search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100684"

    தேனியில் உள்ள 2 வணிக நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    தேனியில் முத்துராஜ் என்பவருக்கு சொந்தமான எம்.எம். மளிகை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடியாக இது உள்ளது.

    இதன் சார்பு நிறுவனமாக ஆர்.ஜி. கண்ணா எண்ணெய் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனங்களில் முறையான வருமானவரி தாக்கல் செய்யாமல் இருந்ததாகவும், ஜி.எஸ்.டி. வரி செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரிகள் அந்த 2 நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் உரிமையாளர் வீடு மற்றும் மேலாளர் வீடு, அலுவலகம், உற்பத்தி பொருள் பேக்கிங் செய்யும் பகுதி என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்தது.

    வருமானவரித்துறை சோதனையால் அலுவல கங்கள் மற்றும் வீடுகள் பூட்டப்பட்டது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் தேனியிலும் இந்த சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தேனி அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது34). தேனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது குடும்பத்துடன் தேனியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது பக்கத்து வீட்டு காரர்கள் பாலகிருஷ்ணனின் வீட்டின் கதவு உடைக்கப் பட்டிருப்பதாக அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

    அங்கிருந்த 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி புறநகர் பகுதியில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள் ளையடிக்கும் சம்பங்கள் அதிகரித்து வருகின்றன.

    வியாபாரிகள் போல் நோட்டமிட்டு பூட்டி கிடக்கும் வீடுகளில் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். மேலும் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தேனி அருகே பள்ளியில் நுழைந்து ஆசிரியரை மிரட்டிய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தேனி:

    தேனி அருகே பெரியகுளம் ஏ.வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் செய்முறை தேர்வு நடைபெற்று வருகிறது. இங்கு கண்காணப்பு பணியில் ஆசிரியர் மணிகண்டன் ஈடுபட்டிருந்தார். அப்போது மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    இதனால் இரு பிரிவினராக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் பள்ளியில் புகுந்து மாணவர்கள் கோவிந்தராஜ், சுந்தரேசன் ஆகியோரை தாக்கி உள்ளனர்.

    இதனை ஆசிரியர் மணிகண்டன் தட்டி கேட்டு பள்ளிக்குள் அத்துமீறி நுழைய கூடாது என அவர்களை எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி சென்றுள்ளனர்.

    இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தில் அந்த 2 வாலிபர்கள் ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த ரேவந்த் (வயது23), செங்குளத்துப்பட்டியை சேர்ந்த காசிபாண்டியன் (20) என தெரிய வந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 95 சதவீத பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். #JactoGeo
    திண்டுக்கல்:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வந்தனர்.

    அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பிப்ரவரி 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பங்கேற்கவில்லை.

    திண்டுக்கல்லில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 160 பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களை கைது செய்து போலீசார் தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    நேற்று 80 சதவீத பள்ளிகள் இயங்கிய நிலையில் இன்றும் வழக்கமாக பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 3,497 ஆசிரியர்களில் 2894 பேர் பணிக்கு வந்தனர். 553 ஆசிரியர்கள் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1486 ஆசிரியர்கள் முழுமையாக பணிக்கு திரும்பினர்.

    அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 3567 பேரில் 2847 பேர் பணிக்கு வந்தனர். 484 ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1614 ஆசிரியர்களில் 5 பேர் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதே போல் தேனி மாவட்டத்தில் 6092 ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். ஒரு வாரத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று வகுப்புகளில் பங்கேற்றனர்.  #JactoGeo
    தேனி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் 57 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனி:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

    நேற்று கம்பம் சாலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் நல்லதம்பி தலைமையில் 57 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் தேனி நேரு சிலை அருகே மறியலில் ஈடுபட்ட 1583 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். கம்பம் சாலையில் மறியல் செய்த ஞானதம்பி உள்பட 57 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தேனி:

    தேனி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாகவே பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்தது. பகல் பொழுதில் வெயில் அடித்தபோதும் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்ததால் முதியவர்கள், சிறுவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர்.

    மேலும் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளின் நீர்மட்டமும் குறைந்துகொண்டே வந்தது. இதனால் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் சாரல் மழை பெய்தது. இதனால் குளிரின் தாக்கம் குறைந்து இதமான சீதோசணம் நிலவியது.

    இந்த நிலையில் பெரியகுளம், போடி, தேனி, தேவதானப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை தொடர்ந்தது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் மழை பெய்யும் என எதிர்பார்த்துள்ளனர்.

    தேனி அருகே அழகு நிலையத்தில் பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே பழனிசெட்டி பட்டி பழனியப்பா தெருவை சேர்ந்தவர் அகிலா(வயது22). இவர் அதேபகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி செல்வக்குமாரி என்பவரது அழகுநிலையத்திற்கு சென்றார்.

    அங்கு தனது 5 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு முகஅலங்காரம் செய்து கொண்டிருந்தார். திரும்ப வந்து பார்த்தபோது சங்கிலி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    செல்வக்குமாரியிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அகிலா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்வக்குமாரி தங்கச்சங்கிலியை திருடியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
    திண்டுக்கல்:

    மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இன்றும் நாளையும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டது.

