search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100341"

    காங்கிரஸ் தேசிய பொருளாளர் அகமது பட்டேல் அழைப்பின் பேரில் அவசரமாக டெல்லி சென்றுள்ள காங்கிரஸ் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் நடவடிக்கைகள் குறித்து ஆதாரங்களோடு புகார் அளிக்க உள்ளார். #Congress
    சென்னை:

    தமிழக காங்கிரசில் கோஷ்டி மோதல் தீவிரம் அடைந்துள்ளது. திருநாவுக்கரசருக்கு எதிரான இளங்கோவன் அணியினர் ஏற்கனவே திருநாவுக்கரசரை தலைவர் பதவியில் இருந்து நீக்கக்கோரி டெல்லி தலைமையிடத்தில் பல்வேறு புகார்களை அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய்தத், சின்னா ரெட்டி ஆகயோர் நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அன்று மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு எற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் வந்தனர்.

    திடீரென்று இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து 7 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக திருநாவுக்கரசர் அறிவித்தார். ஆனால் நீக்கப்பட்ட 7 பேரும் வெளியிட்ட அறிக்கையில், மாவட்டத்தலைவர், மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் திருநாவுக்கரசருக்கு வேண்டப்பட்ட, கூட்டத்திற்கு அழைக்கப்படாத பலர் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.


    இதைப்பார்த்த எங்களில் இருவர் கூட்ட அரங்கிற்கு உள்ளே சென்றனர். திருநாவுக்கரசர் அவர்களின் பெயரைச் சொல்லி வெளியேறச் சொன்னார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திருநாவுக்கரசரின் கார் ஓட்டுநர் தகராறு செய்து அடிக்க வந்ததால் மோதல் ஏற்பட்டது. இது ஏற்கனவே திருநாவுக்கரசு ஆதரவாளர்களால் திட்டமிட்டு நடைபெற்றதாகும். தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், காழ்புணர்ச்சியோடு ஏழு பேரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். இந்த நீக்கம் செல்லாது, என்று அறிவித்தனர்.

    ஆதாரங்களோடு மாநில பொருளாளர் நாசே ராமச்சந்திரன் டெல்லி சென்றுள்ளார். இன்று தேசிய பொதுச் செயலாளர்கள் முகுல் வாசினிக், அசோக் கெலாட், தேசிய பொருளாளர் அகமது பட்டேல் ஆகியோரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.

    மேலும் இன்று டெல்லியில் மாநிலத்தலைவர்கள், மாநில பொருளாளர்கள் கூட்டம் தேசிய பொருளாளர் அகமது பட்டேல் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கை ஒரு வாரத்திற்கு முன்பாகவே திருநாவுக்கரசருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மாநில பொருளாளருக்கு திருநாவுக்கரசர் தகவல் தெரிவிக்கவில்லை. இதை அறிந்த அகமது பட்டேல் நேரடியாக தொலைபேசியில் நாசே ராமச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்தார். அங்கு இதைப்பற்றியும் புகார் அளிக்க உள்ளார்.

    இதற்கிடையில் டெல்லியில் நடைபெறும் மாநில தலைவர்கள் மற்றும் பொருளாளர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருநாவுக்கரசர் டெல்லி சென்றார்.

    இந்த கூட்டத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அழைப்பு வந்திருந்தும் இளங்கோவன் ஆதரவாளரான தமிழக காங்கிரஸ் பொருளாளர் நாசே. ராமச்சந்திரனுக்கு அழைப்பு பற்றி தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதை தொடர்ந்து அகமதுபட்டேல் அழைப்பின் பேரில் நா.சே. ராமச்சந்திரன் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவங்கள் பற்றி ஆதாரங்களுடன் புகார் அளிக்க விருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress
    விசாரணை செய்யாமல், விளக்கம் எதுவும் கேட்காமல் உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று நீக்கப்பட்ட 7 பேரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஏற்பட்ட கோஷ்டி மோதலை தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்களான விருகம்பாக்கம் பகுதி தலைவர் ஏ.வி.எம்.ஷெரீப், வில்லிவாக்கம் பகுதி முன்னாள் தலைவர் வில்லிவாக்கம் ஜான்சன், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் பொன் மனோகரன், திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் தலைவர் கடல் தமிழ்வாணன், மயிலை பகுதி முன்னாள் தலைவர் முரளிதரன், மத்திய சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் துணை தலைவர் சீனிவாச மூர்த்தி, வடசென்னை மாவட்ட முன்னாள் பொது செயலாளர் டி.பி.பாஸ்கரன் ஆகிய 7 பேரையும் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசர் நீக்குவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில் நீக்கப்பட்ட 7 பேரும் இன்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறி இருப்பதாவது:-

