search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னாபிஷேகம்"

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    திருவண்ணாமலையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இதனை முன்னிட்டு கடந்த 27-ந் தேதி முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலசாபிஷேகம் நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான நேற்று காலை 4-ம் கால யாக பூஜைகள் அம்மன் சன்னதி கொடி மரம் முன்பு நடந்தது.

    இதையடுத்து 1,008 கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டு, கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அருணாசலேஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.
    திருவாரூரில் உள்ள பதஞ்சலி மனோகர் ஆலயத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் மகாளய அமாவாசை அன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதோடு, பித்ரு தர்ப்பணமும் செய்கின்றனர்.
    திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தொலைவில் விளமல் என்ற ஊர் இருக்கிறது. இங்கு பதஞ்சலி மனோகர் ஆலயம் உள்ளது. இத்தலத்தில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் மகாளய அமாவாசை அன்று, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதோடு, பித்ரு தர்ப்பணமும் செய்கின்றனர். பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி பவுர்ணமி தினத்தில்தான் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    பித்ருக்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள், அமாவாசை தினத்தில், திருவாரூர் கமலாலய தீர்த்தத்தில் (தெப்பக்குளம்) உள்ள பிதுர் கட்டத்திலும், விளமல் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்திலும் நீராடுகின்றனர். பின், பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சி யடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பார்கள் என்பது நம்பிக்கை.
    ஒரு ஆலயத்தின் மகிமையும், சிறப்பும் அதன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. அத்தகைய பேறு பெற்ற தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஆகும்.
    ஒரு ஆலயத்தின் மகிமையும், சிறப்பும் அதன் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றையும் கொண்டுதான் தீர்மானிக்கப்படுகிறது. இந்த மூன்றும் ஒரே தலத்தில் ஒருங்கிணைந்து சிறப்பாக இருப்பது என்பது மிக மிக அரிது. அத்தகைய பேறு பெற்ற தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஆகும். இங்கு மூர்த்திக்கு நிகரான சிறப்பு தீர்த்தங்களுக்கும் இருக்கிறது.

    திருவண்ணாமலையில் கிரிவல பாதையிலும், மலையின் பல்வேறு பகுதிகளிலும் 300-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் இருப்பதாக அருணாசல புராணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆதிகாலத்தில் நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், முனிவர்கள், ரிஷிகள், மகான்கள், மன்னர்கள் தங்களது தோஷங்களையும், பாவங்களையும் நீக்கிக் கொள்ள தனித்தனி தீர்த்தங்களை உருவாக்கி அதில் தினமும் நீராடி அண்ணாமலையாரை வழிபட்டு பலன்களை பெற்று உள்ளனர்.

    இத்தகைய சிறப்புடைய தீர்த்தங்களில் நீராடினால் நமது தோஷங்களை நீக்கி பலன் பெற முடியும் என்பது ஐதீகமாகும். இதில் பக்தர்களுக்கு உதவும் வகையில் அண்ணாமலையாரும் புனித குளங்கள் மற்றும் நதிகளில் நீராடி அருள்பாலிப்பது காலம் காலமாக வழக்கத்தில் உள்ளது. இறைவனின் நீராடலே தீர்த்தவாரி என்று அழைக்கப்படுகிறது. கோவில் குளங்கள், ஆறுகளில் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை ஆலயத்தில் நடத்தப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் தமிழ் நாட்டில் எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பை பெற்றுள்ளன.

    பொதுவாக ஆலயங்களில் உற்சவ விழாக்கள் நடக்கும்போது பத்தாவது நாளன்று உற்ச வரை புனித நீராட செய்வார்கள். இந்த தீர்த்தவாரி பெரும்பாலான ஆலயங்களில் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைதான் நடைபெறும். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் ஆண்டுக்கு 7 உற்சவம் நடைபெறுவதால் அந்த 7 தடவையும் குளத்தில் அண்ணாமலையார் தீர்த்தவாரி மேற்கொள்கிறார்.

    ஆடிப்பூரம் உற்சவத்தின்போது சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடைபெறும். கார்த்திகை தீப திருவிழா வின்போது பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடத்துவார்கள். இதுதவிர சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நாட்களிலும் அண்ணாமலையார் ஆலயத்து உற்சவரான சந்திரசேகரர் பிரம்ம தீர்த்தத்தில் நீராடுவார். தைப் பூச விழாவின்போது அவர் கிரிவல பாதையில் உள்ள ஈசானிய தீர்த்தத்திற்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வார்.