    மத்திய அரசு அலுவலகங்களான பி.எஸ்.என்.எல்., தபால்துறை, ரெயில்வே உள்ளிட்ட அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர். வங்கிகள் செயல்படவில்லை.

    திண்டுக்கல் நகரில் 50-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் அந்த ஆலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் திண்டுக்கல்லில் முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அவர்கள் தெரிவிக்கையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கு இலவச ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்படும் என்றார்.

    ஆனால் தற்போதைய தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இன்சூரன்ஸ் தொகை அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கான மானியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற உள்ளோம் என்றனர்.

    மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றபோதும் ஒருசில அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் மக்கள் பணி பாதிக்கப்பட்டது.

    தேனி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே அல்லிநகரம் ஒண்டி வீரன் நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 29). இவருக்கும் துர்கா தேவி (27) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 32 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டு உள்ளது.

    தற்போது பாலகிருஷ்ணன், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் தூண்டுதலின் படி துர்கா தேவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளார்.

    மேலும் 10 பவுன் நகை வாங்கி வர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டால்தான் திருமணத்தின் போது கொடுத்த நகைகளை திருப்பி தருவேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த துர்காதேவி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் பாலகிருஷ்ணன், அவரது தாயார் மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    தேனி அருகே மின் மோட்டார்கள் மற்றும் வாழைத்தார் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பூதிப்புரம், சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 36). அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று அங்கு இருந்த மின் மோட்டாரை 2 பேர் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் மின் மோட்டாரை திருடியது சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (32), பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்த நிஜந்தன் (26) என தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    சின்னமனூர் ஷேக் மைதீன் தெருவைச் சேர்ந்தவர் ராமையா மனைவி ஜெயபாரதி (60). லட்சுமி நகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கிருந்த மின் மோட்டார் மற்றும் 40 அடி மின் வயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

    இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே முத்துலாபுரம் சின்ன ராமகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் (40). அதே பகுதியில் வாழைத்தோட்டம் வைத்துள்ளார். சம்பவத்தன்று இங்கு புகுந்த மர்ம நபர்கள் 10 வாழைத்தார்களை வெட்டி கடத்திச் சென்றனர்.இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. #NeutrinoProject #SC
    புதுடெல்லி:

    தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ திட்டம் தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறிய தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசின் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சூரியன் மற்றும் நட்சத்திரங்களில் இருந்து வரும் நியூட்ரினோ அணுத்துகள்களை ஆய்வு செய்ய தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொட்டிபுரம் கிராமத்தின் அருகே உள்ள அம்பரப்பர் மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

    ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மீதான மதிப்பீட்டு நிறுவனம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.

    இந்தநிலையில் டாடா நிறுவனம் சமர்ப்பித்த ஒரு மனுவை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வுப்பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது.

    இதை எதிர்த்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதியை பெற்ற பிறகே இந்த திட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று தீர்ப்பு கூறியது.



    தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நியூட்ரினோ திட்டம் தொடர்பாக நிபுணர் குழு, பல்வேறு துறைகளின் நிபுணர்களை கொண்டு பரிசோதனைகள் நடத்துமாறு அளித்த பரிந்துரைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் கருத்தில் கொள்ளாமல் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பல்வேறு அரிய உயிரினங்கள், அரிய தாவரங்கள், மீன்வகைகள், நீர்வாழ் விலங்குகள், பாலூட்டி இனங்கள் பல்கி பெருகிய பகுதி ஆகும்.

    இந்த பகுதியில் இதுபோன்ற திட்டத்துக்கான சோதனைகளை அனுமதிப்பது இயற்கை விதிகளுக்கு முரணானது. இது அப்பகுதியின் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் நடவடிக்கை ஆகும். எனவே நியூட்ரினோ திட்டத்துக்கான மதிப்பீடு செய்வதற்கு அனுமதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. #NeutrinoProject #SC

    தேனி அருகே மண் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி அருகே மண் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் விவசாய தேவைக்காக மண்எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதனை பயன்படுத்தி சிலர் அனுமதியின்றி வேறு தேவைகளுக்கு மண் கடத்தி வருகின்றனர்.

    இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல் காளவாசல் உள்ளிட்டவைகளுக்கு மர்மகும்பல் மண் கடத்தி வருகிறது. போலீசார் இவர்களை பிடித்து அபராதம் விதித்தபோதும் கடத்தலை தடுக்கமுடியவில்லை.

    சப்-இன்ஸபெக்டர் பவுன்ராஜ் தலைமையில் கோம்பை போலீசார் கருவேலம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மேற்குபகுதியில் உள்ள ஓடையில் இருந்து மண் ஏற்றிக்கொண்டு டிராக்டர் வேகமாக வந்தது. அந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது ஓடையில் மணல் திருடியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் தீபன்(28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×