    சத்தியமூர்த்திபவனில் நடந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து மூத்த தலைவர்களும் கலந்து கொண்டார்கள். மாவட்டத் தலைவர்கள் அல்லாத சிலரும் இந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இதைப் பார்த்து அனைவரையும் அனுமதிப்பதாகக் கருதி நாங்களும் கூட்ட அரங்கிற்குள் சென்றோம். எங்களைப் பார்த்த உடன் வேண்டுமென்றே வெளியேறும்படி சத்தம் போட்டார்கள்.

    பாரதிய ஜனதா, அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களெல்லாம் அரங்கின் உள்ளே இருக்கும்பொழுது காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் ஏன் உள்ளே வரக் கூடாது எனக் கேட்டுவிட்டு வெளியேறிவிட்டோம்.

    வெளியேறிய எங்களை கட்சிக்கே சம்பந்தம் இல்லாத திருநாவுக்கரசரின் கார் ஓட்டுநர் தகாத வார்த்தைகளை பேசி சட்டையை பிடித்து இழுத்து அடித்தார். உடனே அங்கே வந்த திருநாவுக்கரசர் எங்களைப் பார்த்து கடும் சொற்களால் மிரட்டினார்.

    அப்போது பாரதிய ஜனதாவிலிருந்து வந்த வீரபாண்டியன் என்பவர் எங்களை தாக்கினார். இதைக் கேள்விப்பட்டு அரங்கில் உள்ளிருந்து வெளியே வந்த இளங்கோவன் எங்களை அமைதியாக செல்லும்படி அறிவுறுத்தினார். நாங்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டோம்.

    ஆனால் எந்த விசாரணையும் செய்யாமல், எந்தவித விளக்கமும் எங்களிடம் கேட்காமல் எங்களை கட்சியைவிட்டு நிரந்தரமாக நீக்கியுள்ளதாக மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    இந்த நீக்கத்தைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சஞ்சய்தத், சென்னா ரெட்டி ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளோம். ஆகவே, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வந்த திருநாவுக்கரசர் கட்சியை உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை நீக்கியது எந்தவிதத்திலும் செல்லாது. நாங்கள் எப்போதும் போல காங்கிரஸ்காரர்களாவே தொடர்ந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
    பொய்யான தகவல் பரப்புவதற்கு பதில் கட்சி கேட்டுக் கொண்டால் நானே தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்று மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் திருநாவுக்கரசர் ஆவேசமாக கூறியுள்ளார். #Thirunavukkarasar
    சென்னை:

    காங்கிரஸ் என்றாலே அடி-தடி, ரகளை, சட்டை கிழிப்பு சகஜம்தான். சமீப காலமாக ஓய்ந்திருந்த அந்த கலாசாரம் சத்திய மூர்த்திபவனில் நேற்று மீண்டும் அரங்கேற்றப்பட்டது.

    தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய்தத், மற்றும் அகில இந்திய செயலாளர் சின்னாரெட்டி ஆகியோர் நேற்று சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர்.

