search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 100907"

    கர்நாடகத்தில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. கபினி அணையில் இருந்து இன்று நீர்திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. #KarnatakaDams #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் திறக்கப்பட்டதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 73 அயிரத்து 134 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது. கபினி அணையில் இருந்து நேற்று 27 ஆயிரத்து 83 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று நீர்திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூரை வந்து அடைகிறது. நேற்று ஒகேனக்கல்லுக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து 70 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

    வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கடந்த 5 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி- தருமபுரி மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை முதல் மீண்டும் குடிநீர் விநியோகம் தொடங்கியது.

    நீர்வரத்து குறைந்தாலும் இன்று சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    ஒகேனக்கல் மெயின் அருவியில் தடுப்புகள் கம்பிகள் சேதமடைந்து உள்ளது. அங்கு குப்பை கூளங்களும் அதிக அளவில் தேங்கி உள்ளன. இவற்றை சீரமைத்து தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்ட பிறகுதான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள். #KarnatakaDams #Cauvery

    ஒகேனக்கலுக்கு நேற்று காலை நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 1 லட்சம் கன அடி ஆனது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த ஓரு மாதமாக கொட்டித்தீர்த்த கனமழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து 2 லட்சம் கன அடிக்கும் மேலாக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில மழை சற்று தணிந்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    ஒகேனக்கல்லுக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக 1 லட்சத்து 75 ஆயிரம் முதல் 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது. நேற்று காலை நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 1 லட்சம் கன அடி ஆனது.

    இருந்தாலும் ஒகேனக்கல் ஐந்தருவி, மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இன்று 43-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்ட உள்ளதால் நாளை முதல் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. #Hogenakkal #Cauvery

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் செல்கிறது. #KabiniDam #KRSDam
    மைசூரு:

    கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களாக தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மலைநாடு என அழைக்கப்படும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின.

    முக்கியமாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணையும் கடந்த 2 மாதங்களில் 2 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டது. இதன்காரணமாக, காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 121.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 94,382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 84,060 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,280.13 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 47,529 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 46,667 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.



    இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    இரு அணைகளில் இருந்தும் நேற்று முன்தினம் வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டாலும், காவிரி மற்றும் கபிலா ஆறுகளில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

    இதனால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளம் குறைந்த பின்னர் தான், அவர்கள் கரையோர பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  #KabiniDam #KRSDam
     
    காவிரியில் தடுப்பணை கட்ட ரூ.292 கோடி எடப்பாடி பழனிசாமி அறிவித்தது பழைய திட்டம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss #Cauvery

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட நீர், பாசனக் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததாலும், தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப் படாததாலும், வீணாக கடலில் கலந்திருக்கிறது. இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் கூற முடியாமல் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது அறிவித்துள்ள 62 தடுப்பணைகளைக் கட்டும் திட்டம் புதிதல்ல. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த திட்டத்தை தான் புதிய திட்டமாக அறிவித்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகிறேன்.

    இந்த தடுப்பணைத் திட்டம் அறிவிக்கப்பட்ட காலத்திலேயே செயல் படுத்தப்பட்டிருந்தால் காவிரி பாசன மாவட்டங்களின் கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றிருக்கும். வீணாக கடலில் கலந்த நீரை முழுமையாக தடுத்திருக்க முடியாது என்றாலும், அதிகபட்சமாக 30 டி.எம்.சி நீரை தேக்கி வைத்திருக்க முடியும்.

    அதுமட்டுமின்றி, பாசனக் கால்வாய்கள் மூலம் மேலும் 30 டி.எம்.சி தண்ணீரை காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சேமித்து வைத்திருக்க முடியும்.


