற வகையில் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் 1993-ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக் கழகமாக தொடங்கப்பட்டது. பிறகு 2012-ல் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உயர்நிலை தேசிய கல்வி நிலையமாக உருவாக்கப்பட்டது.

    அங்கே இந்தியாவின் 29 மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் முதுநிலை படிப்பை தங்கி படித்து வந்தனர். குறிப்பாக தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை.

    இளைஞர்களுக்கு பயிற்சி தருகிற தேசிய அமைப்பாக அது செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் பயிலுகிற பல்வேறு மாணவர்கள் அங்கு நிலவுகிற வசதி குறைவு காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதை கேள்வியுற்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் ரூபி ஆர். மனோகரனை அங்கே அனுப்பி நேரில் சென்று ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டேன். அவர் பார்வையிட்டு கொடுத்த தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியை தருகின்றன.

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் இந்த நிறுவனத்தின் முக்கியத்துவத்தை குறைக்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்தெந்த வகையில் ராஜீவ் காந்தியின் பெயரையும், புகைப்படத்தையும் மறைக்க முடியுமோ அந்த வகையில் எல்லாம் மறைக்கப்பட்டு வருகிறது.

    இக்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே அனைத்து படிவங்களிலும் ராஜீவ்காந்தியின் படத்துடன் இடம் பெற்றிருந்த லோகோ சமீப காலத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. அங்கே உள்ள வளாகத்தில் சாம்பல் நிறத்தில் வைக்கப்பட்டிருந்த போர் விமானத்திற்கு இன்று காவி வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.


    அதேபோல, கருத்தரங்கு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தியின் திருவுருவப்படம் அகற்றப்பட்டிருக்கிறது. வளாகத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த அவரது படம் அகற்றப்பட்டு ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தியின் பிறந்தநாளோ, நினைவுநாளோ மற்றுமுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளோ அங்கே கடைப்பிடிக்கப்படுவதில்லை.

    முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் புகழை மறைக்கின்ற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவதை எவராலும் சகித்துக் கொள்ள முடியாது. தமிழகத்தில் அமைந்துள்ள இந்த கல்வி நிறுவனத்தில் நிலவுகிற சீர்கேடுகளை களைவதற்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    ராஜீவ்காந்தியின் புகழை போற்றுகிற வகையில் நிறுவப்பட்ட ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் நிலவுகிற பல்வேறு குளறுபடிகளை களைகிற வகையில் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அடுத்தகட்டமாக போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar #RajivGandhi
    நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #thirunavukkarasar #Vijay
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை புகழ்ந்து பாராட்டியவர்கள் இப்போது மகாத்மா காந்தியின் புகழ் பாடுகிறார்கள். இது மனமாறுதல் என்றால் வரவேற்கக்கூடியது. ஓட்டு வாங்குவதற்காக இருக்கக்கூடாது.

    நடிகர் விஜய் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டதில் எந்த தவறும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கிவிட்டு எம்.எல்.ஏ., அமைச்சர் ஆவதை விட முதலமைச்சர் ஆக வேண்டும் என்று யோசிப்பது உயர்ந்த சிந்தனை தான் எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வரட்டும்.

    ஆனால் மக்கள் அவர்களை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நினைப்பது முக்கியம். மக்களே எஜமானர்கள்.



    காங்கிரசில் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. எல்லா கருத்துக்களையும் எதிர்க்க வேண்டும். விமர்சிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

    பிரதமர் மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி திகழ்கிறார். நம் தேசத்தின் அர்ப்பணிப்பில் இருக்கும் ராகுல் காந்தி மோடியை வீழ்த்தி பிரதமராக வருவார்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள். இதே போன்ற திட்டத்தை அரசு செயல்படுத்தக்கூடாது.

    தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சி மற்றும் மதவாத மத்திய அரசை கண்டித்து மக்களிடம் விளக்க பொதுக்கூட்டம் காங்கிரஸ் சார்பாக 234 தொகுதியிலும் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar #Vijay
    மத்தியில் ஆட்சி செய்த பிறகும் தமிழகத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress
    சென்னை :

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடிகர் சிவாஜிகணேசனின் 91-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவாஜிகணேசனின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கி சிவாஜிகணேசன் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னாள் தலைவர் குமரி அனந்தன், பொது செயலாளர் கே.சிரஞ்சீவி, சிவாஜி நலப்பேரவை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன், கலைப்பிரிவு நிர்வாகிகள் சிவாஜி பாபு, ஆதவன், சுப்பிரமணியன் மற்றும் பிராங்களின் பிரகா‌ஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிவாஜி படத்துக்கு மரியாதை செலுத்தினர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜனதா அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பெரும் கோடீஸ்வரர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்க உதவி புரிந்துள்ளது. வங்கியில் உள்ள மக்கள் பணத்தை விஜய் மல்லையா தொடங்கி நீரவ் மோடி வரை ஏராளமானவர்களுக்கு கடனாக வழங்கி உள்ளது. கடன் வாங்கியவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் மத்திய நிதி மந்திரியை சந்தித்து விட்டு சென்று இருக்கின்றனர்.