    கட்சியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட தலைவர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை வழங்குவதாக இருந்தது. முதல் நாளான நேற்று மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடந்தது. முதல்நாள் கூட்டமே அடி-தடியில் தொடங்கியது கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    மேலிட பிரதிநிதிகளிடம், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் முன்னிலையில் திருநாவுக்கரசர் தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

     
    கட்சியில் எனக்கு எதிராக சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

    இப்போதும் மேலிட தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளத்தான் வந்திருக்கிறார்கள். ஆனால் என்மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதை விசாரிப்பதற்காகவும் தான் வந்திருக்கிறார்கள் என்று தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

    எனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. கட்சி மேலிடம் எனக்கு தலைவர் பதவியை தந்துள்ளது. அவர்கள் சொல்லும் பணியை நான் செய்து வருகிறேன்.

    ஆனால் கட்சியில் சில தலைவர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை. என்னை மாற்றப் போவதாகவும் தகவல் பரப்புகிறார்கள். கட்சி கேட்டுக் கொண்டால் நானே தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயாராகத்தான் இருக்கிறேன்.

    நாளையே நான் மாற்றப்படலாம். வேறு ஒருவர் தலைவராக வரலாம். அப்போது நானும் எனது ஆதரவாளர்களும் புதிய தலைமைக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் நிலைமை என்னவாகும்?

    எனக்கும் கோஷ்டி அரசியல் செய்ய தெரியும். ஆனால் நான் அவ்வாறு செய்வதில்லை.

    நான் தி.மு.க. கூட்டணியை விரும்பவில்லை என்றும், ரஜினி மற்றும் அ.தி.மு.க.வுடன் பேசி வருவதாகவும் தகவல் பரப்புகிறார்கள். தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என நான் எப்போதுமே கூறியதில்லை. அப்படி நினைப்பதற்கு நான் என்ன முட்டாளா?

    ஸ்டாலின் தலைவரான பிறகும், வாழ்த்து சொன்னேன். பொதுக் கூட்டத்தில் அவர்தான் முதல்-அமைச்சர் என்றும் பேசினேன். இதைவிட நான் வேறு என்ன செய்யமுடியும்?

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று நான் பேசித்தான் ஆக வேண்டும். அதில் என்ன தவறு இருக்கிறது.

    நான் எதையும் கண்டுகொள்ளாமல் செல்கிறேன். ராகுலை பிரதமர் ஆக்குவதே நமது கடமை. காமராஜர் ஆட்சி பற்றி பேசினால் கூட்டணி பறிபோய்விடும் என்கிறார்கள். அதையெல்லாம் ராகுல் பார்த்து கொள்வார். தேர்தல் நேரத்தில் அது நடக்கும்.

    நான் முதல்வர் ஆக வெல்லாம் விரும்பவில்லை. என்னை மக்கள் முதல்வர் ஆக்கினாலும் நீங்கள் விட மாட்டீர்கள். தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. கனவில்கூட அப்படி நினைக்கமாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கிடையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் கூறும்போது,

    ‘‘பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால், காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை. எனவே கட்சிக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்’’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சஞ்சய்தத் இன்று காங்கிரசின் பல்வேறு அணி தலைவர்களை சந்திப்பதாக இருந்தது. அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருநாவுக்கரசர் டெல்லி சென்றுவிட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #Congress #Thirunavukkarasar
    காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு 7 பேர் இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #Thirunavukkarasar
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, அழைப்பாளர்களாக இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட முரளிதரன், சீனிவாசமூர்த்தி ஆகியவர்களோடு சேர்ந்துகொண்டு கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தும், சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையிலும், இன்றைய கூட்டத்தின் நடவடிக்கைகளை சீர்குலைக்கின்ற வகையிலும் செயல்பட்ட காரணத்தினால் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட விதிகளுக்குட்பட்டு இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுகிறார்கள். நீக்கப்பட்டவர்களின் பெயர் வருமாறு:-

    முரளிதரன், சீனிவாசமூர்த்தி, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏ.வி.எம்.ஷெரிப், பொன் மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர்.