    தமிழக அரசின் அலட்சியம் காரணமாக சுமார் 60 டி.எம்.சி தண்ணீர் வீணாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.117 கோடி செலவில் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தத் திட்டத்தின் மதிப்பு இருமடங்காக, அதாவது ரூ. 292 கோடியாக அதிகரித்திருக்கிறது. குறித்த காலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தத் தவறியதற்காக மக்களிடம் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இதற்கெல்லாம் மேலாக இது மிகவும் சாதாரணத் திட்டம். கல்லணைக்கு கீழே ஓடும் காவிரி ஆற்றிலும் அதன் சிறிய கிளை ஆறுகளிலும் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இந்த தடுப்பணைகள் ஒவ்வொன்றிலும் அதிக பட்சமாக அரை டி.எம்.சி தண்ணீரை மட்டுமே சேமித்து வைக்க முடியும். இது போதுமானதல்ல.

    கொள்ளிடம் ஆற்றிலும், முக்கொம்புக்கு முன்னால் உள்ள அகண்ட காவிரியிலும் குறைந்தது 5 டி.எம்.சி கொள்ளளவுள்ள தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். இதற்குத் தனியாகத் திட்டம் வகுத்து செயல்படுத்தினால் தான் காவிரி பாசன மாவட்டங்களை வளமானதாக மாற்ற முடியும்.

    எனவே, இனியும் தாமதிக்காமல் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் 62 தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, பெரிய அளவிலான தடுப்பணைகளைக் கட்டுவதற்கான திட்டத்தையும் விரைவாக வகுத்து செயல்படுத்த வேண்டும்.

    காவிரி மற்றும் அதன் துணை ஆறுகள், பாசனக் கால்வாய்கள், அவற்றுடன் இணைக்கப்பட்ட ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளையும் தூர்வாரி பராமரிப்பதற்கான திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். #EdappadiPalaniswami #Cauveryflood

    ஈரோடு:

    இந்த ஆண்டு பருவமழை தீவிரம் அடைந்ததால் காவிரி ஆற்றில் வரலா காணாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கர்நாடக அணைகளில் திறக்கப்படும் 2 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. அணை நிரம்பியதால் 2 லட்சம் கன அடி காவிரியில் திறந்து விடப்படுகிறது.

    காவிரி வெள்ளத்துடன் பவானி சாகர் அணையில் திறக்கப்படும் 50 ஆயிரம் கன அடி தண்ணீரும், அமராவதி ஆற்றுத் தண்ணீரும் கலப்பதால் 3 லட்சம் கன அடி தண்ணீர் வரை காவிரியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு இரு கரைகளையும் தொட்டுச் செல்லும் காவிரி வெள்ளம் ஊருக்குள் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

    பவானி ஆற்றின் சீற்றத்தால் சத்தியமங்கலத்தில் 300 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. 400 வீடுகளை வெள்ளம் சூழந்தது. வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    இதேபோல் பவானி நகரமும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளானது. சின்னாற்றுப்பாலம், மார்க்கெட் வீதி உள்பட பல்வேறு இடங்களில் 550 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் திருமண மண்டபங்களிலும் பள்ளிகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளிலும் சுமார் 1500 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக இடங்களில் தங்கி உள்ளனர்.

    இதேபோல் காவிரி வெள்ளத்தால் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் 50 வீடுகளிலும் கொடுமுடி, ஊஞ்சலூர் பகுதிகளில் 250 வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.

    காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

    சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் கார் மூலம் ஈரோடு மாவட்டம் பவானி சென்றார்.

     


    அங்குள்ள கல்யாண மண்டப முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

    பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது கால் முட்டு அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. வேட்டியை மடித்தபடி அந்த தண்ணீரில் இறங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

    தொடர்ந்து பவானி- குமாரபாளையம் பழைய காவிரி ஆற்று பாலத்தையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பவானி மார்க்கெட் பகுதியையும் பார்வையிட்டார்.

    பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

    அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மீண்டும் ஈரோடு கருங்கல்பாளையம் வந்த முதல்- அமைச்சர் அங்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார். முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன் கருப்பணன், விஜயபாஸ்கர், தங்கமணி சென்றனர்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு காலிங்கராயன் பயணியர் விடுதியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் வெள்ள சேதம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை முதல் மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மழையினால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

    இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து 75 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதன்பிறகு நிர்வரத்து 1 லட்சத்து 92 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    இன்று காலை முதல் மீண்டும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 2 லட்சத்து 6 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து இருப்பதால் ஒகேனக்கல் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    இன்று 40-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்-வேன், பஸ்களில் ஒகேனக்கல் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். #Hogenakkal #Cauvery

    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. #Cauvery #KRSDam #KabiniDam
    மைசூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. தொடர் கனமழையால் உடுப்பி, குடகு உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்து வரும் பேய் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதனால் ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகள் கடந்த 2 மாதத்தில் 2 முறை முழுகொள்ளளவை எட்டி நிரம்பின. குடகு, வயநாடு மாவட்டங்களில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் ஹாரங்கி, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீரின் அளவு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து நேற்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 530 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 69,583 கனஅடி நீரும் திறக்கப்பட்டது. இந்த நீர் கபிலா ஆற்றில் செல்கிறது. இதனால் கபிலா ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

    கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் காவிரி மூலமாகவும், கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கபிலா மூலமாகவும் திரிவேணி சங்கமம் பகுதியில் சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகத்துக்கு செல்கிறது. நேற்று காலை நிலவரப்படி இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 113 கனஅடி நீர் காவிரியில் சென்றது. நேற்று மாலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 1.18 லட்சம் கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 86 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்து வினாடிக்கு 2.04 லட்சம் கனஅடிநீர் தமிழகத்துக்கு சென்றது.



    குடகு மாவட்டம் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் தீவு போல் காட்சி அளித்து வருகிறது. தொடர் மழையால் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து தடைபட்டுள்ளது.

    மடிகேரி தாலுகாவில் கிராமங்களை ஒட்டிய மலைப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு மரம், பாறாங்கற்கள், மண் ஆகியவை குடியிருப்புகளில் விழுந்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. மக்கந்தூர் பகுதியில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டதால் வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இன்றி பரிதவித்து வரும் 500-க்கும் மேற்பட்ட மக்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்தது. தொடர் மழை, பனிப்பொழிவு, மண்சரிவு காரணமாக அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் பலர் தங்களது குடும்பத்தினரை காணவில்லை என்று கூறினர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குடகுக்கு நேற்று வந்தனர். அவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கார்வாரில் இருந்து கப்பல் படையை சேர்ந்த 70 பேரும், மங்களூருவில் இருந்து கப்பல் படையை சேர்ந்த 80 பேரும் குடகு வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #Cauvery #KRSDam #KabiniDam

    முக்கொம்பு அணையில் இருந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. #Mukkombudam
    திருச்சி:

    கர்நாடகத்தில் தொடரும் கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியாறு மூலம் மேட்டூர் அணைக்கு வந்தடைந்த தண்ணீரால் அடுத்தடுத்து அணை 2 முறை நிரம்பியது.

    இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அகண்ட காவிரி என்று அழைக்கப்படும் காவிரி ஆற்றில் இருகரைகளையும் தண்ணீர் தொட்டு கரைபுரண்டு செல்கிறது.

    தொடர்ந்து அந்த தண்ணீர் நேற்று கரூர் மாவட்டத்தை வந்தடைந்தது. இதனால் ஆற்றில் உள்ள நீரேற்று நிலையங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் 1 லட்சத்து 56 ஆயிரம் கன அடி தண்ணீருடன், பவானி சாகர் அணையில் இருந்து திறக்கப்படும் 50 ஆயிரம் கனஅடி நீர் ஈரோடு அருகே காவிரியில் கலக்கிறது.