    கடந்த 4½ ஆண்டு கால பா.ஜனதா அரசு பெரும் கோடீஸ்வரர்களுக்கு பணத்தை தாரை வார்த்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விவாதிப்போம். மத்தியில் ஆட்சி செய்த பிறகும் பா.ஜனதா உடன் கூட்டணி வைக்க தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கூட யாரும் இல்லாத நிலை தான் மற்ற கூட்டணி கட்சிகளை விமர்சிப்பதை பொன்.ராதாகிரு‌ஷ்ணன் போன்றவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதை அவர்களின் புலம்பலாக தான் கருதுகிறேன்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சடங்கு, சம்பிரதாயத்துக்காக மட்டுமே நடத்தப்பட்டது. நிறைவு நாள் விழாவில் 15 லட்சம் 20 லட்சம் பேர் கூடினார்கள் என்கிறார்கள். அந்த அளவுக்கு அந்த மைதானத்தில் இடம் கிடையாது. அரசு பேருந்துகளை தவறாக பயன்படுத்தியுள்ளனர். எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாக தான் அதை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவாக கொண்டாடவில்லை. பேனர் வைக்க கூடாது என்ற ஐகோர்ட்டு உத்தரவையும் மீறி பேனர்களை வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவை தொடர்ந்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான பாத்திமா ரோஸ்னா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் வக்கீல் சுதா, தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி, துணை தலைவர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். #Thirunavukkarasar #Congress
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    சென்னை:

    சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சிவாஜி கணேசன் படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, தணிகாசலம், சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. ராணி, மாவட்ட தலைவர்கள் வீர பாண்டியன், சிவராஜசேகர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச்சிறந்த தேசியவாதி. அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு மரியாதை செலுத்துவதில் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.

    நேற்று அரசு சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நடத்தப்பட்ட விழா அவருக்கு புகழ் சேர்க்கும் விழா அல்ல. ஒரு சம்பிரதாய சடங்காக நடத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டவர்கள் யாரும் அந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

    எம்.ஜி.ஆர். புகழை அவர்கள் பரப்பவும் இல்லை. நந்தனம் திடலில் வெறும் 20 ஆயிரம் பேர்தான் அமர முடியும். அதற்கே அரசு பேருந்துகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர். என்றாலும், கூட்டம் சேர்க்க முடியவில்லை. இந்த விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளது.


    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தது, விரக்தியின் வெளிப்பாடு. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர கட்சி கிடைக்காததால் புலம்புகிறார். தமிழகத்தில் பா.ஜனதா என்ற கட்சியே இல்லை.

    தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று 5 வருடத்துக்கு முன்பு நடந்த பழங்கதையை மீண்டும் ஏன் பேச வேண்டும். நாலரை ஆண்டுகளில் மோடி செய்தது என்ன? பா.ஜனதாவின் மோசமான ஆட்சியால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் துணை தலைவி மைதிலிதேவி, கஜநாதன், டிராஸ்ளின் பிரகாஷ், சந்திரசேகர், ஓட்டேரி தமிழ் செல்வன் கராத்தே ரவி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஸ்ரீராம், மாம்பலம் ராஜேந்திரன், சித்ரா கிருஷ்ணன், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதும் செய்த காவல்துறை எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய தயங்குவது ஏன்? என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Karunas #HRaja
    சென்னை:

    சென்னையில் அரசியல் தலைவர்கள் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-



    ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் 1 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இந்த உண்மை வெளியே வந்ததால் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் காங்கிரசை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. ஒரு சமுதாயத்தை குறிப்பிட்டு பேசியது கண்டனத்துக்குரியது. அவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். ஆனால் இதைவிட மோசமாக விமர்சனம் செய்த எஸ்.வி. சேகர், எச்.ராஜாவை கைது செய்யவில்லை. அவர்கள் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

    இதற்கு காரணம் தமிழக அரசு பா.ஜனதாவின் அடிமை அரசாக இருப்பது தான். அ.தி.மு.க. அரசு தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக எதிர்கட்சிகளை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.

    இது மக்களை ஏமாற்றும் நாடகம் இதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-



    ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த பிறகும் கவர்னர் காலம் தாழ்த்துவது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது. இதுதொடர்பாக விரைவில் கவர்னரை சந்திக்க முடிவு செய்துள்ளோம்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதும் செய்த காவல்துறை எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் கைது செய்ய தயங்குவது ஏன்? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

    இதன்மூலம் ஜாதி மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்திய அளவில் சனாதன பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. இதை முறியடித்து தேசத்தை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டிசம்பர் 10-ந்தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருச்சியில் தேசம் காப்போம் என்ற பெயரில் மாநாடு நடக்கிறது.