    இவர்களோடு கட்சிக்காரர்கள் கட்சி சம்பந்தமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Thirunavukkarasar
    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று மாநில தலைவர் திருநாவுக்கரசர் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. #Congress #Thirunavukkarasar #EVKSElangovan
    சென்னை:

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது.



    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கிய இந்த  கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர்கள் சென்னா ரெட்டி, சஞ்சய்தத் ஆகியோர் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம், மாவட்ட வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதற்கிடையில், பிற்பகல் சுமார் 2 மணியளவில் அங்கு திரண்டிருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்கள் தங்களையும் மேடையில் பேச அனுமதிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். இதற்கு திருநாவுக்கரசு ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால், இருதரப்பினரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பு உருவாகும் சூழல் நிலவியதால் மேடையில் இருந்து இறங்கிவந்த திருநாவுக்கரசர் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார்.

    காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த மோதல் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Congress #Thirunavukkarasar #EVKSElangovan #SathyamurthyBhavan
    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Thirunavukkarasar #congress

    சென்னை:

    சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர்கள் சென்னா ரெட்டி, சஞ்சய்தத் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல், மாவட்ட வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, ரபேல் போர் விமான விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியை வளர்க்க மேலும் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். பூத் கமிட்டிகளை அமைப்பதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்த விமானத்தில் மாணவி சோபியா பா.ஜனதாவுக்கு எதிராக கோ‌ஷமிட்டதால் அவர் மீது போலீசில் புகார் கொடுத்து கைது செய்து இருக்கிறார்கள். இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாகத்தை மதிக்காத இந்த போக்கு ஏற்கத்தக்கது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராமசாமி, விஜயதரணி, நிர்வாகிகள் நாசே ராமச்சந்திரன், ரூபி மனோகரன், நாசே ராஜேஷ், சிரஞ்சீவி, ரங்கபாஷ்யம், மணிபால், திருவான்மியூர் மனோகர், திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    த.மா.கா.வை காங்கிரசில் இணைப்பது தொடர்பாக அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன்தான் முடிவு செய்ய வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறினார். #thirunavukkarasar

    திருச்சி:

    திருச்சியில் இன்று மாநகர், வடக்கு , தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாசலம் மன்றத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    தமிழக காங்கிரசில் எந்த கோஷ்டியும் இல்லை. ஒரே ஒரு கோஷ்டிதான் அது ராகுல்காந்தி கோஷ்டிதான். தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து இருப்பதால் தேர்தல் சீட்டுகளை கேட்டு பெறுவதில் பிரச்சினை ஏதும் ஏற்படாது. தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் தொகுதி பங்கீடு குறித்து சுமூக முறையில் பேசி முடிவு செய்யப்படும்.

    திருச்சி தொகுதியில் நான் போட்டியிடுவேனா? என்பது குறித்து தலைவர்தான் முடிவு செய்வார். அது மட்டுமல்ல யார் யாருக்கு எந்த தொகுதி என்பதை ராகுல்காந்திதான் முடிவு செய்வார். அதனை தமிழக காங்கிரஸ் தலைவர் அறிவிக்க முடியாது.

    காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. த.மா.கா.வை காங்கிரசில் இணைப்பது தொடர்பாக அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன்தான் முடிவு செய்ய வேண்டும். குட்கா ஊழலில் ஆதாரம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் விஜயபாஸ்கரை பணி நீக்கம் செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #thirunavukkarasar 

    கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்காதது பா.ஜனதாவுக்குத்தான் இழப்பே தவிர தி.மு.க.வுக்கு இல்லை என்று திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin #BJP
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மறைந்த கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்து கொள்ளாதது குறித்து பா.ஜனதாவிடம் தான் கேட்க வேண்டும். அவர் கலந்து கொள்ளாதது பா.ஜனதாவுக்குத்தான் இழப்பே தவிர தி.மு.க.வுக்கு இல்லை.

    பா.ஜனதா தலைவர்கள் வருகைக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி நன்றாகத்தான் உள்ளது.

    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று தனது முதல் உரையிலேயே மத்திய அரசின் காவி மயமாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.