    அதேபோல் திருப்பூரில் உள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒன்று சேர்ந்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் கலக்கிறது. இதன்மூலம் மாயனூர் கதவணைக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வரத்து உள்ளது. அங்கிருந்து 2 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட கிளை வாய்க்கால்களிலும் 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    முக்கொம்பு மேலணைக்கு தண்ணீர் வரத்து ஒரு லட்சத்து 97 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதில் காவிரி ஆற்றில் 50 ஆயிரத்து 146 கனஅடியும், கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. கிளை வாய்க்கால்களில் 2 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    திருச்சி காவிரி ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்ற காட்சி

    2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கம்பரசம்பேட்டை தடுப்பணை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கொள்ளிடத்தை பொறுத்தவரை ஒரு லட்சம் கனஅடியை தாண்டி தண்ணீர் செல்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அங்கிருந்து 1 லட்சத்து 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் முழுவதுமாக கடலில் சென்று கலக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு கீழணையில் இருந்த இவ்வளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறையாகும்.  #Mukkombudam
    ஒகேனக்கலுக்கு நீர்வரத்து இன்று காலை 7 மணி நிலவரப்படி 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    மழையினால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), ஹேரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நிரம்பி விட்டன. ஏற்கனவே கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில் இருந்து கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து 2½ லட்சம் கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது. இன்று காலை 6 மணி நிலவரப்படி கபினி அணையில் இருந்து 55 ஆயிரம் கன அடி வீதமும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சத்து 19 ஆயிரத்து 988 கன அடி வீதமும், தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நீர் தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை அடைகிறது.

    ஒகேனக்கலுக்கு நேற்று காலை 9 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடியாக இருந்தது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடியாகவும், மாலை 5 மணிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது.

    இன்று காலை 7 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் இருந்த 10 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதேபோல ஊட்டமலையில் இருந்து ஒகேனக்கல் வரை காவிரி கரையோர பகுதியில் வசித்த மக்கள் ஒகேனக்கல்லில் உள்ள பெரியால் பில்டிங்கில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

    நேற்று மாலை முதல் தங்கி உள்ள 55 பேருக்கு வருவாய் துறை சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து இருப்பதால் ஒகேனக்கல் ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக்காண இன்றும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ்களில் ஒகேனக்கலுக்கு வந்தனர். அவர்களை வனத்துறையினர் மற்றும் போலீசார் மடம் சோதனைச்சாவடி மற்றும் கண்ணாடி குண்டு ஆகிய பகுதிகளில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள்.

    ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளில் தீயணைப்புத்துறையினர், ஊர்காவல் படையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தொடர்ந்து முகாமிட்டு உள்ளனர்.

    5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து உள்ளது. 2005-ம் ஆண்டு வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. 2013-ம் அண்டு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக இருந்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் (2018ல்) 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    கடந்த 1961-ம் ஆண்டு ஒகேனக்கலுக்கு 3 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது தான் அதிகபட்ச அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. #Hogenakkal #Cauvery

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    பென்னாகரம்:

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்). அணைக்கு நீர்வரத்து திடீரென்று அதிகரித்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 23 மதகுகள் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் கரைபுரண்டு ஓடியது.

    இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 1.20 லட்சம் கனஅடியும், கபிணி அணையிலிருந்து 50 லட்சம் கனஅடியும் திறக்கப்படுகிறது.

    சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 830 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கனமழை காரணமாக லிங்கனமக்கி அணை நிரம்பியதால் அதில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால், ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கலுக்கு நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி கரையோரத்தில் இருந்த 6 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்கு குடியிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்

    ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்த ஆண்டுகள் விவரம் வருமாறு:-

    1961- வினாடிக்கு 3 லட்சம் கனஅடி.

    2005-வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி.

    2013-வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி.

    2018-வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி.