    திருவண்ணாமலை ஆலயம் அருகே உள்ள அய்யங் குளம், தாமரை குளம் ஆகியவற்றிலும் தீர்த்தவாரி நடத்தப்படுவது உண்டு. கோவில் குளங்களில் நடத்தப்படும் இந்த தீர்த்தவாரிகள் தவிர சந்திரசேகரர் திருவண்ணாமலை அருகே உள்ள ஆறு களில் நடக்கும் தீர்த்தவாரிகளிலும் பங்கேற்கிறார். கலசப்பாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆறு, பள்ளிகொண்டாபட்டு கிராமத் தில் உள்ள கவுதம ஆறு ஆகிய ஆறு களில் நடக்கும் தீர்த்தவாரிகளிலும் அருணாச லேஸ்வரர் கலந்து கொள்கிறார்.

    இந்த தீர்த்தவாரிகளில் மணலூர் பேட்டையில் நடக்கும் தீர்த்தவாரி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் பொங்கல் பண்டிகையின் நிறைவாக ஆற்று திருவிழா நடத்துவார்கள். தென்பெண்ணை ஆறு தட்சிணாபினாகினி என போற்றப்படுகிறது. இந்த புண்ணிய நதியில் தை மாதம் முதல் நாளில் இருந்து 5-ந்தேதி வரை 5 நாட்களுக்கு இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளும் கலப்பதாக ஐதீகம். அதாவது மற்ற நதிகள் அனைத்தும் தங்களது பாவங்களை போக்கி கொள்ள தை மாதம் முதல் 5 நாட்கள் தென்பெண்ணை ஆற்றில் சேருகிறது என்று சொல்கிறார்கள். அந்த சமயத்தில் தென் பெண்ணை ஆற்றில் புனித நீராடினால் பல் வேறு பலன்களை பெற முடியும்.

    இதை கருத்தில் கொண்டே பக்தர்களுக்கு அருள் பாலிக்க திரு வண்ணாமலையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணலூர்பேட்டையில் உள்ள தென் பெண்ணை ஆற்றுக்கு அண்ணாமலையார் செல்கிறார். அவர் வருவதால் சப்தநதிகளும் அவரை தரிசிக்க வருகின்றன என்பது மரபாக உள்ளது. அண்ணாமலையார் புனித நீராடும்போது தாங்களும் நீராடினால் தங்களுடைய பாவங்களை, தோஷங்களை நிவர்த்தி செய்துக் கொள்ள முடியும் என்பது பக்தர்களிடம் நம்பிக்கையாக உள்ளது.

    பொதுவாக ஆறுகளின் எல்லையை சுவாமி கடப்பது இல்லை. அதற்கேற்ப அண்ணாமலையார் பல்வேறு கிராமங்கள் வழியாக மணலூர்பேட்டை செல்வார். அப்போது பக்தர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் திரண்டு நின்று மண்டகபடி நடத்தி அண்ணாமலையாரை வழிபடுவார்கள். அண்ணாமலையார் தங்களது வீட்டுக்கே வந்து விட்டது போன்ற உணர்வுடன் கிராம மக்கள் இந்த மண்டகபடியை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

    தென்பெண்ணை ஆற்றுக்கு சென்ற பிறகு சந்திரசேகரர் தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அப்போது நமச்சிவாய மந்திரங்களை பக்தர்கள் முழங்குவார்கள். இதையடுத்து சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். ஒரே இடத்தில் பல்வேறு ஆலயங்களின் சுவாமிகள் ஒன்றாக இருப்பது கோலாகலமாக இருக்கும். இந்த விழாவில்தான் அண்ணாமலையாரின் பிரதியான சந்திர சேகரர் கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு இந்த தீர்த்தவாரி விழா வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மாலை வரை அண்ணாமலையார் அங்கிருந்து அருள்பாலிப்பார்.