    இதிலேயே பா.ஜனதாவுடன் ஸ்டாலின் எப்படி இருக்கிறார் என்பது தெரியவில்லையா? தி.மு.க.வின் நிலை, பா.ஜனதாவின் காவிமயமாக்குதலை அகற்ற வேண்டும், மோடியை அகற்ற வேண்டும், இங்குள்ள ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதை காங்கிரஸ் சார்பில் நான் வரவேற்கிறேன். பெரியார், அண்ணாவின் வழியில் ஸ்டாலின் வருகிறார்.

    தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இருக்கிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அவர்கள் பதவி ரத்தானாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி அ.தி.மு.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது, ஆட்சி கவிழும்.

    ஏப்ரல், மே மாதத்தில் வரவேண்டிய நாடாளுமன்ற தேர்தல் முன் கூட்டியே டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் வர வாய்ப்பு உள்ளது. அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒன்றாக வைக்க முடியாது, இது சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar #MKStalin #BJP
    ஏழை, எளிய மக்களை பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். #Congress #Thirunavukkarasar #Petrol #Diesel
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த போது அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி, அரசு கஜானாவை நிரப்புவதில் தான் அக்கறை காட்டப்பட்டது.

    தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை சிறுக சிறுக உயர்த்தப்பட்டு ரூபாய் 73.69 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.81.22 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய விலை உயர்வு சாதாரண ஏழை-எளிய மக்களை கடுமையாக பாதிக்கக் கூடியதாகும்.

    பா.ஜ.க. ஆட்சியில் கலால் வரி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூபாய் 13.47 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.11.77 ஆகவும், நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை உயர்த்தப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் 10 லட்சம் கோடி பா.ஜ.க. அரசு வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.

    இத்தகைய வரிவிதிப்பின் காரணமாகவே பெரும் சுமையை மக்கள் ஏற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெற வேண்டும். இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை உடனடியாக பா.ஜ.க. அரசு நிறுத்தவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Congress #Thirunavukkarasar #Petrol #Diesel
    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அப்படிப்பட்டவரை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #DMK #Thirunavukkarasar
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று அவர் கூடுதலாக சில பகுதிகளுக்கு செல்வதால் அவர் கோவை வருவதில் தாமதம் ஆகி இருக்கிறது என்றார்.

    கேள்வி-எத்தனை கட்சிகள் கூட்டணி வைத்தாலும் பா.ஜனதாவை வீழ்த்த முடியாது என மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே?

    பதில்- பொன்.ராதாகிருஷ்ணன் அப்படித்தான் சொல்லி ஆக வேண்டும். தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் பா.ஜனதா இப்போதும் வீழ்ந்து தான் கிடக்கிறது. அதை வீழ்த்தவேண்டிய அவசியம் இல்லை.

    கேள்வி- மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தகுதி கிடையாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறாரே?

    பதில்- தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக பதவிகளில் இருந்து உயர்ந்தவர். அனுபவம் மிக்கவர். அப்படிப்பட்டவரை அமைச்சராக இருக்கும் தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சிப்பது, தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்துக்குரியது.

    கேள்வி-நீங்கள் பா.ஜனதாவுக்கு சென்றால் காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

    பதில்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் யோசனைகளுக்கு நன்றி. அவர், அவரது எதிர்காலத்தை பற்றி முடிவு செய்யட்டும். அவர் இது போன்று பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    கேள்வி-அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசல் பற்றி என்ன கருதுகிறீர்கள்.