    ஒகேனக்கல்லில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் 2 மணிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று இரவு அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    மேட்டூர் அணை உபரிநீர் போக்கியான 16 கண் பாலத்தின் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டதால் உபரிநீர் வெளியேறும் பாதை அருகே அமைந்துள்ள வீடுகளை காவிரி வெள்ளம் சூழ்ந்தது. எனவே காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி பாயும் திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணை, கபிணி அணையிலிருந்து  1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. #Hogenakkal #Cauvery
    கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. #FloodAlert #CauveryRiver
    புதுடெல்லி:

    கர்நாடகா மாநிலத்தில் பெய்யும் அதிகப்படியான மழை காரணமாக தமிழகம் கேட்காமலேயே தண்ணீர் வாரி வழங்கப்படுகிறது. மேலும், தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

    காவிரி ஆற்றில் திறக்கப்படும் அதிகப்படியான நீரின் காரணமாக மேட்டூர் அணை இதுவரை 2 முறை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற அதிகப்படியான நீர் திறக்கப்படும்போதிலும் கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நீரை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரியுள்ளனர். #FloodAlert #CauveryRiver
    காவிரி ஆற்றோரம் படித் துறைகள் மூழ்கியபடி தண்ணீர் சென்றது. இதனை குமாரபாளையம் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக சென்று கண்டு களித்தனர்.

    நாமக்கல்:

    நடந்தாய் வாழி காவேரி என சங்க கால பாடல்கள் காவிரியை புகழ்ந்து எழுதப்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் உருவாகி தமிழகத்தில் பாய்ந்து வளமாக்கி வரும் காவிரி ஆறு குமாரபாளையம், பள்ளி பாளையம் வழியே செல்கிறது.

    கடந்த சில மாதங்களாக வறண்டு காணப்பட்ட காவிரி ஆறு, கர்நாடகத்தில் பெய்த கனமழை காரணமாக கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி ஆற்றோரம் கட்டப்பட்ட படித் துறைகள் மூழ்கியபடி தண்ணீர் சென்றது. குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக காவிரியின் கண்கொள்ளா காட்சியினை கண்டு களித்தனர். இதனால் குமாரபாளையத்திற்கும், பவானிக்கும் இடையேயான பழைய பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், காவிரியில் வெள்ளம் கரைபுரண் டோடும் கண்கொள்ளாக் காட்சியினை கண்டு மிகவும் சந்தோசப்பட்டோம். குறிப்பாக குழந்தைகள் இப்படி காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு குதுகளித்து உள்ளனர்.

    காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்தவுடன் ஆற்று படுகையில் உருவான மணல் திட்டுக்களில் திருட்டுத் தனமாக மணல் திருடுவதை தடுக்கவேண்டும்”.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    பலர் தங்களை காவிரி ஆற்றுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதையொட்டி குமாரபாளையம் காவிரி ஆறு பிக்னிக் ஸ்பாட் ஆக மாறியது.

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆற்றுப் பகுதிகளில் நீரின் அளவு உயர்ந்து கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது.

    காவிரி ஆற்றில் அதிக நீர் வந்து கொண்டிருப்பதால் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம், கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கடந்த 5 நாட்களாக அறிவுறுத்தி வருகிறார். மேலும் கரையோரப் பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றது.

    குமாரபாளையம் இந்திரா நகர், கலைமகள் வீதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் இப்பகுதியில் வசித்த 45 குடும்பங்களை சேர்ந்த 125 பேர் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா நகராட்சி திருமண மண்டபத்திற்கு வருவாய்த்துறையின் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் குமாரபாளையம் இந்திராநகர், மணிமேகலை தெருவில் வசித்து வரும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆண்கள் 15 பெண்கள் மற்றும் குழந்தைகள் சேர்த்து மொத்தம் 33 நபர்கள் பாதுகாப்பாக வெளி யேற்றப்பட்டு புத்தர் வீதியில் செயல்பட்டு வரும் நகராட்சி தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கலெக்டர் ஆசியா மரியம் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப் பட்டுள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார். இந்திராநகர் கலைமகள் வீதி மற்றும் மணிமேகலை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் வீடுகளை பார்வையிட்டார். அப்போது அவருடன் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரன், குமாரபாளையம் வட்டாட்சியர் ரகுநாதன், நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, மற்றும் வருவாய்த் துறை, நகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் ஆசியா மரியம் நிருபர்களிடம் கூறுகையில், காவிரி நீர்வரத்து காரணமாக பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப் படும் என தெரிவித்தார்.

    ×