    அதில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:-



    7 தமிழர்கள் விடுதலை வி‌ஷயத்தை சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல், கருணைகண் கொண்டு பார்க்க வேண்டும். அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கும், கவர்னருக்கும் உள்ளதாக சுப்ரீம் கோர்டு கூறியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

    இலங்கை தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு தொடர்பு இருப்பதாக அ.தி.மு.க. போராட்டம் அறிவித்துள்ளது. இது இப்போதுதான் தெரிந்ததா? நாங்கள் ஏற்கனவே பலமுறை இதுபற்றி தெளிவாக சொல்லி இருக்கிறோம். 7 தமிழர்களையும் விடுதலை செய்ய அரசு முன்வர வேண்டும்.

    கருணாஸ் எம்.எல்.ஏ. பேசியது தவறுதான். அவர் வருத்தம் தெரிவித்த பிறகும் கைது செய்து இருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் ஏன் கைது செய்யவில்லை.

    சட்டம் அனைவருக்கும் சமம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

    த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் கூறும்போது, ‘‘7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில், 4 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள் ராஜீவை கொல்வதற்காக திட்டம்போட்டு வந்தவர்கள். பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 3 பேர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள். சந்தர்ப்ப வசத்தால் சிக்கியவர்கள். அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Karunas #HRaja
    ராகுல் காந்தி அனுமதியோடு திருநாவுக்கரசர் ஒப்புதலுடன் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். #congress
    திருச்சி:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி அனுமதியோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஒப்புதலுடன் திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதன்படி மாவட்ட துணை தலைவர்களாக அழகர்சாமி, எழிலரசன், அல்லூர் பாலகிருஷ்ணன், ஜஸ்டின் திரவியராஜ், ராமமூர்த்தி, செல்வி, வீரமுத்து, ராமசாமி, ஆரோக்கியராஜ் ஆகியோரும், மாவட்ட பொதுச் செயலாளர்களாக  செல்வா, புகழேந்தி, சம்பத், மலைராஜா, ரகுவரன், பூபாலன், குமார் ஆகியோரும்,  மாவட்ட பொருளாளராக  சோலையப்பன், மாவட்ட செயலாளர்களாக ரெங்கசாமி, மணிகண்டன், தங்கராஜன், சாகுல்ஹமீது, பிச்சைமுத்து, சந்தானம், முருகேசன், நிரோஷா, பிரபு, மார்ட்டீன், அகிலா இளங்கோவன், சீனி.இளங்கோவன், மல்லிகா, அல்லி முத்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    இத்தகவலை திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார். #congress 
    ராஜபக்சே பேச்சை காரணம் காட்டி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar #Congress #MDK
    சென்னை :

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சி மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாத நிலையில் தி.மு.க., காங்கிரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 25-ந் தேதி பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஆளுங்கட்சி பொதுக்கூட்டம் நடத்துவது மிகுந்த வியப்பை தருகிறது. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பொதுவாக கூறியதை மூடி மறைத்து இலங்கை அரசுக்கு இந்திய அரசு ராணுவ உதவி செய்ததாக கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஆகும்.

    தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய அவதூறு சேற்றை அன்றைய காங்கிரஸ், தி.மு.க. பங்கேற்ற மத்திய அரசின் மீது அள்ளி வீசுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.



    இலங்கையில் போர் நடந்துக் கொண்டிருந்த சூழலில் அதுகுறித்து கருத்து தெரிவித்த ஜெயலலிதா, ஒரு போர் என்றுச் சொன்னால் அதிலே அப்பாவிகள் கொல்லப்படுவதும், பாதிக்கப்படுவதும் இயல்பானது தான் என்று கூறியதை இன்றைய அ.தி.மு.க.வினரால் மறுக்க முடியுமா?.

    விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்ய வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தியவர் ஜெயலலிதா. ஆனால் அதே ஜெயலலிதா 2009-க்கு பிறகு தனது நிலையை மாற்றிக்கொண்டு தமிழ் ஈழத்தை பெற்றுத்தர இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டுமென்று கூறியதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    அ.தி.மு.க.வினர் பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று உள்நோக்கத்தோடு செயல்படுகின்றனர். அவர்களது நப்பாசை நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன். தமிழகத்தின் அரசியல் காற்று அ.தி.மு.க.வுக்கு எதிராக வீச ஆரம்பித்துவிட்டது. இத்தகைய பொதுக்கூட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்றாது, மீண்டும் கொண்டுவராது என்பதை கூற விரும்புகிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #Congress #MDK
    ×