    பதில்- ஜெயலலிதா மறைவுக்கு பின் அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டு உடைந்து இருக்கிறது. மதுசூதனனுக்கும், அமைச்சர் ஜெயகுமாருக்கும் இடைப்பட்ட பிரச்சினையை பஞ்சாயத்து செய்யும் நிலையில் முதல்-அமைச்சர் இருக்கிறார். ஒரே தலைமை இல்லாமல் இரட்டை குதிரையில் அ.தி.மு.க. சவாரி செய்வதால் கட்சியும், ஆட்சியும் சரியில்லாமல் இருக்கிறது. அ.தி.மு.க. போய் சேரவேண்டிய இடம், போய் சேராது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #Thirunavukkarasar
    திருநாவுக்கரசர் பா.ஜ.க.வுக்கு சென்றால் காங்கிரசுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று திருச்சியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார். #elangovan #thirunavukkarasar #bjp

    திருச்சி:

    திருச்சி சமயபுரத்தில் இன்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2,3 நாட்களுக்கு முன்பு வெளிவந்த தமிழ் வார பத்திரிக்கை ஒன்றில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இன்னும் இருக்கிற திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சியை பற்றியும், வாஜ்பாய் பற்றியும் சிறப்பாக பேசியிருந்தார். வாஜ்பாய் எவ்வளவு உயர்ந்த மனிதர், பி.ஜே.பி எவ்வளவு உயர்ந்த கட்சி என்று மிக சிறப்பாக பேசியிருந்தார். அதை படித்த பின்னர் தான் எனக்கே வாஜ்பாய் பற்றி அதிகம் தெரியவந்தது. இவ்வளவு நல்லவரான வாஜ்பாயை விட்டு திருநாவுக்கரசர் வெளியே வந்தது தவறு. மீண்டும் அவர் வாஜ்பாய் இருந்த பா.ஜ.க. கட்சிக்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு நல்ல கட்சியை விட்டு ஏன் வந்தார் என்பது தெரியவில்லை. இன்னும் கூட காலதாமதம் ஆக வில்லை. மீண்டும் அவர் அக்கட்சிக்கு சென்றால் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.


    எனக்கு பாலம் உடைகிறது, தகர்க்கப்படுகிறது என்பதை பற்றி ஒரு சந்தேகம் உள்ளது. புதிய பாலம் கட்டி கமி‌ஷன் பார்ப்பதற்காக ஆளும் கட்சி அமைச்சர்களே இதனை செய்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுகிறது. இப்போது தான் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை ஆரம்பித்து உள்ளது.

    வாய்க்கால்கள் தூர்வாரப் படாததால் இன்னும் கடைமடைக்கு தண்ணீர் செல்லாமல் உள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். #elangovan #thirunavukkarasar #bjp

    மறைந்த தலைவர் கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். #DMK #Congress #Amitshah #Thirunavukkarasar
    சென்னை:

    கேரளாவில் பெய்த மழை, வெள்ளத்தால் அம்மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து கேரள மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி, நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் 4 லாரிகளில் அரிசி, உணவு பொருட்கள் போன்ற ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    நிவாரண பொருட்கள் ஏற்றிய லாரிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி இந்தியா முழுவதும் இருந்து காங்கிரஸ் சார்பில் அனுப்பப்படுகிறது.

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. காங். எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளமாக ரூ.10 லட்சம், முன்னாள் எம்.பி., எம்.எல். ஏ.க்கள் சார்பில் ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

    தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சென்னையில் இருந்து 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுபோல் கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

    முக்கொம்பு அணையில் 8 மதகுகள் உடைந்து இருக்கின்றன. 150 ஆண்டுகள் பழமையான இந்த அணை முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்துள்ளது. இவை தவிர தமிழ்நாட்டில் உள்ள மற்ற அணைகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    எனவே நிபுணர் குழுக்களை அமைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வளவு வெள்ளம் வந்தும் டெல்டா மாவட்டத்தில் உள்ள கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. கால்வாய்களை சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை.


    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இரங்கல் கூட்டத்துக்கு தி.மு.க. சார்பில் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர் இந்த கூட்டத்துக்கு வருவதால் தி.மு.க.-காங்கிரஸ் உறவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

    கேரளா வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். அதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சிரஞ்சீவி, திரவியம், பி.வி. தமிழ்செல்வன், முன்னாள் எம்.பி. ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK #Congress #Amitshah #Thirunavukkarasar
    ×