    அடுத்து வருகிற 21-ந்தேதி (திங்கட் கிழமை) தைப்பூசம் தினத்தன்று சந்திர சேகரர் கிரிவல பாதையில் உள்ள ஈசானிய குளத்துக்கு சென்று தீர்த்தவாரியில் கலந்து கொள்வார். அன்று அதிகாலை ஆலயத்தின் அபிஷேகம் முடிந்ததும் மேளதாளத்துடன் அண்ணாமலையாரை ஈசானிய குளத்துக்கு அழைத்து செல் வார்கள். அங்கு தீர்த்தவாரி நடைபெறும். அருணாசலேஸ்வரர் சூலத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அன்று மாலைவரை அண்ணாமலையார் அந்த தீர்த்த கரையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அதன்பிறகு ஆலயத்துக்கு அண்ணாமலையார் புறப்பட்டு வருவார். அறிவொளி பூங்கா அருகே வரும்போது பணியாளர் ஒருவர் வந்து வல்லாள மகாராஜா இறந்து விட்டார் என்ற தகவலை தெரிவிப்பார். இதனால் வேதனை கொள்ளும் அண்ணாமலையார் மேளதாளம் இல்லாமல் ஆலயத்துக்கு திரும்புவார். இது வல்லாள மகாராஜா மீது அண்ணா மலை யார் கொண்டுள்ள பாசத்தை வெளிப் படுத்துவதாக இருக்கும்.

    கோவில் வரலாற்றுபடி திருவண்ணாமலையை ஆண்டு வந்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை இல்லாததால் அண்ணாமலையாரே அவருக்கு குழந்தையாக இருந்து வந்தார். ஒரு தடவை போர்களத்தில் வல்லாள மகாராஜா நயவஞ்சகமாக கொல்லப்பட்டதும் அண்ணாமலையாரே அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததாக குறிப்புகள் உள்ளன. இதை பிரதிபலிக்கும் வகையில்தான் ஈசானிய தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு திரும்பும் போது அண்ணாமலையாரிடம் வல்லாள மகாராஜா மரண செய்தி தெரிவிக்கப்படுகிறது. அதை கேட்டதும் மேளதாளம் இல்லாமல் அண்ணாமலையார் ஆலயம் திரும்புகிறார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திரு வண்ணாமலையில் நடத்தப்பட்டு வருகிறது.

    தை மாதம் ரதசப்தமி தினத்தன்று அண்ணாமலையார் கலசப்பாக்கம் செய்யாற்றுக்கு சென்று தீர்த்தவாரி மேற்கொள்வதும் தனித்துவம் வாய்ந்தது. கலசப்பாக்கத்தில் திருமா முடீஸ்வரரர் ஆலயம் உள்ளது. அங்கு இறைவனின் முடி இருப்பதாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் ஓடும் செய்யாற்றில் ஒரு தடவை கலசம் ஒன்று மிதந்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த கலசத்தை இறைவனே அனுப்பி வைத்ததாக அப்பகுதி மக்கள் நினைத்தனர். இதையடுத்து அந்த கலசத்தை எடுத்து மக்கள் பூஜித்து வருகிறார்கள். இதனால்தான் அந்த ஊர் கலசப்பாக்கம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்த பகுதி செய்யாற்றுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. இந்த ஆறுக்கு சேயாறு என்ற பெயரும் உண்டு. இது முருகப்பெருமான் உருவாக்கிய ஆறு ஆகும். ஈசனுக்கு சேயாக அதாவது மகனாக முருகப்பெருமான் உள்ளதால் அவருக்கு உருவாக்கிய ஆறு சேயாறு என்று அழைக்கப்படுகிறது. அவர் ஏன் இந்த ஆற்றை உருவாக்கினார் என்பதற்கும் வரலாறு உள்ளது. ஈசனின் சாபத்துக்கு உள்ளான பார்வதி பூமிக்கு வந்து தவம் இருந்தார். பிறகு அவர் ஈசனிடம் இடப்பாகம் பெறுவதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நடந்து சென்றார்.

    வழியில் அவருக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. இதை அறிந்த முருகப்பெருமான் தனது வேலாயுதத்தால் பூமியை கிழிக்க ஆறு உருவானது. அம்பாள் அதில் நீர் அருந்தி தாகத்தை தணித்தார். அந்த ஆறுதான் சேயாறு. பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவூடல் நடந்து அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மனும் ஊடல் துறந்து மகிழ்ச்சி பொங்க இந்த செய்யாற்றுக்கு வந்து தீர்த்தம் ஆடுவதாக சொல்கிறார்கள்.

    செய்யாற்றுக்கு செல்லும்போது ஆற்றை கடக்கக்கூடாது என்ற ஐதீகம் இருப்பதால் மேட்டுப்பாளையம் கிராமம் வழியாக சுவாமி புறப்பாடு நடைபெறும். வழிநெடுக மக்கள் மண்டகப்படி நடத்தி அண்ணாமலையாரை வழிபடுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சிறப்புமிக்க இந்த தீர்த்தவாரி திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 11-ந்தேதி நடைபெற உள்ளது.

    அதுபோல அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறும் பள்ளிக்கொண்டா பட்டு தீர்த்த வாரியும் சிறப்பு வாய்ந்தது. மாசிமகம் தினத்தன்று நடைபெறும் பள்ளிக்கொண்டா பட்டு தீர்த்தவாரிக்காக அண்ணாமலையார் கவுதம நதிக்கு புறப்பட்டு செல்வார். கவுதம நதியில் புனித நீராடிய பிறகு அங்கு அவர் தனது தந்தையாக ஏற்றுக் கொண்ட வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுப்பார். தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இல்லாத சிறப்பு இதுவாகும்.

    அண்ணாமலையாரே தனது பக்தனுக்காக திதி கொடுப்பதால் இந்த தீர்த்தவாரி அதிக பலன் கொண்டது. இதை கருத்தில் கொண்டு அன்றைய தினம் லட்சக்கணக்கானவர்கள் கவுதம நதிகரையோரம் திரண்டு தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கத்தில் வைத்து உள்ளனர்.

    அண்ணாமலையார் பங்கேற்கும் தீர்த்தவாரிகளில் கலந்து கொண்டால் வினைகள் தீர்ந்து ஈசனின் திருப்பாதத்தை அடைய முடியும் என்பது நம்பிக்கையாகும். மேலும் தீர்த்தவாரிகளில் பங்கேற்கும் பக்தர்களின் ஆன்மா அண்ணாமலையாரின் கருணை பார்வையால் குளிர்ச்சி பெறுவதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தீர்த்தவாரியை தவறவிடாதீர்கள்.
    கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரசோழன் கங்கை நதி வரை போர் நடத்தி வெற்றி பெற்றதற்காக அடையாள சின்னமாக இந்த கோவிலை கலை நயத்துடனும் மிக பிரமாண்டமாகவும் கட்டினார்.

    போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால் விடும் வகையில், சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இந்த கோவிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வியந்து பார்த்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 33 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வருகின்றனர்.அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 22-ந்தேதி கணக்க விநாயகருக்கு அபிஷேகமும், 23-ந்தேதி பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.

    தொடர்ந்து 34-வது ஆண்டாக நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் இருந்து 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ எடை கொண்ட பச்சரிசியை 6 கொதிகலன் நீராவி அடுப்பில் வைத்து சமைத்தனர். பின்னர் சமைத்த சாதத்தை அருகில் ஓலைப்பாயில் ஆற வைத்தனர்.

    பிரகதீஸ்வரருக்கு படைப்பதற்காக சாதம் குவித்து வைக்கப்பட்டு இருந்த காட்சி.

    பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடையில் சாதத்தை சுமந்து பிரகதீஸ்வரர் மூலஸ்தானத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பிரகதீஸ்வரருக்கு சாதம் சாத்தப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பிரகதீஸ்வரருக்கு காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட பூமாலை அணிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் ஓம் சிவாய நம... நமச்சிவாய நம... என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து இருந்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு பிரகதீஸ்வரர் மீது சாத்தப்பட்ட சாதத்தை எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பின்னர் பக்தர்களுக்கு வழங்கிய சாதம் போக மீதம் உள்ள சாதத்தை அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.

    அன்னாபிஷேகத்தில் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் பாரதிராஜா, அன்னதான கமிட்டி பொறுப்பாளர் கோமகன், தொல்லியல் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு 1 டன் பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதேபோல தஞ்சை பெரியகோவிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நேற்று மாலை அன்னாபிஷேகம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களால் 1,000 கிலோ(1 டன்) அரிசியும், 1000 கிலோ காய், கனிகளும் வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடை பெற்றது. அன்னாபிஷேகத்தையொட்டி பெருவுடையாரை தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்த வண்ணம் இருந்தனர். மாலை 4.30 மணிக்கு அன்னாபிஷேகம், மற்றும் காய்கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு நடை திறக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இதேபோல் தஞ்சையில் உள்ள கொங்கனேசுவரர் கோவில், காசி விசுவநாதர்கோவில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அன்னாபிஷேகத்தை விரதம் இருந்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.
    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும்.

    அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.

    தட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் மட்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திருமணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான்.

    இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும்.

    சந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.

    சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    சந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.

    சிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.

    இந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

    அன்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.

    ஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது. 
    அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.
    அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கங்கை கொண்டசோழபுரம். தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் கங்கை வரை படையெடுத்து சென்று வடபுறத்து மன்னர்களை வெற்றிக்கொண்டதன் அடை யாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி அங்கு பிர கதீஸ்வரர் கோவிலை கட்டி னார்.

    இங்கு பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ள 13½ அடி உயர மும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன், ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பு இக்கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. கங்கை கொண்டசோழபுரம் பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ் வரர் கோவிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடத்தப் பட்டு வருகிறது.

    அன்னாபிஷேக தினத் தன்று 100 சிப்பம் மூட் டை கொண்ட 2,500 கிலோ பச்சரிசியைக் கொண்டு கோவில் வளாகத்தில் சமைத்து, பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டு 50 வகையான பழங்கள், வில்வ இலை உட்பட 11 வகை இலைகள், 21 வகை பூக்களால் அலங்க ரித்து. (சந்த்ரோதயா காலத்தில்) மாலை 6 மணியளவில் மகா தீபாராதனை நடந்தப்படும்.



    அதன்படி ஐப்பசி பவுர்ணமியான இன்று கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நேற்று கணக்க விநாயகருக்கு முதல் அபிஷேகம் நடைபெற்றது. கங்கை நீர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்பட 21 வகையான பொருட்களால் இந்த அபி ஷேகம் நடந்தது.

    தொடர்ந்து இன்று காலை முதல் அன்னாபிஷேகத்திற் காக கோவில் வளாகத்தில் சாதம் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனை காணவும், அன்னாபிஷேகத் தில் பங்கேற்கவும் காலை முதலே ஏராளமான பக்தர் கள் பிரகதீஸ்வரர் கோவிலில் குவிந்தனர்.

    ஐப்பசி பவுர்ணமி அன்று சிவ ஸ்தலத்திற்கு சென்று வழிபடுவது (பாவ விமோச னம்) புண்ணியம், அதைவிட சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தப்பட்டு ஒவ்வொரு சாதத்து பருக்கையும் சிவ அம்சம் பெற்று, சிவஸ் வரூப மாக மாறுவதால் அன்று அன்னாபிஷேகத்தை தரி சிப்பது, கைலாயம் சென்று தரிசிப்பதற்கு ஈடானதாகும் என ஐதீகம்.

    கோடி சிவஸ்தலத்திற்கு சென்று தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதால், ஆயி ரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர். தொடர்ந்து இரவு 9 மணியளவில் அன்னாபிஷேக சாதத்தை பக்தர்களுக்கு விநியோகித்துவிட்டு, சகல ஜீவராசிகளுக்கும் சிவ அருள் கிடைக்கவும், ஏரி மற்றும் குளங்களிலும், பூமிக்குள் இருக்கும் உயிரினங்களுக்காக, குழி தோண்டி புதைக்கப்பட்டும், பூமியில் வாழும் மிருகங்கள், பறவைகள், கரையான்கள் உட்பட உயிரினங்களுக்கு வயல் வெளிகளில் மற்றும் திறந்த வெளியில் இரைத்தும் அன் னாபிஷேக சாதம் விநியோ கிக்கப்படும். தொடர்ந்து நாளை பிரகதீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது.

    அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா வருகிற 24-ந் தேதி நடக்கிறது.
    தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வருவார்கள். அவர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

    இக்கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகமும் ஒன்று. உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது. அன்னாபிஷேகம் என்பது வெண்ணெய் கலந்த சாதத்தால் லிங்கரூபமான அருணாசலேஸ்வரருக்கு அலங்காரம் செய்து அன்னத்தை படைப்பார்கள். இந்த விழா வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.

    இந்த விழாவின்போது கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் வழக்கம் போல் அனுமதிக்கப்படும்.

    அன்னாபிஷேகத்தன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. அதன்பிறகு வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.

    அன்னாபிஷேக விழாவையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.

    விடுமுறை நாள் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. வெளிநாட்டு பக்தர்களும் வந்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி நேற்று கோவிலுக்கு திடீரென வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். 
    ×